விபத்துகளில் ஊனமுறும் மைனர்கள்! இழப்பீடூ வழங்குவது பற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு!
விபத்தில் ஊனமுற்ற சிறார்களுக்கான நிவாரணத் தொகையை கணக்கிடும் போது, அவர்களை ஊதியம் ஈட்டாத நபராக (non-earning individual) கருதக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாலை விபத்தில் நிரந்தரமாக ஊனமுற்ற சிறார்களுக்கான நிவாரணத் தொகையை கணக்கிடும் போது, அவர்களை ஊதியம் ஈட்டாத நபராக (non-earning individual) கருதக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் விபத்தில் நிரந்தரமாக ஊனமுற்ற சிறார் ஒருவருக்கான இழப்பீட்டு தொகையை ரூபாய். 8.65 லட்சத்தில் இருந்து ரூபாய். 35.90 லட்சமாக உயர்த்தி தீர்ப்பளித்துள்ளது.
சமீபத்தில், இழப்பட்டு தொகை கணக்கிடும் போது வருமான இழப்பை புறக்கணித்து, ஒரு சிறாரை வருமானம் ஈட்டாதவராகக் கருதி இழப்பீடு வழங்கியது குஜராத் உயர் நீதிமன்றம். இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டு வந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது.
பேபி சாக்ஷி கிரியோலா vs மன்சூர் அகமது சைமன் வழக்கை முன்மாதிரியாக கொண்டு, அந்த மாநிலத்தின் திறனுள்ள தொழிலாளருக்கான குறைந்தபட்ச ஊதியத்தை அடிப்படையாக கொண்டு வருமான இழப்பை கணக்கிடும் படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் குழந்தைக்கு விபத்து நடந்த 2012ஆம் ஆண்டில் 8 வயது ஆகும். அப்போது குஜராத் மாநிலத்தில் திறனுள்ள உழைப்புகான குறைந்தபட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூபாய். 227.85 ஆகும். இதனடிப்படையில் மாதம் ரூபாய். 6836 என்று வருகிறது. இதில் எதிர்கால ஊதிய உயர்வு ஆகியவற்றை கணக்கில் கொண்டு 40% உயர்த்தியும், குழந்தையின் வயதை கணக்கில் கொண்டு 18 பெருக்கல் செய்தும் (multiplier) இழப்பீட்டு தொகை கணக்கிடப்பட்டது. மேலும், அவர் அனுபவித்த வலி மற்றும் துயரங்களுக்காக 5 லட்சமும், எதிர்காலத்தில் திருமணத்தில் எதிர்கொள்ளும் இருக்கும் சிக்கலுக்காக 3 லட்சமும், செயற்கை கால் பொருத்த ஆகும் செலவுகளுக்காக 5 லட்சமும் சேர்த்து இழப்பீட்டு தொகை கணக்கிடப்பட்டதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
பொதுவாக இந்தியாவில் சாலை விபத்துகளில் காயமடைந்தவர்கள், ஊனமுற்றவர்கள், இறந்தவர்களுக்கான இழப்பீட்டு தொகையை மோட்டார் வாகன சட்டம் - 1988 பிரிவு 165 (1)-ன் படி ‘Motor Accident Claim Tribunal’ என்ற தீர்ப்பாயம் தான் தீர்மானிக்கும். இந்த இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்டவரின் வயது, வேலை, ஊதியம், எந்த அளவு பாதிப்படைந்துள்ளார் என்பதை பொறுத்து கணக்கிடப்படும்.
இதில் விபத்தில் காயமடைந்தவர்கள் அல்லது ஊனமுற்றவர்களின் ஊதியம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் போது, இது ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்திருக்கும் வாய்ப்பையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஒருவரின் ஊதியம் நிலையாக இருப்பதில்லை. இதனால், விபத்து நடக்கும் போது இருந்த அவர்களது வயதை கணக்கில் கொண்டு அவர்களது ஆண்டு வருமானத்தில் 40 அல்லது 50% உயர்த்தவேண்டும். மேலும் அவர்களது வயதை கணக்கில் 17 அல்லது 18 என பெருக்கல் (multiplier) செய்யவேண்டும். இதனையெல்லாம் சேர்த்து தான் இழப்பீட்டுத் தொகையை கணக்கிட வேண்டும்.
இந்த வகையில் இழப்பீடுத் தொகை கணக்கிடும் போது, விபத்தில் பாதிக்கப்பட்ட அல்லது ஊனமுற்ற சிறார்களை ஊதியம் ஈட்டாத நபர்களாக (non-earning individual) கணக்கில் கொள்ளும் நடைமுறை உள்ளது. இதனை தவறு என்று சுட்டிக்காட்டி ஏற்கனவே பல நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. ஏனெனில் சிறார்கள் வேலைக்கு சென்று ஊதியம் ஈட்டும் நிலையில் இருப்பதில்லை. இதனால், சிறார்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இழப்பீட்டு தொகையை கணக்கிடும் போது, இந்த விபத்து சம்பவம் நடைபெற்ற மாநிலத்தில் திறனுள்ள தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை கணக்கில் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதே தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 2022ஆம் ஆண்டில் ஒரு வழக்கில் வழங்கியுள்ளது. மேலும் சிறார்கள் விபத்தில் ஊனமுறுவதன் காரணமாக எதிர்காலத்தில் அவர்களுக்கு திருமணம் நடப்பதில் சிக்கல் ஏற்படுவதால் அதற்கும் சேர்த்து இழப்பீடு வழங்கவேண்டும் என்று அந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
மேலும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் ஊதிய விவரங்கள் அவர்கள் தரப்பிலிருந்து சரியான வகையில் தாக்கல் செய்யப்படவில்லை என்றால், விபத்து நடந்த மாநிலத்தில் நிலவிலில் இருக்கும் குறைந்தபட்ச ஊதியம் பற்றிய விவரங்களை சமர்பிக்க வேண்டிய பொறுப்பு எதிர் தரப்பிற்கு (குறிப்பாக காப்பீடு நிறுவனத்திற்கு) தான் உள்ளது என வழிகாட்டுதல் கொடுத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
இந்த உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்களை அனைத்து மாநிலத்தின் உயர் நீதிமன்றங்களுக்கும் அனுப்ப வேண்டும் என்றும் இந்த உயர் நீதிமன்றங்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள ‘Motor Accident Claims Tribunal’ என்ற தீர்ப்பாயங்களுக்கு இதனை அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.