YouTurn

உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பிற்கு முக்கிய காரணமே அதிக உப்பு தான் : WHO எச்சரிக்கை !

உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பிற்கு முக்கிய காரணமே அதிக உப்பு தான் : WHO எச்சரிக்கை !
லக சுகாதார நிறுவனம் "உயர் இரத்த அழுத்தம் காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள்" குறித்த தனது முதல் அறிக்கையை கடந்த 2023 செப்டம்பர் 19 அன்று வெளியிட்டது. பல்வேறு பரிந்துரைகளுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், உயர் இரத்த அழுத்தம்(High BP) உள்ள 5 பேரில் 4 பேர் சரியான சிகிச்சையைப் பெறுவதில்லை என்றும், உலகளவில் அனைத்து நாடுகளிலும் இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், 2023 மற்றும் 2050 க்கு இடைப்பட்ட காலங்களில் 76 மில்லியன் இறப்புகளை தடுக்கலாம் என்றும் இதில் கூறியுள்ளது.



உலகில் மூன்றில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. பக்கவாதம், மாரடைப்பு, இதய செயலிழப்பு, சிறுநீரக பாதிப்பு மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகள் உயர் இரத்த அழுத்தத்தாலேயே ஏற்படுகின்றன. இத்தகைய உயர் ரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணம், மோசமான உணவு முறைகளே. ஆரோக்கியமற்ற விகிதங்களில், பல ஆரோக்கியமற்ற பானங்களை அதிகப்படியாக அருந்துதல் மற்றும் பெரும்பாலும் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட (industrially prepared food) உணவுகளையே எடுத்துக்கொள்ளுதல் ஆகியவை உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

மேலும் முழு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை மோசமான விகிதங்களில் உட்கொள்ளுதல், உப்பு, இனிப்புகள், தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள், குறிப்பாக டிரான்ஸ் (trans) மற்றும் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களை (saturated fatty acids) அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்ளுதல் ஆகியவையும் உடலுக்கு ஆபத்தையே விளைவிக்கும். இதன் மூலம் உடலில் சோடியம் அதிகளவில் சேர்க்கப்படும். பொதுவாக இரத்தத்தில் சோடியம் அதிகமாக இருப்பது, ஹைப்பர்நெட்ரீமியா என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக பல பொருளாதார நாடுகளிலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பின் அளவு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இன்றும் உப்பின் பயன்பாடு அதிகளவிலேயே உள்ளது.

இதன் காரணமாக Non-Communicable Diseases (NCD) என்று சொல்லப்படுகின்ற தொற்றாத நோய்களின் (தொற்று நோய்களை தவிர்த்து ஏற்படும் மற்ற நோய்கள்) எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. 21ம் நூற்றாண்டில், இத்தகைய NCD நோய்களே அகால மரணங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளன. முதன்மையான இரண்டு NCD-களான இருதய நோய் மற்றும் பக்கவாதம் காரணமாக மட்டும் உலகளவில் ஆண்டுதோறும் 12 மில்லியன் அகால மரணங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக இத்தகைய 85% அகால மரணங்களின் காரணமாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகள், $500 பில்லியன் பொருளாதார இழப்பை சந்திக்கின்றன.

பொதுவாக சோடியம் குளோரைடு என்று அழைக்கப்படும் உப்பில், சுமார் 40% சோடியம் மற்றும் 60% குளோரைடு உள்ளன. இது சுவையை கூட்டுவதோடு, உணவை பதப்படுத்தவும் பயன்படுகிறது. இத்தகைய உப்பு நிறைந்த உணவுகளே, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது என்பதற்கு ஏராளமான அறிவியல் சான்றுகள் உள்ளன. குறிப்பாக உப்பு உட்கொள்ளும் அளவை ஒரு நாளைக்கு 1 கிராம் (ஒரு நபருக்கு) என குறைத்து எடுத்துக்கொண்ட நாடுகளில், பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் ஏற்படும் இறப்புகள் 7 சதவீதத்துக்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளன.

மேலும் கிழக்கு மத்திய தரைக்கடல் பிராந்திய தரவுகள் படி, பெரும்பாலான நாடுகளில் சராசரியாக ஒரு நபருக்கு தினசரி உப்பு நுகர்வு 10 கிராமாக உள்ளது, இது WHO பரிந்துரையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இதே போன்று அமெரிக்காவில், உயர் இரத்த அழுத்தம் பத்தில் ஒன்பது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இருப்பதால், அவர்களின் வாழ்க்கையை இது சில நேரங்களில் பாதிக்கிறது. மேலும் இது அங்குள்ள சுகாதார அமைப்பு மற்றும் பொருளாதாரத்தின் மீது பெரும் சுமையை ஏற்படுத்துவதாகவும் கூறுகிறது.



இருதய நோய் (Cardiovascular disease) :

இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிசின், உப்பைக் குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம் என்று கூறியுள்ளது. சோடியம் பற்றிய ஆராய்ச்சியை ஆய்வு செய்த பிறகு இந்த முடிவுவை எட்டியுள்ளது. இத்தகைய உயர் இரத்த அழுத்தமே, பாதி இதய நோய்களுக்கும் (CVD), மூன்றில் இரண்டு பங்கு பக்கவாத நோய்களுக்கும் காரணமாக உள்ளது. சீனாவில், உயர் இரத்த அழுத்தம் ஒரு வருடத்திற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளுக்கு காரணமாக உள்ளது. 

நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic kidney disease) :

உயர் இரத்த அழுத்தமே இருதய நோய் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் ஆகிய இரண்டிற்கும் ஒரு குறிப்பிடத்தக்க ஆபத்து காரணியாக உள்ளது. இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் சோடியத்தை குறையுங்கள் என்று CKD நோயாளிகளுக்கு எப்போதும் ஒரு பொதுவான பரிந்துரையாக சொல்லப்பட்டு வருகிறது. 

ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) :

நீங்கள் உண்ணும் உப்பின் அளவு அதிகரிக்கும் போது, சிறுநீர் கழிக்கும் சமயங்களில் உங்கள் உடல், அதிகளவு கால்சியத்தை இழக்கும். இதன் மூலம் இரத்தத்தில் கால்சியம் அளவு குறைந்து விட்ட பிறகு, எலும்புகளிலிருந்தும் கால்சியம் வெளியேற ஆரம்பிக்கும். எனவே உப்பிற்கும், கால்சியம் இழப்பிற்கும் அதிக தொடர்புகள் உண்டு.

புற்றுநோய் (Cancer) :

உப்பு, சோடியம் அல்லது உப்பு நிறைந்த உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது வயிற்று புற்றுநோயின் அதிகரிப்பிறகு காரணமாக உள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது. 

டேபிள் உப்பு (table salt) "இயற்கை" உப்புகளை விட ஆரோக்கியம் குறைந்ததா ?

பொதுவாக கடல் நீர் ஆவியாதல் மற்றும் உப்புச் சுரங்கம் ஆகியவற்றின் மூலம் உப்பு தயாரிக்கப்படுகின்றன. இரண்டு வகையான உப்புகளும் சோடியம் குளோரைடால் ஆனவை. சுவைக்காகவே வெவ்வேறு உப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஊட்டச்சத்துக்களின் அடிப்படையில் மிகவும் சிறிய மாறுபாடே உள்ளது. குறைவாக பதப்படுத்தப்பட்ட உப்புகளில் சிறிய அளவிலான தாதுக்களே உள்ளன. இவை குறிப்பிடத்தக்க ஊட்டச்சத்து நன்மைகளை வழங்குவது இல்லை. மேலும் டேபிள் உப்பு, நிலத்தடியில் உள்ள உப்பு சுரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இவற்றில் உள்ள அசுத்தங்களை அகற்றும் போது, தாதுக்களும் அகற்றப்படுகின்றன.

சோடியம் குறைப்பு தொடர்பாக FDA வெளியிட்ட அறிக்கை:

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி வெளியிட்ட புதிய தன்னார்வ வழிகாட்டுதல், அடுத்த இரண்டரை ஆண்டுகளில் வணிக ரீதியாக பதப்படுத்தப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட உணவுகளில் சோடியத்தை படிப்படியாகக் குறைக்க உணவுத் துறையை ஊக்குவிக்கிறது. அதன்படி, அமெரிக்க மக்கள் தங்கள் தினசரி சோடியத்தின் சராசரி அளவை 3,400 mg/day லிருந்து 3,000 mg/day வரையாக குறைக்கும் படி இந்த அறிவிப்பு உள்ளது.

உணவில் உப்பு மற்றும் சோடியத்தின் அளவை கணக்கிடுதல் (Sodium and salt converter) :

பட்டியலிடப்பட்டுள்ள உணவுப் பொருட்களில் உப்பு மற்றும் சோடியத்தின் அளவு எவ்வளவு உள்ளது என்பதை கணக்கிடவும், உப்பை சோடியமாக மாற்றவும் உதவுகிறது.

எ.கா, 5 கிராம் உப்பு = 2000 mg சோடியம் = 87 mmol சோடியம் = 87 mEq சோடியம்

சோடியம் பற்றிய WHO வழிகாட்டுதல்கள் ஆரோக்கியமான உட்கொள்ளலுக்கான வரம்புகளை வழங்குகின்றன மற்றும் தொற்றாத நோய்கள் ஏற்படுவதை தடுக்க உணவுமுறைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் கோடிட்டுக் காட்டுகின்றன. இந்த வழிகாட்டுதல்கள், ஆரோக்கியமற்ற உணவைச் சந்தைப்படுத்துவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க புதிய கொள்கைகளை வடிவமைக்கவும், ஏற்கனவே உள்ளவற்றை வலுப்படுத்தவும் உலக நாடுகளுக்கு வழிகாட்டுகிறது.

யுனைடெட் கிங்டம் (UK) மற்றும் பின்லாந்து ஆகியவை உப்பு உட்கொள்ளலைக் குறைக்க பயனுள்ள முயற்சிகளை முன்னெடுத்துள்ளன.

ஃபின்லாந்தில், அரசாங்கம் தலைமையிலான கல்வித் திட்டம், உப்பு-லேபிளிங் சட்டம் மற்றும் உணவுத் தொழிலின் மீதான அழுத்தம் ஆகியவை உப்பு உட்கொள்ளலில் முப்பது சதவிகிதம் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. இது ஒரு நாளைக்கான பயன்பாட்டை 12,000 மில்லி கிராம்களில் இருந்து இன்று சுமார் 9,000 மில்லிகிராம்களாக மாற்றியுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்குள் சோடியம் உட்கொள்வதை மக்கள் 30 சதவீதமாவது குறைக்க வேண்டும். ஆனால் இத்தகைய இலக்கை அடையும் பாதையில் உலகம் இல்லை என்பதே உண்மை.

எனவே சோடியம் குறைப்பு தொடர்பான கொள்கைகளில் வளர்ச்சி, இது குறித்த கண்காணிப்புகள் மற்றும் மதிப்பீடுகள் ஆகியவை அரசாங்கத்தால் முறையாக வழிநடத்தப்பட வேண்டும்..!

ஆதாரங்கள்:

https://www.fda.gov/food/food-additives-petitions/sodium-reduction

https://www.who.int/news/item/19-09-2023-first-who-report-details-desastating-impact-of-hypertension-and-ways-to-stop-it

https://www.who.int/news-room/fact-sheets/detail/salt-reduction

https://www.emro.who.int/noncommunicable-diseases/highlights/reducing-salt-improves-health.html

https://www.hsph.harvard.edu/nutritionsource/salt-and-sodium/sodium-public-health-concerns/

https://www.hsph.harvard.edu/nutritionsource/salt-and-sodium/#:~:text=Recommended%20Amounts&text=For%20men%20and%20women%2014,is%201%2C500%20milligrams%20a% 20 நாள்

https://www.who.int/news/item/09-03-2023-massive-efforts-needed-to-reduce-salt-intake-and-protect-life
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை