RSS to TVK.. திருப்பரங்குன்றம் தவெக வேட்பாளர்..!
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் நிர்மல் குமார் என்பவரைத் தவெக வேட்பாளராக நிறுத்தியுள்ளார் விஜய். அவரது அரசியலின் வேரைத் தோண்டினால் அது ஆர்.எஸ்.எஸ்., இல் போய் நிற்கும். ஆர்.எஸ்.எஸ்., இல் அரசியல் பயின்று இந்துத்துவ சித்தாந்தங்களை ஏற்று பாஜகவில் பல ஆண்டுகளாகப் பொறுப்பில் இருந்தவர்தான் இந்த நிர்மல்குமார்.
பொதுவாகத் தேர்தலில் அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் போட்டியிடும் இடங்கள் ‘ஸ்டார் தொகுதிகள்’ என்று அடையாளப்படுவது வழக்கம். இத்தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் பொதுமக்களால் உற்று நோக்கப்படும்.
ஆனால், எதிர்வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட தொகுதி மட்டும் ஸ்டார் வேட்பாளர்கள் போட்டியிடாமலே பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதுதான் மதுரை திருப்பரங்குன்றம். இதற்குக் காரணம் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்காவை மையப்படுத்தி இந்துத்துவாவினர் செய்து வரும் அரசியல்.
தமிழ்நாட்டின் அயோத்தியாக திருப்பரங்குன்றத்தை மாற்றுவோம் என்று சூளுரைத்து இந்து முன்னணி, பாஜக, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்துத்துவ சக்திகள் கலவரச் சூழலை மதுரையில் ஏற்படுத்தி இருந்தனர். ஆனால், தமிழ்நாடு அரசோ சட்டம் ஒழுங்கையும், சமூக ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில் துணிச்சலான முடிவுகளை எடுத்துச் சங்பரிவாரங்களின் சதித்திட்டங்களை முறியடித்தது.
இந்தச் சூழலில், திமுகவுக்கு போட்டி நாங்கள்தான் என்று மார்த்தட்டி வரும் விஜயின் தமிழக வெற்றிக் கழகமோ திருப்பரங்குன்றம் குறித்து தனது தீர்க்கமான நிலைப்பாட்டைத் தெரிவிக்காமல் மௌனமாக நழுவியது. தேசிய அளவில் பற்றி எரிந்த ஒரு விவகாரம் குறித்து கருத்து கூடச் சொல்லாமல் கடந்து சென்ற விஜயின் போக்கு கடும் விமர்சனத்துக்கு ஆளானது.
இந்நிலையில் தற்போது ஒருபடி மேலேபோய் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் நிர்மல் குமார் என்பவரைத் தவெக வேட்பாளராக நிறுத்தியுள்ளார் விஜய். நிர்மல் குமாரை வேட்பாளராக நிறுத்துவதில் என்ன பிரச்சனை என்று நினைக்கலாம்.
அதற்கு அவரது அரசியல் பயணத்தை நாம் பின்னோக்கிச் சென்று பார்க்க வேண்டும். தவெகவினரிடம் கேட்டால் அவர் அதிமுகவிலிருந்து வந்தவர்தானே என்று சொல்வார்கள். ஆனால், அவரது அரசியலின் வேரைத் தோண்டினால் அது ஆர்.எஸ்.எஸ்., இல் போய் நிற்கும். ஆர்.எஸ்.எஸ்., இல் அரசியல் பயின்று இந்துத்துவ சித்தாந்தங்களை ஏற்று பாஜகவில் பல ஆண்டுகளாகப் பொறுப்பில் இருந்தவர்தான் இந்த நிர்மல்குமார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு இவர் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். பாஜகவின் மதவாதக் கொள்கைகளை வெறுத்து ஒன்றும் அவர் அக்கட்சியைவிட்டு விலகவில்லை. அண்ணாமலைக்கும் இவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனையாலேயே அவர் வெளியேறினார்.
வட மாநிலங்களில் ராமரை வைத்து மதவாத அரசியலைச் செய்துவரும் தாமரைக் கட்சி, தமிழ்நாட்டில் முருகனை அரசியல் கருவியாக கையிலெடுத்தது. இது திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தொடங்கியது அல்ல. தற்போது ஒன்றிய அமைச்சராக உள்ள எல்.முருகன் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தபோது இந்த அரசியலைப் பிரபலப்படுத்தி ‘வேல் யாத்திரை’ நடத்தினார். அதை மையப்படுத்தி சமூக ஊடகங்களில் பாஜக மேற்கொண்ட பெரும் பரப்புரையை ஒருங்கிணைத்தது, அக்கட்சியின் மாநில ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமார்தான்.
சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்பி அரசியல் செய்யும் கலாச்சாரத்தைத் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் மேற்கொண்டது இவர் தலைமையிலான பாஜக சமூக ஊடகக் குழு. அதில் வெறுப்புப் பரப்புரைகளும் அடக்கம். இவரைதான் தவெக திருப்பரங்குன்றத்தின் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது.
இவர் பரப்பிய பொய் செய்திகளை ஆய்வு செய்து நம் பக்கத்தில் ஏற்கனவே கட்டுரை வெளியிட்டுள்ளோம். குறிப்பாக அரசுக்கு எதிரான பல வதந்திகளை பரப்பியுள்ளார். ஆவின் பொருட்களில் ஹலால் சான்றிதழ் கொண்டு வந்ததாகவும், அமைச்சரின் மதவெறி செயல் என்றும் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இது பாஜகவினரால் கடந்த 2022-ல் பெரும் பிரச்சாரமாக எடுக்கப்பட்டது.

படிக்க : திமுக ஆட்சியில் ஆவின் பொருட்களில் ஹலால் சான்றிதழ் கொண்டு வந்ததாக வதந்தி பரப்பும் பாஜகவினர்
ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படும் ஆவின் தயாரிப்புகளில் ஹலால் சான்றிதழ் இடம்பெற்று இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பொருட்களில் ஹலால் சான்றிதழ் கொண்டு வந்ததாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது என நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
திமுக ஆட்சியில் லாரி ஒன்றில் தமிழ்நாடு மது இறக்குமதி வாகனம் அவசரம் என எழுதப்பட்டு இருப்பதாக கடந்த 2016ல் அதிமுக ஆட்சியில் இருந்தே சமூக வலைதளங்களில் வைரலான ஃபோட்டோஷாப் படத்தை நிர்மல் குமார் ட்விட்டரில் பரப்பி இருந்தார்.
படிக்க : தமிழ்நாடு மது இறக்குமதி வாகனம் அவசரம்.. பழைய ஃபோட்டோஷாப் படத்தை பரப்பும் பாஜக நிர்மல் குமார்!

எதிர்கட்சிகளுக்கு எதிராக வதந்திகளைப் பரப்புவது போல் தங்களது சொந்தக் கட்சிக்கு ஆதரவாகவும் பல்வேறு பொய்யான தகவல்களையும் நிர்மல் குமார் பரப்பி இருக்கிறார்.
படிக்க : பிரதமர் மோடி ‘நமஸ்தே’ என்ற போது தமிழக மக்கள் ஆரவாரமிட்டதாக எடிட் வீடியோவை பகிரும் பாஜகவினர் !
படிக்க : திருச்சி பெல் நிறுவன தொழிற்சங்கத் தலைவர் தேர்தலில் பாஜக வெற்றியா ?
படிக்க : மகாராஷ்டிரா அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பல ஆயிரம் ஆண்டு பழமையான சிவலிங்கமா ?
படிக்க : மாணவரை மீட்டதாகப் பதிவிட்ட தமிழக பாஜகவினர்.. யாரும் வரவில்லை எனப் பதிவிட்ட மாணவர் !
தமிழ்நாடு பாஜகவின் ஐடி விங் தலைவர் பதவியில் இருந்த நிர்மல் குமார் 2022ல் மட்டும் பரப்பிய 11 தவறான தகவல் மற்றும் வதந்திகளை கண்டறிந்து அப்போதே வெளியிட்டு இருந்தோம். நிர்மல் குமார் குறித்து யூடர்ன் அம்பலப்படுத்திய பொய் செய்திகளின் தொகுப்பையும் கீழே இணைத்துள்ளோம்.
மேலும் படிக்க: தமிழ்நாடு 'பாஜகவின் ஐடி விங்' தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பரப்பிய வதந்திகளின் தொகுப்பு
மேலும் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து தவெக அதிகாரப்பூர்வமாக எவ்வித நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என்று நாம் மேலே குறிப்பிட்டிருந்தோம். ஆனால், நிர்மல் குமார் இது குறித்து அப்போதே கருத்து தெரிவித்திருந்தார். ‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்’ என்ற பழமொழிக்கு இணங்க, இப்பிரச்சனையில் இந்துத்துவாவினர் செய்த மலிவான அரசியலைக் கண்டிக்காமல் ஏதோ தமிழ்நாடு அரசுதான் இப்பிரச்சனைக்கு காரணம் என்று கூறி இருந்தார். இதற்கு மூலக் காரணமான, பாஜகவைப் பற்றி அவர் வாய் திறக்கவில்லை. அதெப்படி திறப்பார்.. கட்சி மாறினாலும் கொள்கை மாறவில்லையே!
பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட சமூக நல்லிணக்கப் போராளிகளைக் கொள்கைத் தலைவர்களாக அறிவித்துவிட்டு, தீவிர ஆர்.எஸ்.எஸ். காரரான நிர்மல் குமாரை, திருப்பரங்குன்றம் போன்ற பதற்றம் நிறைந்த தொகுதியின் வேட்பாளராக விஜய் அறிவித்திருப்பது பின்வாசல் வழியாக பாஜகவை திருப்பரங்குன்றத்திற்குள் விட்டு அவர்களின் அரசியல் ஆட்டத்தை ஆட வைக்கும் முயற்சியாகும்.