கருத்தடையா? காப்பகமா? தெரு நாய்கள் பிரச்சினைக்கு தீர்வு என்ன?
தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்த புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும் என்று பொது மக்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்திய நகரங்களில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் இதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதையும் பற்றிய வழக்கை நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. தெருநாய் கடிப்பதாலும் ரேபிஸ் நோயாலும் ஏற்படும் இறப்புகள் அதிகரித்து வருவதையும் கணக்கில்கொண்டு இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து (suo motu) எடுத்துக்கொண்டது.

கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த உத்தரவில், ‘டெல்லி, நொய்டா, காசியாபாத், குருகிராம் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து தெருநாய்களையும் அகற்றி அதற்கென ஏற்பாடு செய்யப்படும் காப்பகங்களில் அடைக்க வேண்டும். அவைகளை எக்காரணம் கொண்டும் திரும்ப தெருக்களில் விடக் கூடாது’ என்று நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டிருந்தது.

மேலும், இந்த உத்தரவு முன்னுரிமை கொடுக்கப்பட்டு எவ்வித சமரசமும் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்றும் நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இதனை நடைமுறைப்படுத்தும் போது எந்த தனிநபரோ அல்லது அமைப்புகளோ குறுக்கீடு செய்தால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் குறிப்பிடப்பட்டது.
ஒரு தரப்பினர் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள நிலையில், மற்றொரு தரப்பில் விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் இந்த தீர்ப்பு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் தெரு நாய்களின் பிரச்சினை குறிப்பாக தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
இந்தியாவில் தினமும் 10,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்படுவதாக ‘Times of India’ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது. மேலும், உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தரவுகள் படி, உலகளவில் ரேபிஸ் (Rabies) நோயால் அதிகமாக உயிரிழப்பது இந்தியாவில் தான் அதிகம் என்பது தெரியவருகிறது. ரேபிஸ் நோயால் நிகழும் இறப்புகளை கணக்கிடுவதில் கூட இந்தியா சரியான வகையில் செயல்படவில்லை.
ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் (IDSP) தரவுகள் படி, கடந்த 2022ஆம் ஆண்டு ரேபிஸ் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 21 மட்டுமே. ஆனால் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் தரவுகளைக் கொண்டு 2022ஆம் ஆண்டு ரேபிஸ் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 305 ஆக இருக்குமென்று உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறுகிறது. அதேவேளையில், WHO சுயட்சையாக மேற்கொண்ட கணக்கெடுப்பின் படி இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டு ரேபிஸ் நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,000 ஆக இருக்குமென்று கூறப்படுகிறது.

இவ்வாறு நாய்க்கடி காரணமாக ரேபிஸ் நோய் ஏற்பட்டு இறந்தவர்கள் குறித்த தரவுகள் சரிவர இல்லாதது போலவே, இந்தியாவில் தெருநாய்களின் எண்ணிக்கை பற்றியும் சரியான விவரங்கள் இல்லை. நாய்கள் எண்ணிக்கை பற்றி நம்மிடம் இருப்பது ‘2019 ஆம் ஆண்டு கால்நடை கணக்கெடுப்பு’ தரவுகள் மட்டும் தான். இது 6 ஆண்டுகள் பழைய தரவுகள்.
2019 கால்நடை கணக்கெடுப்பின் படி, உத்தரப் பிரதேசத்தில் அதிகமாக, 20.6 லட்சம் தெருநாய்கள் இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து ஒடிசா, மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தெருநாய்கள் அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 4.4 லட்சம் தெருநாய்கள் இருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளதாக தெரிகிறது. 20.6 லட்சம் தெருநாய்கள் உள்ள உத்தரப் பிரதேசத்தில் 2019ஆம் ஆண்டில் மட்டும் 20.2 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளது. அதேவேளையில், 4.4 லட்சம் தெருநாய்கள் உள்ள தமிழ்நாட்டில் 8.3 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளது.
ஆனால் தமிழ்நாட்டைவிட ஒடிசாவில் தெருநாய்கள் எண்ணிக்கை மிக அதிகம். ஒடிசாவில் 17.3 லட்சம் தெருநாய்கள் இருந்தாலும், அதனால் ஏற்பட்ட நாய்க்கடி சம்பவங்கள் 2019ஆம் ஆண்டில் 1.7 லட்சம் சம்பவங்கள் தான் பதிவாகியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு 1000 தெருநாய்களுக்கும் 1900 நாய்க்கடி சமபவங்கள் நிகழ்ந்துள்ளன. இது நாய்க்கடி பிரச்சினை தமிழ்நாட்டில் மிகத் தீவிரமாக இருப்பதை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.

மனிதர்களுக்கு ரேபிஸ் தொற்று ஏற்படுவதற்கு நோய்த் தொற்றுள்ள நாய்கள் தான் 99 சதவீதம் காரணமாக இருக்கின்றன என்ற WHO தரவுகளின் அடிப்படையில், நாய்களால் ஏற்படும் ரேபிஸ் நோயை ஒழிப்பதற்கு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடவேண்டும் என்ற திட்டத்தை இந்திய அளவில் கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது. இதன்படி மூன்றாண்டுகளுக்கு நிலையாக 70% நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி வந்தால், ரேபிஸை ஒழிக்கமுடியும் என்று சொல்லப்பட்டது. அதன்படி 2017 முதல் 2019 வரை இந்த திட்டம் கோவா-வில் செயல்படுத்தப்பட்டது. அதனால் கோவா-வில் 92 சதவீதம் ரேபிஸ் நோய் ஏற்படாமல் தடுக்கப்பட்டதாக ’நேச்ஷர்’ ஆய்விதழில் வெளியான தரவுகள் தெளிவுபடுத்துகிறது.

சமீபத்திய செய்தித் தரவுகளின் படி, கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையில் சென்னை மாநகராட்சியில் 10,401 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, அதில் 9,901 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்வாறு நாய்களை பிடித்து தடுப்பூசி போட்டு, கருத்தடை அறுவை சிகிச்சை செய்து திரும்பி அதே தெருக்களில் விடுவதால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம். ஏனெனில், நாய்களால் ஏற்படும் ரேபிஸ் மட்டுமே பிரச்சினையில்லை. நாய்க்கடிகளால் ஏற்படும் பிற பாதிப்புகள், நாய்களால் ஏற்படும் விபத்துகள் ஆகியவற்றையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதேநேரத்தில், ’லட்சணக்கணக்கான தெருநாய்களை அடைத்து வைக்கும் அளவிற்கு காப்பக வசதிகள் நம் நாட்டில் இல்லை. மேலும், அவ்வாறு மொத்தமாக நாய்களை அடைத்து வைப்பதால் நோய் தொற்றுகள் உண்டாகலாம்’ என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஃபௌசியா பேகம்.

மேலும், கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று ‘டெல்லியில் பொது இடங்களில் இருக்கும் அனைத்து தெருநாய்களையும் அகற்றி, அதனை காப்பகங்களில் அடைக்கவேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் கொடுத்த உத்தரவு ‘விலங்குகள் மீதான வதை தடுப்புச் சட்டத்திற்கு’ எதிரான இருப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் அன்ஜாரியா ஆகிய நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரிக்க இருக்கிறது.
இதனால், தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்த புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும் என்று பொது மக்கள் தெரிவிக்கிறார்கள். அதற்கு முதலில் நாய்களை சரியான முறையில் கணக்கெடுப்பு செய்யவேண்டியது அவசியமாகும்.