இந்தியாவில் சாலை விபத்துகளும் மரணங்களும்! அதிர்ச்சியளிக்கும் எண்ணிக்கைகள்!
உலகிலே சாலை விபத்துகளில் அதிகமான நபர்கள் உயிரிழக்கும் நாடாக இந்தியா இருக்கிறது.
உலகளவில் இரண்டாவது மிகப்பெரிய சாலை வலைப்பின்னலை கொண்டுள்ள நாடு இந்தியா. தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள், மாவட்டங்களில் உள்ள பிரதான சாலைகள், கிராமப்புறங்களில் உள்ள உள்ளூர் சாலைகள் என பல்வேறு வகையான சாலைகளைக் கொண்ட சிக்கலான வலைப்பின்னலைக் கொண்ட அமைப்பு இது. இவையனைத்தும் சேர்த்து மொத்தம் 63.45 லட்சம் கி.மீ. நீளம் கொண்டதாகும். இதனால் சாலை விபத்துகளும், அதில் ஏற்படும் மரணங்களும் இந்தியாவில் முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது.
கடந்த 2025 டிசம்பர் மாதம் ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் கொடுத்த விவரங்களின் படி 2024ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் நடந்த சாலை விபத்துகள் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஆகிய குறித்து தெரிந்துக்கொள்ளமுடிகிறது.

அதன்படி, 2024ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 67,526 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் அதிக விபத்துகள் நடந்துள்ளது. அதற்கு அடுத்ததாக, மத்திய பிரதேசத்தில் 56,669 விபத்துகளும் அண்டை மாநிலமான கேரளாவில் 48,834 விபத்துகளும் நடந்துள்ளது. அடுத்ததாக உத்தர பிரதேசத்தில் 46,052 விபத்துகள் நடந்துள்ளது.

அதிக சாலை விபத்துகள் நடந்த மாநிலங்களில் பட்டியலில் உத்தர பிரதேசம் நான்காவதாக இருந்தாலும், சாலை விபத்துகளால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உத்தர பிரதேசத்தில் தான் மிக அதிகமாக இருக்கிறது. 2024ஆம் ஆண்டில் உத்தர பிரதேசத்தில் நடந்த 46,052 விபத்துகளில் 24,118 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அடுத்ததாக தமிழ்நாட்டில் 18,449 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
உத்தர பிரதேசம், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் தான் உயிரிழப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. ஏனெனில், மகாராஷ்ட்ராவில் நடந்த 36,118 விபத்துகளில் 15,715 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துகளில் சிக்கியவர்களில் 43.5 சதவீதம் நபர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விகிதம் உத்தர பிரதேசத்தை பொறுத்தவரையில் 52.3 சதவீதமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த விகிதம் 27.3 சதவீதமாக இருக்கிறது.
2022ஆம் ஆண்டிற்கான சாலை விபத்துகள் குறித்த தரவுகளைக் கொண்டு ’The Indian EXPRESS’ வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், விபத்திற்கான முக்கியமான காரணங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வேகமாக வாகனம் ஓட்டுவது (Overspeeding) தான் விபத்துகளுகான முக்கிய காரணமாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேரான சாலைகளிலே (straight roads) பெரும்பாலான விபத்துகள் நடந்திருக்கின்றன. வளைவான சாலைகள், சாலையில் உள்ள குழிகள், சேதமடைந்த சாலைகள் ஆகியவற்றை விட நேரான சாலைகளிலே அதிகமான விபத்துகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு வாகனத்தின் பின்னால் இன்னொரு வாகனம் மோதி (Rear End collision) அதிகமான விபத்துகள் நடந்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக வாகனங்கள் நேருக்கு நேராக மோதி நடந்த விபத்துகள் அதிகமாக உள்ளன. பெரும்பாலான விபத்துகள் பகல் பொழுதில் நல்ல வானிலை நிலவும் போதுதான் நடந்துள்ளது. மழை, மூடுபனி ஆகியவற்றின் போது நடந்த விபத்துகள் நல்ல பகல் பொழுதில் நடந்த விபத்துகளைவிட வெகு குறைவானதுதான். மேலும் இரு சக்கர வாகனங்கள் தான் அதிக அளவிலான விபத்துகளில் சிக்கியிருக்கிறது.

2024ஆம் நடந்த மொத்த சாலை விபத்துகளில் 70.6 சதவீத விபத்துகளும், மொத்த உயிரிழப்புகளில் 69.9 சதவீத உயிரிழப்புகளும் அதிவேகமாக வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு தரவுகளின் படி, தமிழ்நாட்டில் ஏற்பட்ட மொத்த விபத்துகளில் கிட்டதட்ட 70 சதவீத விபத்துகளும் 66 சதவீத உயிரிழப்புகளும் அதிவேகமாக வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டதாகும்.
அதேபோல் சாலையில் உள்ள குழிகள் (Potholes) காரணமாக ஏற்பட்ட விபத்துகளில், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தான் முன்னிலையில் இருக்கிறது. சாலையில் உள்ள குழிகள் (Potholes) காரணமாக கடந்த 2024ஆம் ஆண்டில் உத்தர பிரதேசத்தில் 2,727 விபத்துகளும் 1,369 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. மத்திய பிரதேசத்தில் 1,069 விபத்துகளும் 277 உயிரிழப்புகளும் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் 360 விபத்துகளும் 109 உயிரிழப்புகளும் நடந்துள்ளன.

இந்தியாவில் சாலை வலைப்பின்னல் உலகிலே இரண்டாவது பெரிய வலைப்பின்னல் என்றும் அதில் தேசிய நெடுஞ்சாலை முதல் உள்ளூர் கிராமப்புற சாலைகள் வரை அடங்கும் என்றும் நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். இந்த மொத்த சாலை போக்குவரத்து வலைப்பின்னலில் தேசிய நெடுஞ்சாலையின் பங்கு வெறும் 2.3 சதவீதம் மட்டுமே ஆகும். ஆனால் இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் தான் 36 சதவீதம் விபத்துகள் நடக்கின்றன. அதே நேரத்தில் உலகிலே சாலை விபத்துகளில் அதிகமான நபர்கள் உயிரிழக்கும் நாடாக இந்தியா இருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட சாலை விபத்துகள் 2024ஆம் ஆண்டை விட 2025ஆம் ஆண்டில் 11 சதவீதம் குறைவாகவே நடந்துள்ளது. இது ஒருவகையில் நல்ல முன்னேற்றமாகும்.
இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகமாக நடக்கும் 100 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் சில முக்கிய அம்சங்கள் நமது கவனத்திற்கு வருகிறது. இந்த 100 மாவட்டங்களில் உத்தர பிரதேசத்தில் 20 மாவட்டங்களும், தமிழ்நாட்டிலிருந்து 19 மாவட்டங்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த 100 மாவட்டங்களில் செய்யப்பட்ட ஆய்வில், சாலை விபத்து காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளில் 59 சதவீதம் சாலை விதிகளை மீறியதால் ஏற்பட்டவை அல்ல. இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது, சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டினாலும், சாலையின் மோசமான கட்டமைப்பு காரணமாக தான் பெரும்பாலான விபத்துகள் நடக்கிறது என்பதாகும்.
மேலும் இதில் 53 சதவீத உயிரிழப்புகள் மாலை 6 மணி முதல் நல்லிரவு 12 மணி வரையில் நடந்ததாகும். விபத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலான நபர்கள் தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸ்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இது அரசு செயல்படுத்தும் 108 ஆம்புலன்ஸ்களின் செயலின்மையை காட்டுவதாக இருக்கிறது.
63 சதவீத விபத்துகள் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள சாலைகளில் நடந்துள்ளன. இதிலிருந்து தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் உள்ளூர் சாலைகளின் கட்டமைப்பு தான் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணமாக இருப்பதாக கூறமுடியும். குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் தான் மிக அதிகமான விபத்துகள் நடந்துள்ளன. இந்த இடங்களில் உள்ள சாலை கட்டமைப்புகள், தடுப்புகள், குறியீட்டு பலகைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து மேம்படுத்துவதன் மூலம் விபத்துகளை தடுக்க முடியும்.
2020 பிப்ரவரி மாதம் நடைபெற்ற 3வது உலக சாலைப் பாதுகாப்பு மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாலைப் பாதுகாப்பு குறித்த ஸ்டாக்ஹோம் பிரகடனத்தின் படி, 2030 ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்புகளை 50% குறைக்கவேண்டும் என்று இலக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாயும் கையெழுத்திட்டுள்ளது.
சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் சில செயல்திட்டங்களை முன்வைத்துள்ளது. ஒன்றிய அரசின் NHAI-யும் மாநிலத்தின் பொதுப்பணித் துறையும் இணைந்து அதிகமாக விபத்து நடக்கும் பகுதிகளில் சாலைப் பாதுகாப்பு குறித்த விரிவான ஆய்வை நடத்தி, அப்பகுதிகளில் உள்ள சாலை கட்டமைப்பு சிக்கல்களை கண்டறிய வேண்டும்; விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் போதுமான அளவு காவலர்களை நியமித்து கண்காணிப்பு நடத்தவேண்டும்; விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களில் 75 சதவீதம் வரை அரசு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைகளில் சேர்க்கும் வகையில் இலக்கு நிர்ணயித்து செயல்படவேண்டும்.
மேற்கூறிய செயல்திட்டங்களை கடுமையாக அமல்படுத்தி சாலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் வெகுவாக குறைக்கவேண்டும் என்று சாலை போக்குவரத்து அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.