YouTurn

எங்கே செல்கிறது நமது ’ரேஷன் அரிசி’?

பொது விநியோக அமைப்பு (PDS) முறையின் கீழ் மக்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்படும் உணவு தானியங்கள் வீணடிக்கப்படுவது (Leakage) குறித்த அதிர்ச்சி தகவல்கள் ’சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆய்வுக் கழகம் (ICRIER)’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

எங்கே செல்கிறது நமது ’ரேஷன் அரிசி’?

இந்திய அரசு,  பொது விநியோக அமைப்பு (PDS) முறையின் கீழ் (அதாவது ரேஷன் கடைகளின் வழியாக) உணவு தானியங்கள் வழங்குவது விளிம்புநிலை மக்களின் உணவுப் பாதுகாப்பின் முக்கிய அம்சமாகும். உலகிலே மிகப்பெரிய உணவு விநியோக திட்டத்தை கொண்டிருக்கிறது இந்தியா. 2024ஆம் ஆண்டின் கணக்குப்படி, இந்தியாவின் 143 கோடியாக இருக்கும் மக்கள்தொகையில், சுமார் 81.35 கோடி மக்களுக்கு பொது விநியோக முறையில் (ரேஷன்) உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது.


இந்த திட்டம் திறனுடன் செயல்படுத்தப்படுகிறதா? என்பதைக் தெரிந்துகொள்வதற்கு ’சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான  இந்திய ஆய்வுக் கழகம்  (ICRIER)’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை உதவிசெய்வதாக இருக்கிறது. பொது விநியோக அமைப்பு  (PDS) முறையின் கீழ் ஒதுக்கப்பட்டு, மக்கள் நுகர்விற்கு அவர்களிடம் சென்று சேராத தானியங்களின் அளவைக் கணக்கிடுவதன் மூலமாக இந்த திட்டம் நடைமுறை படுத்தப்படும் திறனை மதிப்பிட முடியுமென்று இந்த ஆய்வின் ஆசிரியர்கள் சொல்கிறார்கள். 


image.png


National Sample Survey (NSS) அமைப்பு 2013ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் முதன்முறையாக 2022-23ஆம் ஆண்டிற்கான ’வீட்டு நுகர்வுச் செலவு கணக்கெடுப்பை (HCES)’ நடத்தியிருக்கிறது. இந்திய உணவுக் கழகத்தில் இருந்து பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களின் அளவை, வீட்டு நுகர்வுக் கணக்கெடுப்பின் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பயனர்களுக்கு சென்று சேராமல், வீணடிக்கப்பட்ட (Leakage) தானியங்களின் அளவை கணக்கிட முடியும்.


இந்தக் கணக்கீட்டின் படி, இந்தியா முழுவதும் ஒதுக்கப்பட்ட மொத்த உணவு தானியங்களில், 28 சதவீதம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. இதன் அளவு, 20 மில்லியன் மெட்ரிக் டன் (20 MMT) ஆகும். இதில் அரிசி 17 MMT-ம், கோதுமை 3 MMT-ம் அடங்கும். இப்படி 2022-23ஆம் ஆண்டு மட்டுமே வீணடிக்கப்பட்ட (Leakage) 20 மில்லியன் மெட்ரிக் டன் உணவு தானியங்களின் மதிப்பு 69,108 கோடி ரூபாய் ஆகும்.


இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இப்படி உணவு தானியக்கள் வீணடிக்கப்படுவது நடக்கிறது என்றாலும், மாநிலங்களின் தன்மையைப் பொறுத்து அதன் அளவுகளில் பெரிய மாறுபாடுகள் இருக்கிறது. அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான உணவு தானியங்கள் வீணடிக்கப்பட்டிருக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள் இப்படி அதிகமான உணவு தானியங்களை வீணடிப்பதற்கு காரணமாக, அங்கே ரேஷன் கடைகள் இன்னும் மின்ணணுமயமாக்கல் (Digitalization) செய்யப்படாததும் ஒரு காரணமென்று இந்த ஆய்வின் ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.


image.png


இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் குஜராத் மாநிலம் 40 சதவிதத்திற்கும் அதிகமாக வீணடித்திருக்கிறது. உத்தரப் பிரதேசம் மாநில 33 சதவீதம் வீணடித்திருக்கிறது. 


தமிழ்நாட்டில் மட்டுமே 5.2 லட்சம் டன் வரை உணவு தானியங்கள் வீணடிக்கப்பட்டிருகிறது. இது பொது விநியோக அமைப்பு (PDS) முறையின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட மொத்த அரிசியின் அளவில்  15.8 சதவீதமாகும். இதனால், தமிழ்நாட்டிற்கு ’1,900 கோடி ரூபாய்’ இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.


image.png


இப்படி வீணடிக்கப்பட்ட உணவு தானியங்களைக் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ், ’21.67 லட்சம்’ குடும்பங்களுக்கு விநியோகம் செய்திருக்க முடியும்.


தெலுங்கானா, ஆந்திர பிரதேஷ், கர்நாடகா போன்ற தெற்கு மாநிலங்கள் தமிழ்நாட்டை ஒப்பிடும் போது மிகக் குறைவாகவே வீணடிப்பு (Leakage) செய்திருக்கிறது. குறிப்பாக தெலுங்கானா மாநிலம் 0.5 சதவீதம் மட்டுமே வீணடித்திருக்கிறது. இது அந்த மாநிலத்தின் ரேஷனில் உணவு தானியங்கள் விநியோகம் செய்யும் கட்டமைப்பு சிறப்பாக இருப்பதைக் குறிக்கிறது.


image.png


மேலும், வட கிழக்கு மாநிலங்களில் அதிகமாக வீணடிப்பு (Leakage) செய்யப்பட்டிருப்பதற்கு, ஆதார் எண்ணை ரேஷன் அட்டையுடன் இணைக்காததும், மின்ணணுமயமாக்கல் (Digitalization) செய்யப்படதாததும் காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், குஜராத், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் கனிசமான அளவு உணவு தானியங்கள் வீணடிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநிலங்களில் இந்த மின்ணணுமயமாக்கலின் நிலை பற்றி ஆய்வறிக்கையில் சொல்லப்படவில்லை. 


மேலும், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களில், ரேஷன் கடைகளுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களை அதிக அளவில் சட்டவிரோதமாக தனியார் சந்தைகளுக்கு திருப்பிவிடும் போக்கு (siphoning) இருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது. 


தமிழ்நாட்டில் கூட, கடந்த ஜனவரி 1, 2023 முதல் மே 31, 2024 வரை, சுமார் 42,500 குண்டால் ரேஷன் (PDS) அரிசி கடத்தப்பட்டதும், அதனை 'Civil Supplies CID'  பறிமுதல் செய்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் அரிசியின் மதிப்பு சுமார் 2.4 கோடி ரூபாய் இருக்கும். 


இதிலிருந்து உணவு தானியங்கள் கடத்தப்படுவது,  பொது விநியோக அமைப்பிற்காக (PDS)  ஒதுக்கப்பட்ட தானியங்களில் ஏற்படும்  வீணடிப்பிற்கு (Leakages) முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுவது இயல்பானதே. 


அதனால், மின்ணணுமயமாக்கல் என்பதை இந்த பிரச்சனைக்கான ’சர்வரோக நிவாரணியாக’ பார்க்கமுடியாது என்பது தெளிவு.  பொது விநியோக அமைப்பு  (PDS) முறையில் நடக்கும் கடத்தல், ஊழல் போன்றவை பற்றியும் பேசப்படவேண்டும். 

 

பொது விநியோக அமைப்பு  (PDS) முறையின் கீழ் உணவு தானியங்கள் வழங்குவது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது என்ற முக்கிய நோக்கத்திற்காகதான். இருப்பினும், தானியங்களை வழங்குவதன் மூலமாக மட்டுமே நாம் மக்களின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்துவிட முடியாது. இதுபற்றி YouTurn தளத்தில் ஏற்கனவே கட்டுரை எழுதப்பட்டுள்ளது. நல்ல ஊட்டச்சத்துள்ள மக்கள்தொகையை உருவாக்க பழங்கள், காய்கறிகள், புரதச்சத்து நிறைந்த உணவுகள் என பலதரப்பட்ட உணவுவகைகள் தேவைப்படுகிறது. இதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு திட்டமிட்டால்தான், இந்திய மக்கள்தொகை உணவுப் பாதுகாப்பில் தன்னிறைவு பெற்றதாக மாறும்.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை