உயிர் பறிக்கும் சாலைக் குழிகள்! இந்திய சாலைகளின் அவலநிலை!
சாலை குழிகளாலும் மோசமான சாலை கட்டமைப்பு காரணமாகவும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.
கடந்த அக்டோபர் 21ஆம் தேதி தாம்பரத்தில் சாலையில் உள்ள குழியின் (Pothole) காரணமாக, இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து ஜம்புலிங்கம் என்ற 74 வயதான முதியவர் உயிரிழந்தார். சாலையில் உள்ள குழியில் இரு சக்கர வாகனம் தடுமாறிய போது கீழே விழந்த முதியவர் மீது பின்னால் வந்த பேருந்து ஏறியதில் அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தனித்த நிகழ்வல்ல. இந்தியா முழுவதும் இதுபோன்ற சாலைகளில் உள்ள குழிகள் காரணமாக பல விபத்துகள் நடப்பதும், உயிரிழிப்புகள் ஏற்படுவதும் தொடர் கதையாக இருக்கிறது.

இது தொடர்பாக ’THE NEW INDIAN EXPRESS’ வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்று பல அதிர்ச்சிகரமான தகவல்களை சொல்கிறது. ’ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் (MoRTH)’ அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, கடந்த பத்தாண்டுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் உள்ள குழிகளால் ஏற்பட்ட விபத்துகளில் இறந்துபோயுள்ளார்கள். இன்னும் அதிகமான மக்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் வலிகளை சுமக்கும் வகையில் படுகாயமடைந்திருக்கிறார்கள்.
கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டுமே, சாலைகளில் உள்ள குழிகளால் 9,423 விபத்துக்கள் நடந்துள்ளன. இதனால் 3,597 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த விபத்துகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அவை கணிசமான அளவில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால், அந்த ஆண்டில் சாலை குழிகளால் ஏற்பட்ட விபத்துகள் குறைந்திருந்தது. ஆனால் மீண்டும் சாலைக் குழிகளால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்தது. 2023ஆம் ஆண்டில் மட்டும் 4,446 விபத்துகளில் 2,161 பேர் உயிரிழந்துள்ளனர்.
சாலையில் உள்ள குழிகளால் மட்டுமல்ல, மிக மோசமான சாலை கட்டுமமைப்பு காரணமாக மழைக்காலங்களில் அதிகமாக விபத்துகள் ஏற்படுகின்றன. மழை நாட்களில் நடந்த சாலை விபத்துகளை தனியாக கணக்கிட்டு பார்த்தால், 2023ஆம் ஆண்டில் மட்டுமே 13,734 மக்கள் உயிரிழந்துள்ளார்கள். 18,193 பேர் கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், 17,909 பேர் சிறு காயங்களால் ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இந்த மழை நாட்களில் நடந்த விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன. கேரளாவில் உயிரிழப்புகள் ஒப்பீட்டு ரீதியாக குறைவாக இருந்தாலும், இந்தியாவிலே மழை நாட்களில் நடந்த விபத்துகளால் அதிகமாக படுகாயமடைந்தவர்கள் உள்ள மாநிலம் கேரளா தான். இது தவிர மற்ற மாநிலங்களிலும் சிறிய யூனியன் பிரதேசங்களிலும் கூட இந்த மழைக்கால சாலை விபத்துகள் நடந்துள்ளன.
இவையெல்லாம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் விதிவிலக்கின்றி சாலை கட்டமைப்பு மோசமானதாக இருப்பதை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.
தமிழ்நாட்டின் நிலை என்ன?
தமிழ்நாட்டிலும் சாலை குழிகளால், குறிப்பாக மழைக்காலத்தில் அந்தக் குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதன் காரணமாக பல விபத்துகளும் உயிர் பலிகளும் நடந்திருக்கிறது. ’மாநில குற்றப் பதிவுகள் பணியகத்தின் (SCRB)’ தரவுகள் படி, 2023ஆம் ஆண்டில் மட்டும் சாலைகள் மோசமான இருந்ததன் காரணமாக நடந்த 171 விபத்துகளில் 54 பேர் உயிரிழந்திருக்கிறார்கள், 81 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். மோசமான வானிலை காரணமாக நடந்த 242 விபத்துகளில் 24 பேர் இறந்துள்ளனர்.

இந்த மோசமான சாலை கட்டமைப்பால் நகரங்களில் பணிக்கு செல்பவர்களும், தினசரி சாலை போக்குவரத்தை நம்பி உள்ளவர்களும் போக்குவரத்து நெருக்கடியால் பெரும் இன்னலுக்கு உள்ளாகிறார்கள். சமீபத்தில் சென்னையில் சாலைகளில் உள்ள குழிகளால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும் இதனால் பயண நேரம் அதிகமாக இருப்பதாகவும் ‘The Hindu’ செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மோசமான சாலைகளால் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைவாகவே இருந்தாலும் இங்கும் பல விபத்துகள் நடந்து பல உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பது வருந்ததக்க விஷயமாகும். குழிகள், குறைபாடுகளும் இல்லாமல் சாலை கட்டமைப்பு செம்மையாக மேம்படுத்தப்படுவது தான் இத்தகைய விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தடுப்பதற்கான ஒரே வழிமுறையாக இருக்கமுடியும்.