இந்தியாவில் பட்டினியும் ஊட்டச்சத்துக் குறைபாடும்!
மூன்று வேளை உணவு என்பதைத் தாண்டி பட்டினியின் பல்வேறு பரிமாணங்களை முழுமையாக புரிந்துகொள்ளுதல் முக்கியமானது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட உலக பட்டினிக் குறியீடு (Global Hunger Index ‘GHI’) தரவரிசையில் இந்தியா மொத்தமுள்ள 127 நாடுகளில் 105ஆவது இடத்தை பிடித்துள்ளதாக செய்திகள் வெளியானது. இந்தியாவின் பட்டினி நிலை ’தீவிரமானதாக’ இருப்பதாகவும் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இந்தியா 111ஆவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முந்தைய ஆண்டு உலக பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்ட போது, இந்திய அரசாங்கம், இந்த குறியீடு கணக்கிடுவதற்காக கடைபிடிக்கப்பட்ட முறையியல் (Methodology) குறித்து கேள்வி எழுப்பியது. குறைந்த நபர்களிடம் மட்டுமே எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு விவரங்களை கொண்டு இந்த குறியீடு வழங்கப்பட்டதாக கூறியது. ஆனால், இந்தியா போன்ற உறுப்பு நாடுகளிடம் இருந்து பெற்ற தரவுகளின் அடிப்படையில்தான் GHI வரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுவதாக அந்த அறிக்கையை எழுதியவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
உலக பட்டினிக் குறியீடு என்பது நான்கு முக்கிய அளவுருக்களை (Parameters) கொண்டு கணக்கிடப்படுகிறது.
ஊட்டச்சத்து குறைபாடு (Undernourishment): மோதுமான அளவு ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காமல் இருக்கும் மக்கள் பிரிவினரை இது குறிப்பிடுகிறது.
குழந்தைகளின் குறைவளர்ச்சி (Child Wasting): ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தங்கள் உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது. இது கடுமையான (Acute) ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படக்கூடியது.
குழந்தைகளின் தடைவளர்ச்சி (Child Stunting): ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தங்கள் வயதுக்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது. இது நீண்டகால (Chronic) ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படக்கூடியது.
குழந்தை இறப்பு விகிதம் (Child Mortality): ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறந்து போவது பற்றிய கணக்கீடு. இது போதுமான அளவு ஊட்டச்சத்தும், ஆரோக்கியமான சூழலும் இல்லாத நிலையை இது பிரதிபலிக்கக் கூடியது.
இதிலிருந்து, பட்டினி என்பதை மூன்று வேளை உணவு, வேலை செய்வதற்கு தேவையான கலோரியின் அளவு என்று சுறுக்கிப் பார்க்காமல், பல்வேறு பரிமாணங்களில் இருந்து பட்டினியை அணுகுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடியும். இது பட்டினி, அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகியவை பற்றிய முழுமையான புரிதலை அடைவதற்கு உதவுவதாக இருக்கும். இந்திய மக்கள் தொகையில் சுமார் 13% பேர் நீண்டகால ஊட்டச்சத்து குறைபாட்டால் (chronic undernourishment) பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்திய அரசாங்கம் தாங்கள் பொது விநியோக முறையின் (Public Distribution System) கீழ் செயல்படுத்தி வரும் அரிசி, கோதுமை, பருப்பு வழங்கலை இந்த ஆய்வு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று இந்திய அரசாங்கம் குற்றம் சாட்டுவது பொருத்தமற்றது என்பதை புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், பொது விநியோக முறை என்று சொல்லப்படக்கூடிய ரேசன் முறையில் கொடுக்கப்படும் உணவுப் பண்டங்கள் ஒரு மனிதன் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கு தேவையான சக்தியை கொடுக்கும் கலோரியை வழங்குவது பற்றிய கண்ணோட்டத்தை மட்டுமே கொண்டுள்ளது. இரும்பு, மெக்னீசியம், விட்டமின்கள் போன்ற நுன்னூட்டச் சத்துகளை இவற்றால் தரமுடியாது. குழந்தைகளிடம் இருக்கும் குறை வளர்ச்சிக்கும், தடை வளர்ச்சிக்கும் இந்த நுன்னூட்டச் சத்துகளின் குறைபாடு முக்கிய காரணமாக இருக்கிறது. விட்டமின், தாது சத்துகள் போன்றவற்றின் குறைபாட்டால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைவதுதான் நோய் தொற்றுகளால் பல குழந்தைகள் இறந்து போவதற்கு மறைமுக காரணமாக இருக்கிறது.
State of Food Security and Nutrition in the World (SOFI) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இந்தியாவில் 53% பெண்கள் இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது உலகிலே மிக அதிகமான எண்ணிக்கையாகும். கர்ப்பிணிப் பெண்கள் இரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் பிறக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்புகள் வர அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. இந்த இரத்த சோகை நோயும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் தொடர்புடையதுதான்.
இரும்பு, ஃபோலைட், துத்தநாகம், விட்டமின்கள் போன்ற நுன்னூட்டச் சத்துகள் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்பு ’மறைமுக பட்டினி (Hidden Hunger)’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ’மறைமுக பட்டினியால்’ இந்தியாவில் 80% இளம் பருவத்தினர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேற்கூறிய தரவுகள் அனைத்தும் இந்தியாவில் நிலவி வரும் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய உண்மை நிலையை விவரிக்கிறது. உலக பட்டினிக் குறியீட்டை கணக்கிட பயன்படுத்தப்பட்ட முறையியல் பற்றி சமூக பொருளாதார அறிஞர்களுக்கு சில மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், பட்டினியை பன்முகத்தன்மையுடன் அது அணுகுவதாக ஒத்துக்கொள்கிறார்கள். மேலும், கணக்கிட பயன்படுத்தப்பட்ட முறையியல் பற்றி சச்சரவு செய்வதை விட்டுவிட்டு இந்தியாவின் பட்டினி நிலையை கணக்கில் கொண்டு ஆக்கப்பூர்வமான கொள்கைகளை வகுக்கவேண்டும் என்ற கருத்தையும் தெரிவிக்கிறார்கள். ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம், உலகிலே மூன்றாவது பெரிய பொருளாதாரம் போன்ற வளர்ச்சி இலக்குகள் பற்றி பேசுவதற்கு முன்னர் இந்தியாவின் இந்த பட்டினிப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டுய ஒன்று.