‘நிர்மலா சீத்தாராமன் சாலை’ பெயர்ப் பலகை சர்ச்சை - ஏன் இத்தனை குழப்பம் ?

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சிக்கு உட்பட்ட லாந்தை என்னும் பகுதியில் இரயில் பாதையைக் கடக்க மேம்பாலம் அமைக்க மக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை முன்வைத்து வந்தனர். அதற்கு உதவியதற்காக அங்குள்ள சாலைக்கு ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது X (எக்ஸ்) பக்கத்தில் ஒரு பெயர்ப் பலகை படத்தினை பதிவிட்டார்.

இந்த பலகை போலியாக எடிட் செய்யப்பட்டது எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்ததும், இது ‘Representative image’ எனத் தனது X பதிவை சூர்யா மாற்றினார். இதேபோல் நிர்மலா சீத்தாராமன் பெயரைச் சாலைக்கு வைப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றவில்லை என்கிற தகவலும் பரவுகிறது.
ரயில்வே மேம்பாலம் கோரிக்கை :
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லாந்தை கிராம மக்கள் இரயில் பாதையைக் கடக்க ஏதுவாக சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை வழியாகத்தான் லாந்தை, கண்ணணை, பெரிய தாமரைக்குடி, சின்ன தாமரைக்குடி, திருப்பனை ஆகிய ஐந்து கிராம மக்களும் நகருக்குச் செல்ல வேண்டும். ஆனால், சுரங்கப்பாதையில் நீர் தேங்கிவிடுவதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே இந்த சுரங்கப்பாதையை மேம்பாலமாகத் தரம் உயர்த்தக் கோரி அப்பகுதி மக்கள் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்துள்ளனர். இது தொடர்பாகக் கடந்த நவம்பர் மாதம் 19ம் தேதி ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சுரங்கப் பாதைக்குப் பதிலாக ரயில்வே கேட் அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை இரயில்வே துறை அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவிடம் நிர்மலா சீதாராமன் நவம்பர் 29ம் தேதி முன்வைத்துள்ளார்.
Grateful to Minister @AshwiniVaishnaw for sanctioning the construction of a bridge at Lanthai village in the Madurai-Rameswaram route.
தமிழகத்தின் இலந்தை, கானனை, பெரிய தாமரைக்குடி, சின்ன தாமரைக்குடி, திரிபுனை ஆகிய கிராமங்களுக்கு இருப்புப் பாதையை கடந்து செல்ல மேம்பாலம் அமைக்க… pic.twitter.com/uwNHMBGul8
— Nirmala Sitharaman (@nsitharaman) December 16, 2023
அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க அனுமதி அளித்து டிசம்பர் 13ம் தேதி இரயில்வே துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனை நிர்மலா சீதாராமன் டிசம்பர் 16ம் தேதி X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஊராட்சி மன்றம் தீர்மானம் :
நிர்மலா சீதாராமன் பெயர் பலகை தொடர்பாக லாந்தை ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகச் சூர்யா புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அத்தீர்மானம் டிசம்பர் 5ம் தேதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இரயில்வே துறை டிசம்பர் 13ம் தேதிதான் மேம்பாலம் அமைக்க உத்தரவிட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே அனுமதி பெற்றுத் தந்ததற்காக நன்றி தெரிவித்து, பெயர் சூட்டவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானம் : “திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் லாந்தை ஊராட்சிகுட்பட்ட லாந்தை, கண்ணனை, பெரியதாமரைகுடி, சின்னதாமரைகுடி, திருப்பனை என்ற கிராமங்களுக்கு செல்லும் வழியாக இரயிவே மேம்பாலம் அமைக்க உறுதுணையாக இருந்து அனுமதி பெற்று தந்ததற்காக மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் இங்க அமையவிருக்கும் மேம்பாலத்திற்கு மாண்புமிகு நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் பெயரை சூட்டுவதற்கு ஊராட்சி மன்ற தீர்மானம் இயற்றி ஏகமனதாக நிறைவேற்றப்படுகிறது” என்றுள்ளது.
இதில் மேம்பாலத்திற்கு நிர்மலா சீதாராமன் பெயர் வைப்பதாகவே கூறப்பட்டுள்ளதே தவிர சாலைக்கு அல்ல.

இதற்கிடையில் பாஜக கட்சியைச் சேர்ந்த ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் என்பவர் சிலருடன் இணைந்து ‘நிர்மலா சீத்தாராமன் சாலை’ என்கிற பெயர்ப்பலகையை அப்பகுதியில் வைத்துள்ளார். உரிய முன் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட அப்பெயர் பலகையை அதிகாரிகளால் அகற்றப்பட்டுள்ளது.
#JUSTIN | இராமநாதபுரம்: லாந்தை கிராமத்தில் நேற்று பாஜக மாவட்ட தலைவரால், உரிய முன் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட ‘நிர்மலா சீத்தாராமன் சாலை’ என்ற பலகை அதிகாரிகளால் அகற்றம்#SunNews | #Ramanathapuram | #NirmalaSitharaman pic.twitter.com/76wXCEnhIh
— Sun News (@sunnewstamil) December 28, 2023
மேம்பாலம் தொடர்பாக ரயில்வே அமைச்சகம் தரப்பில் டிசம்பர் 13ம் தேதி உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் டிசம்பர் 5ம் தேதியே அதற்கு வாழ்த்து கூறி பெயர் சூட்டவும் அறிவித்து இருக்கிறார்கள் எனில் அதன் நம்பகத்தன்மை என்ன ?
இரயில்வே மேம்பாலத்திற்கு நிர்மலா சீதாராமன் பெயரை வைக்க தீர்மானம் நிறைவேற்றி இருந்தால் எதற்காக தெருவிற்கு பெயரை வைத்தனர் என எடிட் செய்த படத்தை பரப்ப வேண்டும் ?