YouTurn

ஆளுநர் தேநீர் விருந்து… முதல்வர் கலந்து கொண்டது ஏன்? அரசியல் வட்டாரத்தில் எழும் கேள்விகள்!

இந்திய அரசியலமைப்பின் படி ஆளுநரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் முடிந்த நிலையிலும், புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரையில் தற்போது பதவியில் உள்ளவரே ஆளுநராகத் தொடரலாம்.

ஆளுநர் தேநீர் விருந்து… முதல்வர் கலந்து கொண்டது ஏன்? அரசியல் வட்டாரத்தில் எழும் கேள்விகள்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆளுநர் 5 ஆண்டுகள் கடந்தும் பதவி வகித்து வரும் நிலையில், அவரை வெளியேற்றுவதற்கான சட்ட நடவடிக்கையைப் பார்க்காமல் அவர் அளிக்கும் விருந்தில் தமிழ்நாடு அரசு கலந்து கொள்கிறது என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. ஆளுநரின் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கலந்துகொண்ட விவகாரம் பற்றியும் ஆளுநருக்குப் பதவிக்காலம் என்றொன்று உள்ளதா? என்பது குறித்து இக்கட்டுரையில் காணலாம். 

ஆளுநர் தேநீர் விருந்து:

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல்கட்சித் தலைவர்கள் உட்படப் பலருக்கு ஆளுநர் தரப்பிலிருந்து தேநீர் விருந்து அளிப்பது வழக்கமான நடவடிக்கையாகும். அப்படி இந்த ஆண்டும் அரசியல்கட்சித் தலைவர்களுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார்.   

இந்த அழைப்பை திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஐ(எம்), மதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்தது. திமுகவும் இந்த விருந்தைப் புறக்கணிப்பதாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அறிவித்தார். மேலும் திமுக சார்பில் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என்றும் அரசு சார்பில் கலந்து கொள்வது குறித்து முதலமைச்சர் தெரிவிப்பார் என்றும் கூறியிருந்தார். 

தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தேநீர் விருந்தில் கலந்துகொள்வதாக முடிவு செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது. 

ஆளுநரிடம் கருத்தியல் சார்ந்த விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் திமுகவுக்கு இருக்கிறது. ஆனால், ஆளுநர் என்கிற பதவியின் மீதும், அந்தப் பொறுப்பின் மீதும் முதல்வர் பெரும் மதிப்பு கொண்டிருக்கிறார். எனவே, அந்த கோட்பாடுகளின் அடிப்படையில், ஆளுநருடைய அழைப்பினை ஏற்றுத் தேநீர் விருந்தில் நாங்கள் கலந்து கொள்கிறோம் எனப் பதில் அளித்தார். 


ஆனால், கடந்த ஆண்டு இதேபோல் தேநீர் விருந்துக்கு முன்னர் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் முன்னிலையில் ஆளுநர் பேசிய கருத்து அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையானதும், அதனையொட்டி முதல்வர் வெளியிட்ட அறிக்கையும் தற்போது நினைவு கூறவேண்டியுள்ளது.

‘திங்க் டூ டேர்’ (Think to Dare) என்ற தலைப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு நிகழ்வை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுடனான கலந்துரையாடல் மற்றும் பாராட்டு விழா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஒருவர், "நீட் விலக்கு மசோதாவிற்கு எப்போது ஒப்புதல் அளிப்பீர்கள்" எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு "ஒப்புதல் அளிக்க மாட்டேன்" என ஆளுநர் பதில் அளித்தார். 

இதனையொட்டி முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், ஏழை எளிய, விளிம்புநிலை அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக்கனவை அப்படித்தான் சிதைப்பேன் என்று நியமனப் பதவியில் இருக்கும் ஓர் ஆளுநர் கொக்கரிப்பார் என்றால், இது கல்வித்துறைமீது நடத்தப்படும் சதியாகவே கருதுகிறோம். தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம் எங்களுக்கு முக்கியமானது” என்று குறிப்பிட்டார். மேலும், இதன் அடையாளமாக ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று, ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்திருக்கும் தேநீர் விருந்தையும் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து தமிழ்நாடு குறித்து பொய்யான தகவல்களைப் பல மேடைகளில் ஆளுநர் பேசி வருகிறார். இதனை யூடர்ன் தளத்திலும் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம். அப்படி இருக்கையில் ஆளுநர் இந்த ஆண்டு அளித்த தேநீர் விருந்தை திமுக புறக்கணித்தாலும் அரசு சார்பில் முதல்வரும் அமைச்சர்களும் கலந்து கொண்டதுதான் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. 
 
மேலும் படிக்க: "ஆளுநர் ஆர்.என்.ரவியின் பொய்கள்" வீடியோவின் ஆதாரத் தொகுப்பு !

முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நூறு ரூபாய் நாணய வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள உள்ளார். இதன் காரணமாகவே ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் கலந்துகொள்கிறார் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. 

‘ஆளுநர் என்கிற பதவியின் மீதும், அந்தப் பொறுப்பின் மீதும் முதல்வர் பெரும் மதிப்பு கொண்டிருக்கிறார்’ என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகிறார். 

ஆனால், 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் சட்டமன்றத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் ”ஆளுநர் பதவி என்பது தேவையில்லாத ஒரு பதவி என்ற எங்களுடைய நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது. அண்ணா சொல்லியிருக்கின்றார். ’ஆட்டுக்குத் தாடியைப் போல, நாட்டுக்குக் கவர்னர்’ என்ற உணர்வை வெளிப்படுத்திக் காட்டியிருக்கின்றார். அந்த எண்ணத்தைத்தான் திமுக இன்றைக்கும் உள்ளத்தில் பதியவைத்துக் கொண்டிருக்கின்றது” எனப் பேசியுள்ளார். 

அப்படியானால் இந்த நிலைப்பாட்டிலிருந்து முதல்வர் ஸ்டாலின் மாறியுள்ளாரா? என்ற கேள்வி எழுகிறது.

ஆளுநரின் பதவிக்காலம்:

தேநீர் விருந்தில் முதல்வர் கலந்துகொண்டது குறித்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். 

அதில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் கடந்த மாதம் ஜூலை 31 அன்றோடே முடிந்துவிட்ட நிலையில் அவர் அப்பதவியில் நீடிப்பது என்பதே அப்பட்டமான அதிகார முறைகேடு, சட்டவிரோதம். இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி அவரை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற அரசியல் போராட்டமும் சட்டப்போராட்டமும் செய்ய வேண்டிய திமுக அரசு, தேநீர் விருந்தில் கலந்து கொள்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தைப் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியக் காவல் பணியில் (IPS) இருந்த ஆர்.என்.ரவி 2012ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு ஒன்றிய அரசின் பல நியமன பதவிகள் வழங்கப்பட்டு வந்தது. இதன்தொடர்ச்சியாக 2019ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 1ஆம் தேதி நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார். பிறகு 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டார். 

நாகாலந்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட தேதியை அடிப்படையாகக் கொண்டுதான் 5 ஆண்டு பதவிக்காலம் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
 
ஆளுநர் பதவிக்காலம்
இந்திய அரசியலமைப்பு சரத்து (Article) 156-ன் படி ஆளுநரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் முடிந்த நிலையிலும், அடுத்த நபர் பொறுப்பேற்கும் வரையில் முந்தைய நபரே ஆளுநராகப் பொறுப்பு வகிக்கலாம் எனத் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆளுநர் சட்டத்திற்குப் புறம்பாகப் பொறுப்பில் உள்ளார் என்று சொல்வது தவறான தகவல்.

கடந்த ஆண்டு ஆர்.என்.ரவி என்ன மாதிரியான நிலைப்பாட்டில் இருந்தாரோ அதைவிட இன்னும் அதீத வீச்சுடனே இந்த ஆண்டும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் மக்களுக்கு ஒவ்வாத கொள்கைகளையும் பேசிவருகிறார். சமீபத்தில்கூட 'திராவிட சித்தாந்தம் நாட்டை பிளவுப்படுத்த விரும்புகிறது' என்று பேசியிருந்தார். இப்படி இருக்கையில் ஒன்றிய அரசுக்கு தன் அதிருப்தியை இன்னும் பலமாக தெரிவிக்கும்பொருட்டு இந்த ஆண்டும் தமிழ்நாடு அரசு ஆளுநரின் தேநீர் விருந்தை கடந்த ஆண்டு போலவே புறக்கணித்திருந்தால் அரசின் நிலைப்பாடு குறித்த எந்த சலசலப்புகளும் சர்சைகளும் எழாமல் இருந்திருக்கும்.      

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை