YouTurn

மோடி ஆட்சியில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் நிலை என்ன?

மோடி ஆட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு தேவையானதைவிட குறைவாக நிதி ஒதுக்குவது, மாநிலங்களுக்கு கொடுக்கவேண்டிய நிதியை நிலுவை வைத்திருப்பது போன்ற காரணங்களால் இந்த திட்டத்தை நம்பிருக்க்கும் கிராமப்புற மக்களுக்கு பெரும் துன்பங்களை கொடுப்பதாக இருக்கிறது.

மோடி ஆட்சியில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் நிலை என்ன?

இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் வாழும் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையில் ’மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (MGNREGA)’ 2006ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசால் வரப்பட்டது. விவசாயம் சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாத நாட்களில் மக்கள் இந்த வேலை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்கிறார்கள். மேலும், அதிகரித்து வரும் பணவீக்கத்தால் உண்மைக் கூலி குறைந்து கொண்டே வருகிறது. இதனால், கிராமப்புற மக்கள் தங்களது அதிகரித்த செலவீனங்களை ஈடுகட்ட இந்த ஊரக வேலை வாய்ப்பை சார்ந்திருப்பது அதிகரித்திருக்கிறது. கொரோனா ஊரடங்கின் போது நகரங்களில் வேலை செய்யும் மக்கள் தங்களது கிராமங்களுக்கு திரும்பியதால், இந்த திட்டத்தை சார்ந்திருந்த கிராமப்புற தொழிலாளர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது. இதுவே ஊரக வேலை வாய்ப்பு திட்டம் இந்திய கிராமங்களில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.


கடந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சியின் போது இந்த திட்டம் சரிவர அமல்படுத்தப்படவில்லை என்ற விமர்சனங்கள் வந்த வண்ணமிருக்கின்றன. இந்த ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு (MGNREGA) குறைவாக நிதி ஒதுக்கப்படுவது, ஒதுக்கப்பட்ட நிதியை மாநிலங்களுக்கும் ஒன்றிய பிரதேசங்களுக்கும் சரியாக விநியோகிக்காமல் நிலுவை வைத்திருப்பது, இந்த திட்டத்தின் கீழ் எத்தனை ஊரக தொழிலாளர்களுக்கு கடந்த ஐந்தாண்டுகளில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது போன்ற கேள்விகள் ஜூலை 22ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கேட்கபட்டது. இதற்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் மற்றும் இணை அமைச்சர் கமலேஷ் பாஸ்வான் ஆகிய பதிலளித்தனர். 


அவர்கள் கொடுத்துள்ள விவரங்களின் படி, ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டிய ஊதியம் மற்றும் பொருட் செலவுகளுக்கான தொகை இந்த நிதியாண்டில் மட்டுமே ரூ.14,603 கோடி ஒன்றிய அரசு மாநிலங்களுக்கும் ஒன்றிய பிரதேசங்களுக்கும் கொடுக்காமல் நிலுவை வைத்திருக்கிறது. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் ரூ. 464.01 கோடி நிலுவை வைத்துள்ளது. 

image.png


மேலும் கடந்த 2020-21 நிதியாண்டிலிருந்து 2024-25 நிதியாண்டு வரையிலான ஐந்தாண்டுகளில் இந்த திட்டத்தின் மூலமாக  வேலை வாய்ப்புகள் பெற்றவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்திருக்கிறது. 2020-21 நிதியாண்டில் 11.17 கோடி நபர்கள் பயன்பெற்று வந்த நிலையில் கடந்த 2024-25 நிதியாண்டில் 7.88 கோடி நபர்கள் மட்டுமே வேலை வாய்ப்பை பெற்றுள்ளார்கள். அதாவது ஊரக வேலை வாய்ப்பை பெறுவதிலிருந்து தொழிலாளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். 



‘Lib Tech’ என்ற கல்விப்புல வல்லுநர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் அடங்கிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி, 2022-23 2023-24 நிதியாண்டுகளில் மட்டும் 8 கோடி தொழிலாளர்கள் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் கனிசமான தொழிலாளர்கள் தவறாக (wrongful deletions) நீக்கப்பட்டிருப்பதாக ‘Lib Tech’ கூட்டமைப்பு தெரிவிக்கிறது. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 84.8 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளார்கள். இதில் தமிழ்நாட்டில் தான் அதிகபட்சமாக 14.7% தொழிலாளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்.


image.png


மேலும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கான (MGNREGA) நிதி தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்திருக்கிறதா என்ற கேள்விக்கு, கடந்த 2024-25 நிதியாண்டில் இத்திட்டத்திற்காக 86,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், இதுவே இந்த திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியில் அதிகமானது என்றும் ஒன்றிய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மை நிலவரம் வேறு மாதிரியானதாக இருக்கிறது. 


எந்தவொரு அரசு திட்டத்திற்கும் குறிப்பிட்ட ஒரு நிதியாண்டில் ஒதுக்கப்படும் நிதியை ’budget estimate’ என்றும் அந்த திட்டத்திற்கு நடைமுறையில் செலவு செய்யப்படும் நிதியை ’revised estimates’ என்று சொல்வார்கள். இந்த ’revised estimates’ பட்ஜெட்டின் போது அந்த திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியைவிட அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம். 


தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு பட்ஜெட்டின் போது ஒதுக்கப்படும் நிதியைவிட அதிகமாகவே நடைமுறையில் செலவு செய்யப்பட்டிருக்கிறது. 2020-21 நிதியாண்டில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்காக நடைமுறையில் ரூ.111,170.86 கோடி செலவு  (revised estimates) செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு நிதியாண்டு 2021-22ல் இத்திட்டத்திற்கு ரூ.73,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. நடைமுறையில் தேவைப்படுவதை விட ஒன்றிய அரசு குறைவான நிதியையே ஒதுக்குகிறது என்பது இதிலிருந்து தெரிய வருகிறது. 


image.png


‘People's Action for Employment Guarantee (PAEG)’ என்ற அமைப்பு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் குறித்து செய்த ஆய்வின் படி, 2023-24 நிதியாண்டில் இந்தியா முழுவதும் குடும்பத்திற்கு ஒருவருக்கு 100 நாட்கள் வேலையை உறுதி செய்ய ரூ.2.72 லட்சம் கோடி தேவைப்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் சராசரியாக 2023-24 நிதியாண்டில் 52 நாட்களுக்கு தான் வேலை கொடுக்க முடிந்தது. இந்த சராசரி 2024-25 நிதியாண்டில் 50 நாட்களாக இருந்தது. 


image.png


இதிலிருந்து, ஊரக அளவில் தேவைக்கு ஏற்ப சராசரி வேலை நாட்கள் உயர்த்தப்படவில்லை என்பதோடு, அதற்கு தேவையான நிதியையும் ஒன்றிய அரசு முழு அளவில் ஒதுக்கீடு செய்யவில்லை என்பது தெரியவருகிறது.


மேலும், மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதி ஒவ்வொரு ஆண்டும் நிலுவை வைக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்டுள்ளதன் படி, கடந்த நிதியாண்டில் தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டிய ஊதியம் மற்றும் பொருட் செலவுகளுக்காக மாநிலங்களுக்கு கொடுக்கவேண்டிய தொகை மொத்தமாக ரூ.14,603 கோடி நிலுவை வைத்திருக்கிறது ஒன்றிய அரசு. 


இதேபோல் கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி தொழிலாளர்களுக்கான ஊதியம், பொருட்களுக்கான செலவுகள், நிர்வாக வேலைகளுக்கான செலவுகள் என மொத்தமாக ரூ.22,563 கோடி மாநிலங்களுக்கு நிலுவை வைத்திருந்தது ஒன்றிய அரசு. அதேநேரத்தில் 2024-25 நிதியாண்டில் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் ரூ.86,000 கோடி ஆகும். இதில் நான்கில் ஒரு பங்கிற்கும் மேலாக (அதாவது 25 சதவீதத்திற்கும் மேலாக) முந்தைய ஆண்டின் நிலுவைத் தொகைக்கே சென்றுவிடும். மீதமிருக்கும் நிதியைக் கொண்டு அந்த ஆண்டில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை முன்னெடுக்கவேண்டும். 


மேற்கூறிய விவரங்களிலிருந்து, மோடி ஆட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு தேவையானதைவிட குறைவாக நிதி ஒதுக்குவது, மாநிலங்களுக்கு கொடுக்கவேண்டிய நிதியை நிலுவை வைத்திருப்பது போன்ற காரணங்களால் இந்த திட்டத்தை நம்பியிருக்கும் கிராமப்புற மக்களுக்கு பெரும் துன்பங்களை கொடுப்பதாக இருக்கிறது.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை