இந்தியாவில் கல்விப்புல சுதந்திரத்தின் நிலை! V-Dem அறிக்கை சொல்வதென்ன?
கல்வி நிறுவனங்கள் மிகுந்த அரசியல் தலையீடுகளுக்கு உள்ளாகி வருவதையும், கல்விப்புலத்தில் சுதந்திர சிந்தனை நெரிக்கப்படுவதையும் இந்த அறிக்கை கவனப்படுத்துகிறது.
V-Dem என்ற நிறுவனம் வெளியிட்ட 2025ஆம் ஆண்டிற்கான 'கல்விப்புல சுதந்திர குறியீடு (Academic Freedom Index)' என்ற அறிக்கையில் மொத்தம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 179 நாடுகளில் இந்தியா 156ஆவது இடத்தை பிடித்துள்ளது. 2022ஆம் ஆண்டு குறியீட்டில் 0.38 புள்ளிகள் பெற்றிருந்த இந்தியா, தற்போது 2025ஆம் ஆண்டு 0.16 புள்ளிகள் மட்டுமே பெற்று கீழ்நிலைக்கு சரிந்துள்ளது.

ஆராய்ச்சி செய்வதற்கும் கற்றுக் கொடுப்பதற்குமான சுதந்திரம், கல்விப்புல அறிவை பரப்புவதற்கான சுதந்திரம், கல்வி நிறுவனங்கள் சுயாட்சியாக இயங்க அனுமதிப்பது, கல்வி கற்கும் சூழலில் ஒருமைப்பாடு, பேச்சு சுதந்திரம் ஆகிய அம்சங்கள் ஒவ்வொரு நாடுகளிலும் எந்த அளவிற்கு அமலில் உள்ளது என்பதை கணக்கில் கொண்டு இந்த குறியீடு தயாரிக்கப்படுகிறது.
இந்த வகையில் கடந்த 50 ஆண்டு கால தரவுகளை பகுப்பாய்வு செய்து பார்க்கையில், 'பன்மைத்துவத்தை எதிர்க்கக்கூடிய (anti-pluralist) கட்சிகள் ஆட்சியில் இருக்கும் நாடுகளில் கல்விப்புல சுதந்திரம் நெருக்கடியில் இருப்பதாக' இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவிற்கு கல்விப்புல சுதந்திரத்தில் கணிசமான சரிவை சந்தித்துள்ள 34 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று அறிக்கை குறிப்பிடுகிறது. அதாவது, இந்தியாவில் கல்விப்புல சுதந்திரத்தில் திட்டமிட்ட ஒருமுகப்படுத்தப்பட்ட வகையில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று இந்த அறிக்கையிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது .
'பன்மைத்துவத்திற்கு எதிரான கட்சிகள் ஆட்சியில் இருக்கும் போது, அவை மக்கள் தகவல்களை அறிந்து கொள்வதையும், கருத்துகளை வெளிப்படுத்துவதையும் மட்டும் தடுப்பதோடு, குறிப்பாக கல்விப்புல சுதந்திரத்தை அக்கட்சி ஒடுக்குகிறது' என்று அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. கடந்த 10 ஆண்டு காலமாக ஆட்சியிலிருக்கும் மோடி தலைமையிலான பாஜக, கல்விப்புலத்திலும் அதற்கு வெளியே பொது சமூகத்திலும் சுதந்திரமாக கருத்து தெரிவிப்பதில் குறுக்கீடு செய்து வந்துள்ளதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருக்கிறது.
இதேபோல் 2024ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட SAR அறிக்கையும் இந்தியாவில் கல்விப்புல சுதந்திரம் பற்றிய சித்திரத்தை தருகிறது. Scholars at Risk (SAR) என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ள 665 பல்கலைக்கழகங்களின் வலைப்பின்னலைக் கொண்டு இயங்குவதாகும். இந்த அமைப்பு சர்வதேச நாடுகளில் கல்வி நிறுவனங்கள் எத்தகைய சுதந்திரங்களுடன் செயல்படுகிறது என்பதை கணக்கிட்டு அதனடிப்படையில் அறிக்கை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 'சுதந்திரமாக சிந்தித்தல்' என்ற பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியாவில் கல்விப்புல சிந்தனை என்பது கீழ் நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியாவில் கல்விப்புல சுதந்திரம் 0.6 புள்ளிகளாக இருந்தது, 2023ஆம் ஆண்டு 0.2 புள்ளிகளாக சரிந்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

பல்கலைக்கழகங்கள் மீது அரசியல் கட்டுப்பாட்டை திணிக்க பாஜக முற்படுவதும், தனது இந்து தேசியவாத நிகழ்ச்சி நிரலை திணிக்க முயற்சிப்பதும் தான் மாணவர்கள் மற்றும் கல்வி சார்ந்த அறிஞர்களை அச்சுறுத்தும் முக்கியமான அம்சங்களாகும். மேலும் பல்கலைக்கழக கொள்கைகளை மாற்றியமைத்து மாணவர் போராட்டங்களை ஆளும் பாஜக தடுக்கிறது' என்று SAR அமைப்பின் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோசடிகள் நடந்திருப்பதாக ஆய்வுக் கட்டுரை வெளியிட்ட ஆசோகா பல்கலைக்கழக பேராசிரியர் ‘சப்யசாச்சி தாஸ்’ ராஜினாமா செய்ய ஒன்றிய அரசு அழுத்தம் கொடுத்தது. இங்கிலாந்தை சேர்ந்த பேராசிரியர் ‘நடாஷா கவுல்’, ஆர். எஸ். எஸ் அமைப்பு பற்றி கருத்து சொன்னதற்காக அவர் இந்தியாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் எல்லாம் பாஜக ஆட்சியில் இந்தியாவில் கல்விப்புலத்திலும் சிந்தனை தளத்திலும் சுதந்திரமான சிந்தனை எந்த அளவிற்கு ஒடுக்கப்படுகிறது என்பதைக் காட்டுவதாக இருக்கிறது.
மேலும், ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெற்ற குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக (Anti CAA protest) போராட்டங்களில் கலந்துகொண்ட மாணவர்கள் மீது போலீஸ் வெறித்தனமாக தாக்கியது; டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதிகளில் குண்டர்கள் புகுந்து மாணவர்களை தாக்கியது ஆகியவையெல்லாம் மோடி ஆட்சியில் கல்விப்புலத்தின் மீது நடந்தேறிய ஒடுக்குமுறைகளாகும். கல்விப்புலத்தில் நடந்த இந்த தாக்குதல்களை சர்வதேச ஜனநாயக சக்திகள் கண்டித்தன.
இவையெல்லாம் மோடி ஆட்சியில் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மிகுந்த அரசியல் தலையீடுகளுக்கு உள்ளாகி இருப்பதையும், கல்விப்புலத்தில் சுதந்திர சிந்தனை நெரிக்கப்படுவதையும் எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.