இசைவாணிக்கு ஆதரவாக விசிக-வினர் ’வணக்கம் டா மாப்பிள்ளை’ அருணை தாக்கியதாக பரவும் பொய்!
இசைவாணிக்கு ஆதரவாக விசிக-வினர் ’வணக்கம் டா மாப்பிள்ளை’ அருணை தாக்கியதாக பரவும் பொய்.
இந்து மதத்தினர் கடவுளாக வழிபடும் சபரிமலை ஐயப்பனை கொச்சைப்படுத்தும் விதமாக பாடியதாக இசைவாணி என்ற பாடகர் மீது ‘அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கம்’ சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக தரப்பிலும் வெவ்வேறு மாவட்டங்களில் இசைவாணி மற்றும் ரஞ்சிதிற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இசைவாணி பாடியது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசிய ‘அருண்குமார் (வணக்கம் டா மாப்பிள்ளை)’ என்பவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்கியதாக வீடியோ ஒன்று பரப்பப்படுகிறாது.
இசைவாணி பாடியது என்ன?
இயக்குநர் ரஞ்சித் நடத்துகின்ற நீலம் பண்பாட்டு அமைப்பின் சார்பில் 2018, டிசம்பர் மாதம் வானம் கலை திருவிழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் ‘The Casteless Collective’ குழுவினரும் பாடல் பாடினர். அதில் ஒரு பாடல்தான் I’m sorry ayyappa என்ற பாடல். இந்த பாடல் ஐயப்பனை இழிவுப்படுத்தும் விதத்தில் பாடியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பாடல் தற்போது பாடப்பட்டதும் கிடையாது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடுவதற்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என இந்துத்துவா அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
உச்ச நீதிமன்ற தீர்ப்பையே எதிராகச் செயல்பட்ட இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிர் வினையாகப் பாடப்பட்டதுதான் இப்பாடல். மேலும் இதில் பெண்கள் ஒடுக்குமுறைக்கு எதிரான வரிகளே அதிகம் இடம்பெற்று இருக்கும். ஆனால், இந்துக்களுக்கு எதிராக ஐயப்பனை இழிவுப்படுத்தி பாடியதாகத் திரித்துப் பொய் செய்தி பரப்புகின்றனர்.
பொய் செய்தி பரப்புவது மட்டுமில்லாமல், இசைவாணிக்கு கொலை மிரட்டல் விடுப்பது ஆபாச செய்தி அனுப்புவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது பற்றி இசைவாணி தரப்பில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு கலைஞர் தனது கலையின் வழியே இச்சமூகத்தில் உள்ள அவலநிலையை கேள்வி கேட்பது ஆண்டாண்டு காலமாக இயல்பாய் உள்ள ஒன்றுதான். அப்படித்தான் சபரிமலை விவகாரத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாகுபாட்டை அணிதியை தனது பாடல் மூலம் இசைவாணி கேள்வி கேட்டுள்ளார்.
வணக்கம் டா மாப்பிள்ளை அருண்குமார் வீடியோ:
இசைவாணி பாடிய இப்பாடலுக்கு, எதிர்ப்பு தெரிவித்து இன்ஸ்டாகிராம் பிரபலம் அருண் குமார் என்பவர் (வணக்கம் டா மாப்பிள்ளை) வீடியோ ஒன்றை பதிவிட்டதாகவும் அதனால் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளால் தாக்கப்பட்டதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
இது பற்றி அருண்குமாரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள வீடியோக்களை ஆய்வு செய்தோம். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பழனி கோவிளுக்கு சென்றது பற்றியும் இசைவாணி பாடிய ஐய்யப்பன் பாடல் பற்றியும் கடந்த 23ம் தேதி இரண்டு வீடியோக்கள் அவரது பக்கத்தில் உள்ளது.
இசைவாணி பற்றி அருண்குமார் பேசியது: ”ஆனா… உனா… என்றால் ஐயப்பனை இழுக்கிறீர்கள். பள்ளிவாசலை பற்றி பாடு? ஏசுநாதர் பற்றி பாடு? எல்லா சாமியையும் குறை சொல்ல கூடாது என நினைப்பவன் நான். சாமிகளை கொச்சைப்படுத்தாதீர். எங்களுக்கு நம்பிக்கை உள்ளது”.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், அதனை இந்துத்துவா கும்பல் எதிர்த்தது. பெண்களுக்கு வழங்கப்பட்ட உரிமையை பறிப்பவர்களை பார்த்து பாடிய பாடலை ஐயப்பனுக்கு எதிராகவும் இந்துக்களுக்கு எதிராகவும் திருப்பியது மட்டும் இல்லாமல், மாற்று மதத்தினை பார்த்து இப்படி பேசுவாயா எனக் கூறுவதன் மூலம் சொல்லவரும் கருத்தை மடைமாற்றுகிறார் அருண்குமார்.
திருமாவளவன் பற்றிய வீடியோவில் அருண் பேசியது: “கோவிலுக்கு போனீர்கள், சாமி கும்பிட்டீர்கள். போனவரு பேசாமல் வந்துடனும். நீங்கள் சிலைகளை எல்லாம் சுத்தி பார்த்துவிட்டு ஏன் விநாயகர் அசிங்கமாக இருக்கிறார்? முருகன் அழகாக இருக்கிறார்? என்று கேட்கிறீர்கள். அடுத்து சர்ச்சுக்கு சென்று சிலுவையில் ஏசுவை அரையும்வரை மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்களா? மசூதிக்கு சென்று சுவரை பார்த்து ஏன் வணங்குகிறீர்கள் என்று கேட்பீர்களா? அப்படி எல்லாம் கேட்காதீர்கள், அடுத்த முறை ஓட்டு கேட்டு வரும் போது பெரியார் பெயர் சொல்லி கேளுங்கள்”.
இந்த வீடியோவை தொடர்ந்துதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அருண் குமார் பணிபுரியும் இடத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். அந்த விடியோவிலேயே ‘எங்கள் தலைவரைப் பற்றி பேச நீ யார்?’ எனக் கேட்பதையும் கேட்க முடிகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இசைவாணிக்கு ஆதரவாக இத்தகைய முன்னெடுப்பை செய்யவில்லை.
இதன் தொடர்ச்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் தாக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சில வீடியோக்களை அருண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பழனி கோவிலுக்கு சென்றது தொடர்பாக திருமாவளவன் செய்தியாளர் கேள்விக்கு பதில் அளிக்கையில், “சனாதனம் என்பது வேறு. கடவுள் நம்பிக்கை என்பது வேறு. கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை என்பது சாதாரண மக்களின் உணர்வுகள். சதாரண மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டியது எங்களை போன்றோரின் கடமை. தேவாலயம், மசூதிகளுக்கு அழைப்பது போல் கோவிலுக்கும் அழைப்பதாக் வந்திருக்கிறேன்” என பதில் அளித்துள்ளார். மேலும் பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பதையும் வர்ண ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்க்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் திருமாவளவன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, “எனக்கு எந்த நேர்த்திக்கடனும் கிடையாது. மொட்டை போடுவதற்காக நான் வரவில்லை. தேர்தலில் நிறைய இடங்களை வாங்கித்தா எனக் கேட்க வரவில்லை. அமைச்சர், துணை முதல்வர், முதலமைச்சர் பதவி வேண்டுமென கேட்பதற்கு நான் வரவில்லை. எனது முன்னோர்கள் வாழ்ந்த இடம் அது. அதனால் பார்க்க வந்தேன்” என்று கூறுகிறார். அதுமட்டுமின்றி போகர், புலிப்பாணி சித்தர் பற்றியும் பேசியுள்ளார். இவற்றில் எதிலும் முருகன், பிள்ளையாரை பாகுபாடுபடுத்தி திருமாவளவன் பேசவில்லை.
இசைவாணி மற்றும் திருமாவளவன் பற்றி பேசிய இரண்டு வீடியோக்களிலும் அருண்குமார் ‘இஸ்லாமிய கிறிஸ்தவ மதத்தினர் பற்றி நீங்கள் பேசுவீர்களா’ என்று கூறியுள்ளார். இத்தகைய மடைமாற்றும் யுக்தியை வலதுசாரிகள் எப்போது செய்வர். அதையேத்தான் அருணும் செய்துள்ளார்.
எப்படி இருப்பினும் அருண்குமாரை விடுதலை சிறுத்தைகள் அட்சியினர் மிரட்டியது தவறான செயலாகவே உள்ளது. ஒருவேளை தங்கள் கட்சியின் தலைவரையோ தாங்கள் ஏற்றுக் கொண்ட கொள்கையையோ ஒருவர் தவறாக பேசும் போது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வதே சரியாக இருக்கும். தற்போது அருண் குமார் தரப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக ஒன் இந்தியா ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.