YouTurn

வலதுசாரியத்தை ஆதரிக்கும் ஒருவர் எப்படி ஒட்டுமொத்த முஸ்லீம்களின் பிரதிநிதியாக விஜய்க்கு “ஃபத்வா” கொடுக்க முடியும்? பின்னணி என்ன?

தவெக தலைவர் விஜய் இஃப்தார் நோன்பு திறப்பில் கலந்து கொண்டதையடுத்து, இஸ்லாமியர்கள் இனி இவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவரான சகாபுதீன் ராஸ்வி “ஃபத்வா” கொடுத்திருப்பதாகக் கூறி பெரும்பான்மையான ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளன.

வலதுசாரியத்தை ஆதரிக்கும் ஒருவர் எப்படி ஒட்டுமொத்த முஸ்லீம்களின் பிரதிநிதியாக விஜய்க்கு “ஃபத்வா” கொடுக்க முடியும்?  பின்னணி என்ன?

ரமலான் மாதத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கடந்த மார்ச் 07 அன்று கலந்து கொண்டார். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பல ஜமாத் நிர்வாகிகள், தவெக கட்சி நிர்வாகிகள் உட்பட 2000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. ஒரு நாள் முழுக்க நோன்பிருந்து இஸ்லாமியர்களோடு நோன்பு திறந்தவர், அவர்களோடு தொழுகையும் மேற்கொண்டிருந்தார். அத்தோடு, தமிழ்நாடு முழுக்க தவெக சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.


இதைத் தொடர்ந்து, வக்ஃப் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற அவைகளில் சட்டமாக நிறைவேறியபோது விஜய் அதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டதோடு மட்டும் அல்லாமல், மாநிலம் முழுவதும் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினார். மேலும் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இப்படியாக இஸ்லாமியர்கள் விவகாரத்தில் விஜய் தனி கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் சகாபுதீன் ராஸ்வி தவெக தலைவர் விஜய்க்கு எதிராக “ஃபத்வா” கொடுத்திருப்பது இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறி இருக்கிறது.


தவெக தலைவர் விஜயுடன் இஸ்லாமியர்கள் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம்-சகாபுதீன் ராஸ்வி:


அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் சகாபுதீன் ரஸ்வி தவெக தலைவர் விஜயுடன் இஸ்லாமியர்கள் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 


அவ்வறிக்கையில், “முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே அவர்கள் ஏமாற்று வேலைகளைச் செய்கிறார்கள். தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி இருக்கும் விஜய், தனது சினிமா பிரபலத்தை அரசியலுக்கு பயன்படுத்த முயல்கிறார்.


திரைத்துறைப் பயணத்தில் தனது படங்களில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்தவர் விஜய். இதனால், அவரோடு இஸ்லாமியர்கள் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம். தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம். சென்னையில் நடந்த இப்தார் விருந்தை விஜய் கொச்சைப்படுத்திப்படுத்தி விட்டார். குடிகாரர்கள், சூதாட்டக்காரர்களை இஃப்தார் விருந்துக்கு அழைத்துவந்து அதனை அவமதித்து பாவம் செய்துவிட்டார்” என்றும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.



இதனை புதியதலைமுறை, பாலிமர் செய்திகள் உட்பட ஊடகங்கள் பலவும் செய்தியாக வெளியிட்டுள்ளனர். 


#TVK | #Vijay | #AllIndiaMuslimJamaat | #MaulanaShahabuddinRazvi | #AIMJ pic.twitter.com/IIUITnsP63

— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 16, 2025


யார் இந்த மௌலானா சகாபுதீன் ராஸ்வி? 


அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவர் என்று சொல்லப்படுகின்ற சகாபுதீன் ராஸ்வி, உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் குறித்து ஆய்வு செய்ததில், அகண்ட பாரதத்தை உருவாக்க வேண்டும் என இந்துத்துவத்திற்கு ஆதரவாக இவர் பல பிரச்சாரங்களை செய்துள்ளதை காண முடிகிறது. 


இதுகுறித்து கடந்த 2024 செப்டம்பரில், அகண்ட பாரதத்தின் கனவை பிரதமர் நரேந்திர மோடியும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் நிறைவேற்ற முடியும் என்று அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தேசியத் தலைவர் மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி தெரிவித்துள்ளார் என்று குறிப்பிட்டு ‘Daijiworld’ ஊடகப்பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 


மேலும் அவருடைய எக்ஸ் பக்கத்தை ஆய்வு செய்த போது, சகாபுதீன் ராஸ்வி CAA சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பதிவு செய்திருப்பதை காண முடிந்தது. அதில், “இந்திய அரசு CAA சட்டத்தை அமல்படுத்துவதை நாங்கள் வரவேற்கிறோம், மேலும் இந்தியாவின் ஒவ்வொரு முஸ்லீமும் அதை வரவேற்க வேண்டும். முஸ்லீம்கள் பீதி அடையக்கூடாது, அது குடியுரிமையை அளிக்கிறது, அதைப் பறிக்காது, முஸ்லீம்களுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை“ என்றும் குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார். 


#BigBreaking #CAA #BreakingNews pic.twitter.com/NLuToI82FM

— Maulana Shahabuddin Razvi Bareilvi (@Shahabuddinbrly) March 11, 2024


இதே போன்று சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கும் தன்னுடைய முழு ஆதரவை தெரிவித்துள்ளார் என்பதை செய்திகள் மூலம் அறிய முடிகிறது.



மேலும் C&Ds நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்வதாகக் கூறி, 8.5 லட்சம் ரூபாய் ஏமாற்றியதற்காக இவர் மேல் கோட்வாலி காவல் நிலையத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதையும் பல செய்திகளின் மூலம் அறிய முடிகிறது. 



இப்படி இருக்க, வலதுசாரியத்தை ஆதரிக்கும் ஒருவர் எப்படி ஒட்டுமொத்த முஸ்லீம்களின் பிரதிநிதியாக தவெக தலைவர் விஜய்க்கு “ஃபத்வா” கொடுக்க முடியும் என்ற கேள்வியே இங்கு முதன்மையாக எழுகிறது!

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை