YouTurn

தேசிய கீதம் பாடுவது பற்றிய ரங்கராஜ் பாண்டேவின் கற்பிதங்கள்!

ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் சட்டப்பேரவையில் தேசிய கீதம் எத்தனை முறை, எப்போது பாடவேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ளும் உரிமை அந்த சட்டப்பேரவைக்கு உள்ளது. இதனை அரசியலமைப்புச் சட்டம் எந்த வகையிலும் கட்டுப்படுத்தவில்லை.

தேசிய கீதம் பாடுவது பற்றிய ரங்கராஜ் பாண்டேவின் கற்பிதங்கள்!

கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழ்நாட்டின் சட்டமன்ற அவையின் புதிய ஆண்டிற்கான தொடக்கக் கூட்டத்தின் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார். இது செய்திகளிலும் பொது சமூகத்தின் மத்தியிலும் விவாதமானது. இந்த வெளிநடப்பிற்கான காரணத்தை விளக்கி ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. 


image.png


’ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் ஆகியோரிடம் தேசிய கீதம் பாட வேண்டுகோள் விடுத்ததாகவும், அந்த வேண்டுகோள் திட்டவட்டமாக மறுக்கப்பட்டதாகவும், இது அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயலாகும் என்றும் இதனால்தான் ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்’ என்றும் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு குறிப்பிடுகிறது. 


இந்த நிகழ்வைப்பற்றி ‘சாணக்யா’ யூட்யூப் தளத்தில் ரங்கராஜ் பாண்டே பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டியில் பாண்டே முன்வைக்கும் அடிப்படையான வாதங்கள், ’ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோர் வருகையின் போது தேசியகீதம் பாட வேண்டுமென்பது அரசியல் அமைப்பு சட்டம் கூறும் வழிமுறையாகும். அரசியல் அமைப்புச் சட்டம் தேசிய கீதம் பாடுவதை ‘Fundamental Duties’ என்று கூறுகிறது.  ஆளுநர் உரை முடிந்த பின்னர் தேசிய கீதம் பாடப்படும் என்பது தமிழ்நாடு சட்டப்பேரவை கடைபிடிக்கும் மரபு மட்டுமே. மரபைவிட அரசியலமைப்பு முதன்மையானது’ ஆகியவைதான்.


image.png


இந்த வாதங்கள் எந்த அளவிற்கு உண்மையானவை என்பதை நாம் விரிவாக பகுப்பாய்வு செய்யவேண்டும்.


முதலில், அரசியல் அமைப்புச் சட்டம் குடிமக்களின் அடிப்படை கடமைகள் எனப்படும் ‘Fundamental Duties’-ல் தேசிய கீதம் பாடுவதை எவ்வாறு வரையறைத்துள்ளது என்பதை காணவேண்டும். இந்திய அரசியலமைப்பின் பிரிவு 51(A)(a) ”அரசியலமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டு, அதன் இலட்சியங்கள் மற்றும் நிறுவனங்கள், தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்தை மதித்து நடப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும்” என்று வரையறைக்கிறது. இது பொதுவாக தேசிய கீதத்தை மதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி குறிப்பாக எதையும் விளக்கவில்லை. குறிப்பாக, தேசிய கீதத்தை அவமதிப்பது என்பதன் வரையறை என்ன என்பதை இது விளக்கவில்லை.


’Prevention of Insults to National Honour Act, 1971’ என்ற சட்டம் இந்திய அரசியலமைப்பு, தேசிய கொடி, தேசிய கீதம் ஆகியவற்றை அவமதிப்பது பற்றிய வரையறை வெளியிடுகிறது. இதில், தேசிய கீதம் பாடுவதை தடுப்பது அல்லது தேசிய கீதம் பாடிக்கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்வது ஆகிய செயல்கள் குற்றமாக பார்க்கப்பட்ட சிறை அல்லது அபதாரம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் சிறிய திருத்தம் செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில், எந்தவொரு நபரும் தேசிய கீதம் பாடப்படும் போது எழுந்து நிற்கவோ அல்லது பாடவோ மறுப்பதும் அவமரியாதை என்று சேர்த்துக்கொள்ளப்படவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது.


image.png


இதிலும் கூட, தேசிய கீதம் பாடப்படும் போது அவமதிக்கப்படுவது பற்றிதான் குறிப்பிடப்படுகிறது. ஆனால், எப்பொழுதெல்லாம் எந்த சூழல்களில் எல்லாம் தேசி கீதம் பாடப்படவேண்டும் என்பது குறித்து ஏதும் சொல்லப்படவில்லை.


தேசிய கீதம் பற்றி உள்துறை அமைச்சகத்தால் கொடுக்கப்பட்ட ஆணையில், ‘அரசு தரப்பு நிகழ்ச்சிகளுக்கு ஆளுநர் (or) லெப்டினன்ட் ஆளுநர் வரும்போதும், நிகழ்ச்சி முடிந்து செல்லும்போதும் தேசிய கீதம் பாடவேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது கட்டாயமாக கடைபிடிக்கவேண்டிய ஒன்றல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


2019ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டும் அரசு விழாவில் பிரதமர் மோடி,  அப்போதைய முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் ஆகியோர்  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியின் போது தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இரண்டுமே பாடப்படவில்லை. 


இது தொடர்பாக வேம்பு என்பவர்  தாக்கல் செய்த மனுவை விசாரித்த  சென்னை உயர் நீதிமன்றம், ’தேசிய கீதம் கட்டாயம் பாட வேண்டும் என்ற thumb rule எதுவும் கிடையாது. இது மரபு சார்ந்த நடைமுறை (customary practice) மட்டுமே’ என்று தீர்ப்பளித்தது. 


இதிலிருந்து தேசிய கீதம் பாடவது பற்றிய உள்துறை அமைச்சகத்தின் ஆணையை, கட்டாயமான ஒன்றாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பது தெளிவு. மேலும், இந்த ஆணையில், ’அரசு தரப்பு நிகழ்ச்சிளில்’ தேசிய கீதம் பாடப்படுவது பற்றி மட்டுமே பேசப்படுகிறது. இதில் சட்டப்பேரவைகள் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை.


image.png


அரசியலமைப்பின் 208ஆவது பிரிவு, ’மாநில சட்டப்பேரவைகள் அதன் நடைமுறை அலுவல்களை செய்யும் வகையில் தன்னுடைய சொந்த விதிகளை வகுத்துக்கொள்ள’ அனுமதிக்கிறது. இதன்படி, ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் சட்டப்பேரவையில் தேசிய கீதம் எத்தனை முறை, எப்போது பாடவேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ளும் உரிமை அந்த சட்டப்பேரவைக்கு உண்டு. 


மேற்கூறிய விவரங்களில் இருந்து, ‘ஆளுநர் வரும் போதும், செல்லும்போதும் தேசிய கீதம் சட்டப்பேரவையில் பாடப்படவேண்டும் என்பது அரசியல் அமைப்பு சட்டம் கூறும் வழிமுறை’ என்று  ரங்கராஜ் பாண்டே சொல்வது உண்மையல்ல என்பது தெளிவாகிறது. இந்த வாதத்தை நிரூபிக்க அவர் நேர்காணலில் சொன்ன தகவல்கள் எல்லாம் அவரது வசதிக்கு ஏற்ப திரிக்கப்பட்டவையாகும். 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை