“தமிழ்நாடு” என்ற பெயர் முதன்முதலில் யாரால் சூட்டப்பட்டது? வரலாற்று விளக்கம் இதோ!
“திமுக ஆட்சியில் தான் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது என்றால், நெய்வேலியில் உள்ள ஒரு பொது மருத்துவமனையின் கல்வெட்டில் 1962 லேயே தமிழ்நாடு என்ற பெயர் எப்படி வந்திருக்கும்” என்று கூறி சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகப் பரவி வருகிறது. உண்மை என்ன?
1950 ஜனவரி 26 அன்று, மெட்ராஸ் மாகாணம், மெட்ராஸ் ஸ்டேட்டாக இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர், 1956 மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மெட்ராஸ் ஸ்டேட் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டு மொழிவாரி மாநிலமாக மறுசீரமைக்கப்பட்டது. பின்னர் இறுதியாக, மெட்ராஸ் ஸ்டேட் ஜனவரி 14, 1969 அன்று தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது.
இந்நிலையில் “திமுக ஆட்சியில் தான் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது என்றால், நெய்வேலியில் உள்ள ஒரு பொது மருத்துவமனையின் கல்வெட்டில் 1962 லேயே தமிழ்நாடு என்ற பெயர் எப்படி வந்திருக்கும்” என்று கூறி சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
திமுக ஆட்சியில் தான் தமிழ்நாடு பெயர் சூட்டியது என்றால் நெய்வேலியில் உள்ள பொது மருத்துவமனை கல்வெட்டில் 1962 லேயே தமிழ்நாடு என்று எப்படி வந்திருக்கும் ?
பொய்யின் மொத்த உருவம் ...... pic.twitter.com/xFUkpDICHZ
ஆனால் இந்த புகைப்படம் எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் “தமிழ்நாடு” என்ற பெயர் முதன்முதலில் யாரால் சூட்டப்பட்டது. இவ்வாறு பெயர் மாற்றம் நடைபெறுவதற்கு யார் முக்கியக் காரணம்? என்பது குறித்த வரலாற்றுத் தகவல்களை இங்கே வரிசையாக காண்போம்.
1962-லேயே 'தமிழ்நாடு' என்ற பெயர் சூட்டப்பட்டுவிட்டதா?
1956 ஜூலை 27 அன்று, விருதுநகரை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி சங்கரலிங்கனார், மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி விருதுநகரில் உண்ணாவிரதத்தை தொடங்கினார். திமுக தலைவர் அறிஞர் அண்ணா உள்ளிட்ட பல தலைவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தும், அவர் 76 நாட்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்ததையடுத்து, இறுதியாக 1956 அக்டோபர் 13 அன்று உயிரிழந்தார். அவருடைய மரணம், மாநிலத்தை 'தமிழ்நாடு' என்று மறுபெயரிட வேண்டும் என்ற கோரிக்கைக்கு புதிய உத்வேகத்தை அளித்தது என்று தான் சொல்ல வேண்டும்.
மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான பல போராட்டங்களுக்குப் பிறகு, அப்போதைய நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம் பிப்ரவரி 24, 1961 அன்று சட்டமன்றத்தில் 'சென்னை ராஜ்ஜியம்' என்பது 'தமிழ்நாடு' என்று குறிப்பிடப்படும் என்று அறிவித்தார். இருப்பினும், இது மாநிலத்திற்குள் மட்டுமே செல்லுபடியாகும். ஒன்றிய அரசு மற்றும் வெளிநாடுகளுக்கான அதிகாரப்பூர்வ கடிதப் போக்குவரத்துகளில், இது “மெட்ராஸ் அரசு (Madras State)” என்று மட்டுமே குறிப்பிடப்படும் என்று அவர் அறிவித்ததாக “The Hindu” வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிகிறது.
மேலும் மாநிலங்களுகிடையேயான தகவல் தொடர்பில் மட்டும் 'தமிழ்நாடு' என்று குறிப்பிடப்படும் இத்தகைய அறிவிப்பை திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்த்ததுடன், மாநிலத்தை 'தமிழ்நாடு' என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறி வலியுறுத்தியுள்ளது.
'தமிழ்நாடு' பெயர் மாற்றத்தில் அண்ணாவின் பங்கு:
தியாகி சங்கரலிங்கனார் மறைவை தொடர்ந்து, 1957 மற்றும் 1963 இல் திமுகவால் தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த தீர்மானம் அப்போதைய சட்டமன்றத்தில் பெரும்பான்மையான கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியால் நிராகரிக்கப்பட்டது. 1961 ஆம் ஆண்டில் சோஷலிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரையும் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அதுவும் தோல்வியையே தழுவியது.
பின்னர் 1963 இல் மாநிலங்களவையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பூபேஷ் குப்தா மாநிலங்கள் பெயர் மாற்றம் குறித்த தனிநபர் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்த போது, அப்போது மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்த அறிஞர் அண்ணாவால் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்கான காரணம் மீண்டும் அழுத்தமாக முன்வைக்கப்பட்டது. அந்த வாதத்தில், ஒரு மாநிலத்தின் தலைநகரம் (மெட்ராஸ்) ஒரு மாநிலத்தின் பெயராக மாற முடியாது என்றும், பண்டைய இலக்கியங்களில் இருந்தே தமிழ்நாடு என்ற பெயர் இருந்துள்ளது என்றும் கூறினார். இருப்பினும் இந்த சட்ட மசோதாவும் தோற்கடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, 1967 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸிடம் இருந்து முதல்முறையாக ஆட்சியை திமுக கைப்பற்றியது. அறிஞர் அண்ணா முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் “தமிழ்நாடு அரசு - தலைமைச் செயலகம்” என்ற புதிய பெயர்ப்பலகை மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1968 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானம் அண்ணா தலைமையிலான திமுக அரசால் கொண்டுவரப்பட்டது.

அதன் பிறகு 1968 நவம்பர் 23 ஆம் நாள் தமிழ்நாடு பெயர் மாற்றம் நாடாளுமன்ற மசோதாவில் நிறைவேறியது. அதைத் தொடர்ந்து 1969 ஜனவரி 14 அன்று சென்னை மாகாணம் "தமிழ்நாடு" என்று இறுதியாக பெயர் சூட்டப்பட்டது.
வரலாற்றில் 'தமிழ்நாடு' என்ற பெயர்:
தமிழ்நாடு என்ற சொல் வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லை, அது சேர, சோழ மற்றும் பாண்டிய அரசுகள் என்றுதான் இருந்தது பின்னர் ஏன் தமிழ்நாடு என்று அழைக்கப்பட வேண்டும் என்ற கேள்வி அண்ணாவின் முன் அப்போதைய காங்கிரஸ் கட்சியினரால் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அறிஞர் அண்ணா, "வடவேங்கடம், தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகத்து" என்று தொல்காப்பியத்திலும், "இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடக்கிய" என்ற இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்திலும் இருப்பதை வரலாற்று சான்றுடன் நிரூபித்தார்.
மேலும் 1921-ல் உயிரிழந்த பாரதியார் எழுதிய பாடல்களிலும் “செந்தமிழ்நாடு” என்ற என்ற சொல் இடம்பெற்றுள்ளதை தெளிவாகக் காண முடிகிறது. எனவே 1921 ஆம் ஆண்டிற்கு முன்பும் தமிழ்நாடு என்ற பெயர் புழக்கத்தில் இருந்துள்ளது.
மேலும் 1938 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் போது, மறைமலை அடிகள் மற்றும் சோமசுந்தர பாரதி உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள், செப்டம்பர் 11, 1938 அன்று மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில், முதன்முறையாக “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கத்தை எழுப்பினர்.
இதே போன்று 1937-ல் ராஜாஜி தலைமையிலான அரசு இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியபோது, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்னும் முழக்கத்தை பெரியாரும் எழுப்பினார். இதைத் தொடர்ந்து சங்கரலிங்கனார் மற்றும் மா.பொ.சி ஆகியோராலும் தமிழ்நாடு என்ற பெயர் முன்மொழியப்பட்டது.
எனவே தமிழ்நாடு என்ற சொல் நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தே தொன்று தொட்டு அழைக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் அரசியலமைப்பின்படி, 1968 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானம் அறிஞர் அண்ணாவால் கொண்டுவரப்பட்டு, பின்னர் இந்த பெயர் மாற்றம் நாடாளுமன்ற மசோதாவிலும் நிறைவேற்றப்பட்ட பின், 1969 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி "தமிழ்நாடு" என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக சூட்டப்பட்டுள்ளது.