YouTurn

தமிழ்நாட்டைப் பயங்கரவாத மாநிலமாகச் சித்தரிக்க முயல்கிறதா பாஜக?

தமிழ்நாட்டைப் பயங்கரவாத மாநிலமாகச் சித்தரிக்க முயல்கிறதா பாஜக?
பெங்களூர் அருகேயுள்ள ராமேஸ்வரம் கஃபே-வில் கடந்த 1ம் தேதி குண்டு வெடித்ததில் சுமார் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாகப் பெங்களூர் காவல் துறை 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 8 தனிப்படைகள் மூலம் குற்றவாளியைத் தேடி வந்தனர். இந்த வழக்கு மார்ச் 3ம் தேதி தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது

இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவரின் நெருங்கிய நண்பர் எனக் கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் துணி வியாபாரம் செய்துவரும் ஷபீர் என்பவரை தேசிய புலனாய்வு முகமை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தது. அவரை தொடர்ந்து பெங்களூருவில் மினாஸ், ஷயீத் சமீல், அனஷ்த் இக்பால், ஷா ரஹ்மான் ஆகியோரையும் NIA அதிகாரிகள் கைது செய்து 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.

ஆனால், இச்சம்பவம் குறித்துக் கடந்த 19ம் தேதி ஒன்றிய வேளாண் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே (பாஜக) செய்தியாளர்களிடம் பேசும் போது, "தமிழகத்தில் பயிற்சி பெற்றவர்கள் கர்நாடகாவுக்கு வந்து எங்கள் (கர்நாடகா) ஹோட்டலில் வெடிகுண்டுகளை வைக்கிறார்கள்" என்று கூறினார். 

[video width="848" height="478" mp4="https://d2y0rn4f1ve9hm.cloudfront.net/2024/03/ssstwitter.com_1710856130860.mp4"][/video]

இவ்வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், எவ்வித அதிகாரப் பூர்வ தகவல்களும் இன்றி அமைச்சர் இப்படிப் பேசியதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர். 

எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து ஷோபா தனது எக்ஸ் பக்கத்தில், இது தொடர்பாக மன்னிப்பு கேட்பதாக ஒரு பதிவிட்டார். அப்பதிவில் ‘எனது கருத்துக்கள் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தொடர்புடைய கிருஷ்ணகிரி வனப்பகுதியில் பயிற்சி பெற்றவர்களை நோக்கியது மட்டுமே’ என்றுள்ளது. 



ஆனால், ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டவர்கள் தமிழ்நாடு கிருஷ்ணகிரி வனப்பகுதியில் பயிற்சி பெற்றவர்கள் என எவ்வித அதிகாரப் பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. அப்படி இருக்கும் போது எதன் அடிப்படையில் ஒன்றிய பாஜக அமைச்சர் இப்படிப் பேசினார் என்கிற கேள்வி எழுகிறது. 

தேர்தல் நடத்தை விதி மீறலும் இடைக்காலத் தடையும் : 

இந்நிலையில் இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் ஷோபா கரந்தலஜே பேசி இருப்பது, தேர்தல் நடத்தை விதி மீறல் என திமுக  சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கத் தலைமைத் தேர்தல் ஆணையம் கர்நாடகா தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டது. 



ஆனால், தேர்தல் நேரம் என்பதால் இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டுமெனக் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஷோபா மனுத்தாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து நேற்றைய தினம் உத்தரவிட்டார். 

தேர்தல் நடத்தை விதி மீறல் என வெளிப்படையாகத் தெரிந்தும் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படாதது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம். 

இதற்கிடையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் கஃபேவில் இருந்து சில நிமிடங்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் வெளியேறியதை NIA அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். எனவே அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், அவர் அணிந்திருந்த தொப்பி அங்குள்ள குப்பைத் தொட்டியில் வீசியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

மேற்கொண்டு அதைக் கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்ட NIA, அது சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வாங்கப்பட்டது. அந்த தொப்பி அணிந்த நபர் கர்நாடக மாநிலம் ஷிவமோகா பயங்கரவாத குழுவை சேர்ந்த முஸாவிா் ஹூசைன் ஷாசிப். அந்த தொப்பியை அவனது கூட்டாளி அப்துல் மாத்தேன் தாஹா சென்னையில் வாங்கியது. இவர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர் என்கிற தகவல்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். 

யார் இவர்கள் : 

கடந்த 2022ம் ஆண்டு பெங்களூரில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் ஷிவமோகா பயங்கரவாத கும்பல் தொடர்புடையது எனக் கண்டறியப்பட்டது. இச்சம்பவத்திற்கு முக்கிய காரணமாக இருந்த மாஸ் முனீர் அகமது உட்பட 9 பேரை NIA கைது செய்ய முயன்றது. அதில் இரண்டு பேர் தப்பித்துள்ளனர். அவர்கள்தான் முஸாவிா் ஹூசைன் ஷாசிப் மற்றும் அப்துல் மாத்தேன் தாஹா

அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் மாஸ் முனீர் அகமதிற்கு ஷிவமோகா குழுவைப் பற்றி அனைத்து தகவல்களும் தெரியும் என்பதால், முஸாவிா் ஹூசைன் ஷாசிப் மற்றும் அப்துல் மாத்தேன் தாஹா பற்றி அவனிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

இதில் யாரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கிடையாது. கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் உள்ளனர். அவர்கள் மீது முன்னரே NIA-வில் வழக்கும் உள்ளது. தமிழ்நாட்டிற்கு வந்தார்கள் என்பதால் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்வது எந்த வகையில் சரியாக இருக்கும். 

அதுவும் அதிகாரப் பூர்வ தகவல்கள் வெளியாவதற்கு முன்னர் அமைச்சர் எதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் குண்டு வெடிப்புக்குக் காரணம் எனப் பேசினார்? ஒரு வேலை அமைச்சர் பேசிவிட்டார் என்பதற்காக அதற்கு ஏதுவாக தேசிய புலனாய்வு அறிக்கை வெளியிடுகிறதா என்கிற சந்தேகமும் எழுகிறது. ஏனென்றால் பாஜக தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அம்மாநிலத்தில் இந்துக்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனத் தொடர்ந்து பொய்யான பிம்பத்தைச் சித்தரிக்க முயன்று வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகத் தேர்தல் வருவதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைப் பயங்கரவாதிகளில் நகரமாகச் சித்தரிக்க முயல்கிறதா என்கிற சந்தேகம் எழுகிறது. 
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை