துணை வேந்தர் நியமனம்: UGC-யின் புதிய விதிமுறைகள்!
மாநில அரசின் கீழ் இயங்கும் பல்கலைகழகத்தின் துணை வேந்தரை நியமிக்கும் பணியிலிருந்து மாநில அரசை மொத்தமாக வெளியேற்றுவதாக உள்ளது.
பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களை நியமனம் செய்வது, உயர்கல்வியில் தரநிலைகளைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது, பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை நியமிப்பது போன்றவற்றிக்கான விதிமுறைகளை கொண்ட 2025 ஆண்டிற்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) வரைவறிக்கையை ‘மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்’ கடந்த ஜனவரி 6ஆம் தேதி வெளியிட்டார்.

2018ஆம் ஆண்டு UGC விதிமுறைகளின்படி துணை வேந்தர் பதவிக்கு வருவதற்கு ‘கல்விப்புலம் சார்ந்தவராக, குறிப்பாக ஏதேனும் பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் இருக்கவேண்டும் அல்லது 10 ஆண்டுகள் ஆராய்ச்சி, கல்வி சார்ந்த நிர்வாக நிறுவனத்தில் பணியாற்றியவராக’ இருக்கவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது 2025ஆம் ஆண்டிற்காக விதிமுறைகளில், துணை வேந்தர் பதவிக்கு வருபவர், உயர்கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக இருந்தவர், ஆராய்ச்சி அல்லது கல்வி சார்ந்த நிர்வாக நிறுவனத்தில் பணியாற்றியவர், அல்லது தொழிற்துறை, பொதுக்கொள்கை வகுப்பு, பொது நிர்வாகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழிற்துறை, பொதுக்கொள்கை வகுப்பு (Policy Making), பொது நிர்வாகம் ஆகியவற்றில் பணியாற்றியவர்கள் இதன்மூலம் கல்விப்புலத்தில் நுழைவதற்கான கதவு திறந்துவிடப்பட்டிருக்கிறது.

2018 ஆண்டின் விதிமுறைகளின் படி துணை வேந்தர் பதவிக்கான தகுதியுடைய நபர்களை 3 அல்லது 5 நபர்கள் கொண்ட ’Search cum-Selection Committee’ தான் அடையாளப்படுத்தும். இந்த குழுவில் இருப்பவர்கள் உயர்கல்வி சார்ந்து மேன்மையான அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கவேண்டும். அதேவேளையில் இந்த நபர்கள் எந்த பல்கலைகழகத்திற்கான துணை வேந்தரை தேர்தெடுப்பதற்காக இந்தக் குழுவில் இருக்கிறார்களோ அந்த பல்கலைக்கழத்துடன் எந்த சம்பந்தமும் இல்லாதவர்களாக இருக்கவேண்டும். ஆனால் இந்த குழுவை யார் நியமிப்பார்கள் என்பதை இந்த விதிமுறை விளக்கவில்லை.
இதனால், இந்த குழுவை அமைப்பதற்காக விதிமுறைகளை வெவ்வேறு பல்கலைகழகங்கள் தங்களுக்கென வெவ்வேறு விதமாக வகுத்துக்கொண்டது. அண்ணா பல்கலைகழகத்தின் விதிமுறைப்படி ’Search cum-Selection Committee’-யில் 3 நபர்கள் இருக்கவேண்டும். 1.) பல்கலைக்கழக Syndicate அமைப்பால் முன்மொழிப்படும் ஒருவர், 2.) பல்கலைக்கழகத்தின் Academic Council-ஆல் முன்மொழியப்படும் ஒருவர், 3.) ஆளுநரால் முன்மொழியப்படும் ஒருவர்.
இதேபோல், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், 1.) பல்கலைக்கழக Syndicate அமைப்பால் முன்மொழிப்படும் ஒருவர், 2.) அரசாங்கத்தால் முன்மொழியப்படும் ஒருவர், 3.) ஆளுநரால் முன்மொழியப்படும் ஒருவர் என்று மூன்று நபர்கள் குழுவில் இருப்பார்கள்.
ஆனால், தற்போதைய UGC விதிமுறைகளின்படி 1.) ஆளுநரால் முன்மொழியப்படும் ஒருவர், 2.) UGC தலைவரால் (Chairman) முன்மொழியப்படும் ஒருவர், 3.) பல்கலைக்கழக Syndicate அமைப்பால் முன்மொழிப்படும் ஒருவர் என்று மாற்றப்பட்டுள்ளது. மேலும் ’Search cum-Selection Committee’-யால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களில் யாரை துணை வேந்தராக நியமனம் செய்வது என்பதில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளுநரிடமே கொடுக்கப்பட்டுள்ளது. இது மாநில அரசின் கீழ் இயங்கும் பல்கலைகழகத்தின் துணை வேந்தரை நியமிக்கும் பணியிலிருந்து மாநில அரசை மொத்தமாக வெளியேற்றுவதாக உள்ளது.

கடந்த 2022 ஏப்ரலில், தமிழ்நாட்டில் உள்ள 13 மாநில பல்கலைகழகங்களில் துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசாங்கத்திற்கு இருக்க வேண்டுமென்று 2 மசோதாகள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாகள் நிறைவேற்றப்பட்ட போது சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘கடந்த நான்கு ஆண்டுகளாக மாநில அரசாங்கத்திடம் கலந்தாலோசிக்காமல் துணை வேந்தரை நியமிப்பதில் தனக்கு பிரத்தியேக உரிமை இருப்பதைப்போல் ஆளுநர் நடந்துகொள்கிறார்’ என்று பேசினார்.
இந்த புதிய விதிமுறைகள் பற்றி மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘துணை வேந்தர் நியமனம் தெளிவின்மைக்கு இடமில்லாமல் வெளிப்படையாக இருக்கவேண்டும்’ என்று கூறினார். சில மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் ஆளுநர்களுக்கும் மோதல் போக்கு இருப்பதால், இதுபோன்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், ‘விதிமுறையில் எங்கேயும் ஆளுநர் என்று குறிப்பிடவில்லை. யார் வேந்தராக இருக்கிறார்களோ அவர்களின் தான் துணை வேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவை அமைப்பார்’ என்று அந்த மூத்த அரசாங்க அதிகாரி தெரிவித்தார்.
இந்த விதிமுறைகளை அமல்படுத்தாமல் இருக்கும் பல்கலைகழகங்கள் UGC திட்டங்களில் பங்கேற்பதில் இருந்தும், பட்டப்படிப்புகளை வழங்குவதில் இருந்தும் தடை செய்யப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த UGC-ன் இந்த வரைவறிக்கையின் மீது கருத்துச் சொல்ல 30 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழக பேராசிரியர் நியமனத்திற்கான விதிமுறைகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. எந்த துறையில் முதுகலை பட்டப்படிப்பு படித்திருந்தாலும், NET தேர்வில் எந்த துறையில் தேர்ச்சியடைகிறார்களோ அந்தத் துறையிலே வேலை வழங்கப்படும். இளங்கலை, முதுகலை படிப்புகள் எந்தத் துறைகளில் படித்திருந்தாலும், ஆய்வு (PhD) எந்த துறையில் முடித்திருக்கிறார்களோ அந்தத்துறையிலே வேலை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.