YouTurn

10.5% இட ஒதுக்கீடு... வன்னியர்களை ஏமாற்றும் பாமக.. RTI வெளிப்படுத்திய உண்மை!

மருத்துவம், சட்டம் போன்ற கல்வியிலும் அரசு வேலையிலும் 10.5 சதவிகிதத்துக்கும் மேல் பிரதிநிதித்துவம் பெறும் வன்னியர்கள். இதனை குறைக்க நினைக்கிறதா பாமக மற்றும் வன்னியர் சங்கம்?

10.5% இட ஒதுக்கீடு... வன்னியர்களை ஏமாற்றும் பாமக.. RTI வெளிப்படுத்திய உண்மை!

வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பாமக, வன்னியர் சங்கங்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் வெளியான RTI தகவலின் மூலம் வன்னியர்கள் 10.5 சதவிகிதத்துக்கும் மேல் மருத்துவம், கால்நடை அறிவியல், சட்டம் போன்ற படிப்புகளிலும் TNPSC GROUP 2, 2A பணிகளிலும் தேர்வாகி இருப்பது தெரியவந்துள்ளது. 


தமிழ்நாட்டில் வன்னியர் பெரும்பான்மை ஜாதியாக இருந்தும் அவர்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லையென நீண்ட காலமாக பாமக, வன்னியர் சங்களிடம் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. 1989ஆம் ஆண்டு இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) என்கிற பிரிவை பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) என இரண்டு பிரிவுகளாக கலைஞர் ஆட்சியில் பிரிக்கப்பட்டது. 

அதன்படி பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு 30 சதவிகிதமும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு 20 சதவிகிதமும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழ்நாடு அரசு இட ஒதுக்கீடு வழங்கியது. 


குறிப்பாக MBC பிரிவில் ’மிகவும் பிற்படுத்தப்பட்டோர்’ (MBC) என 48 ஜாதிகளும் (வன்னியர் உட்பட)  ’Denotified Communities’ (DNC) என 68 ஜாதிகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்க ஏதுவாக 2021ஆம் பிப்ரவரி மாதம் அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 20 சதவிகித இட ஒதுக்கீட்டில் மீதமுள்ள 9.5 சதவிகிதம் part - MBC & DNC (25 + 68 ஜாதிகளுக்கு) 7 சதவிகிதமும் part MBC (22 ஜாதிகள்) 2.5 சதவிகிதமும் பிரித்து வழங்கப்பட்டது. 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து இதற்கான அரசாணையை திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு வெளியிட்டது. 

இந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும், அவ்வாறு முறையாக கணக்கெடுக்காமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும்? இத்தகைய சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா?'' எனப் பல கேள்விகளை எழுப்பினர்.

மேலும், ''சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டினை வழங்க முடியுமா? இதுதொடர்பாக முறையான தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீட்டை வழங்க முடியுமா என்ற கேள்விகளுக்கு அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. எனவே, வன்னியர் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லாது'' எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. 

இத்தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் எல்.நாகேஷ்வர ராவ் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு,  ”மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வன்னியர்கள் தனிப்பிரிவாக பார்க்கப்பட வேண்டும் என்பதற்கான தரவுகளை கொடுப்பதற்கு தமிழ்நாடு அரசு தவறிவிட்டது” எனத் தனது தீர்ப்பில் தெரிவித்தது. 

இத்தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது என்று பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்தார். மேலும் இட ஒதுக்கீடு, நலத்திட்டங்கள் என அரசின் பல வளர்ச்சி திட்டங்களுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையாக அமைகிறது. இத்தகைய காரணங்களினால் தமிழ்நாடு அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்தது.


ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் ஜாதிவாரியான புள்ளி விவரம் சேகரிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிடமே உள்ளது. எனவே, ஒன்றிய அரசு அப்பணியினை மேற்கொள்ள வலியுறுத்தி சட்டசபையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார். 

கடைசி ஜாதிவாரி கணக்கெடுப்பு:

கடைசியாக 1931ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் ஜாதி பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படவில்லை. இருப்பினும், பட்டியல் பிரிவில் இருக்கும் ஜாதிகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. மற்ற ஜாதிகளை பொறுத்தவரை 1931ஆம் ஆண்டு எண்ணிக்கையே அடிப்படையாக பயன்படுத்தப்படுகிறது. 

இறுதியாக 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது ஜாதிவாரி விவரங்கள் சேகரிக்கப்பட்டாலும் அத்தரவுகள் வெளியிடப்படவில்லை. பிறகு வந்த பாஜக அரசும் இக்கணக்கெடுப்பில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் நம்பகத்தன்மையற்று இருப்பதாகவும் கூறியதுடன், இதனை இடஒதுக்கீடு நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்தது. 

அதற்கு அடுத்த 2021ஆம் ஆண்டு எடுக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பும் கொரோனா காரணங்களால் மேற்கொள்ளப்படவில்லை. இது மீண்டும் எப்போது எடுக்கப்படும் என்பதும் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை. 

நியாயமாக பார்த்தால் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் கூட்டணி கட்சியான பாஜகவிடம்தான் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கேள்விகளை முன்வைக்க வேண்டும். ஆனால் அவர் அது பற்றி சிறிதும் வாய் திறக்காமல் உள்ளார்.


கல்வி மற்றும் அரசு வேலைகளில் வன்னியர்கள் - RTI:


இதற்கிடையில் மருத்துவம், கால்நடை அறிவியல், சட்டம் போன்ற படிப்புகளிலும் TNPSC GROUP 2, 2A பணிகளுக்கும் வன்னியர் ஜாதியை சேர்ந்தவர்கள் 10.5 சதவிகிதத்துக்கும் மேல் பணி நியமனம் பெற்றிருப்பது RTI மூலம் தெரிய வந்துள்ளது. 


சென்னையை சேர்ந்த பொன்பாண்டியன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்ட கேள்விகளுக்கு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையில் இருந்து அளித்த பதில் பின்வருமாறு:



MBBS சேர்க்கை:


2018 முதல் 2022 வரை (5 ஆண்டுகளில்) MBBS மருத்துவ படிப்புக்கு தேர்வு செய்யப்பட்ட 24,330 பேரில் 4,873 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினருக்கான 20% இடஒதுக்கீட்டில் தேர்வு பெற்றுள்ளனர்.


20 சதவிகித இட ஒதுக்கீட்டில் தேர்வானவர்களில் 2,781 பேர் வன்னியர் சமுதாயத்தினர். அதாவது, MBC/DNC-க்கு என ஒதுக்கப்பட்ட 20 சதவிகிதத்தில் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 11.4 சதவிகிதம். 


இதுவே, மொத்தமாக தேர்வு செய்யப்பட்ட 24,330 பேரில் 13.8 சதவீதம் அதாவது, 3,354 பேர் (பொதுப் பிரிவில் தேர்வானவர்களும் சேர்த்து) வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள். 


முதுகலை மருத்துவ படிப்பு:


இதேபோல், 2018 - 2022 ஆண்டு காலகட்டத்தில் 6,966 மாணவர்கள் PG Medical படிக்க தேர்வாகியுள்ளனர். இதில், MBC/DNC-க்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 1,363 பேர் தேர்வாகியுள்ளனர். அதில், 694 பேர் (10.2%) வன்னியர் ஜாதியினர். இதுவே ஒட்டு மொத்த எண்ணிக்கையில் பார்க்கையில்,  940 பேர் (13.5%) வன்னியர் (பொதுப் பிரிவு உட்பட). 


பல் மருத்துவர் சேர்க்கை:


பல் மருத்துவர் பட்டப்படிப்பில் (BDS) 2018-2022 வரையில் 6,234 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், 933 பேர் 20 சதவிகித இட ஒதுக்கீட்டில் தேர்வாகியுள்ளனர். இந்த 933 பேரில் 437 பேர் (9.4%) வன்னியர் ஜாதியினர். இதுவே பொதுப்பிரிவில் தேர்வான வன்னியர்களையும் சேர்த்தால் அந்த எண்ணிக்கை 668-ஆக (10.7%) உள்ளது. 


இதே 5 ஆண்டில் பல் மருத்துவர் பட்டமேற்படிப்பில் மொத்தமாக 751 தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், 137 பேர் MBC/DNC-க்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டில் தேர்வானவர்கள். இதில், 66 பேர் (9.6%) வன்னியர். ஒட்டுமொத்தத்தில் பார்த்தாலும்  84 பேர் (11.2%) வன்னியர் ஜாதியினராக உள்ளனர். 


கால்நடை அறிவியல் படிப்பு:


2018-22 வரையிலான 5 ஆண்டுகளில் கால்நடை அறிவியலில் சேர்ந்த 2,820 மாணவர்களில் 474 பேர் 20 சதவிகித இட ஒதுக்கீட்டில் தேர்வானவர்கள். இதில் குறிப்பாக வன்னியர் ஜாதியை சேர்ந்தவர்கள் 309 (13%) பேர். இதுவே பொதுப் பிரிவில் தேர்வான வன்னியர்களையும் சேர்த்து பார்க்கையில் அந்த எண்ணிக்கை 464-ஆக (16.5%) உள்ளது. 


அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை:

        

கல்லூரி / பல்கலைக்கழகம் மொத்த மாணவர் சேர்க்கை (2018-22) MBC / DNC
(20% reservation)
வன்னியர் பொதுப்பிரிவு உட்பட தேர்வான வன்னியர்
அரசு சட்டக் கல்லூரிகள் 17,990 4,060 1,683 (8.3%) 2,096 (11.7%)
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் 2,948 757 391 (10.3%) 481 (16.3%)


இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவப் படிப்பு:

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவப் படிப்புகளுக்கான 5 ஆண்டுகளில் (2018-22) 8,412 பேர் தேர்வாகியுள்ளனர். இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டில் 1,381 தேர்வாகியுள்ளனர். இந்த எண்ணிக்கையில் 7.6 சதவிகிதம் அதாவது, 526 பேர் வன்னியர். ஒட்டு மொத்தத்தில் 9.1 சதவிகிதத்தினர் (768 பேர்) வன்னியர்கள். 

இதனைத்தவிர்த்து பல்வேறு அரசு பணிகளிலும் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் கணிசமான அளவு இருப்பதை இந்த RTI தகவலின் மூலம் அறியமுடிகிறது. காவல்துறை சார் ஆய்வாளர் முதல் துணை ஆட்சியர் வரை பணியில் உள்ள வன்னியர்களின் சதவீதம்:

        
பணியின் பெயர் மொத்தமாக தேர்வானவர்கள் MBC / DNC
(20% இட ஒதுக்கீடு)
வன்னியர் பொதுப்பிரிவு உட்பட தேர்வான வன்னியர்
காவல்துறை சார் ஆய்வாளர் (2013-2022) 1,919 605 - 327 (17%)
உதவி மருத்துவர்கள் (2013-2022) 8,379 2,191 1,185 (10.8%) 1,433 (17.1%)
முதுநிலை ஆசிரியர்கள்
(2021)
3,044 634 383 (12.1%) 533 (17.5%)
வனப்பணியாளர்கள் (2021) 1,520 325 192 (11.8%)  308 (20.2%)
TNPSC Group-2
(2013 & 2018)
2,682 481 270 (11.2%) 366 (13.6%)
TNPSC Group-3
(2015)
17 7 4 (11.4%) 4 (23.5)
TNPSC Group-4
(2013 - 2022)
26,784 9,662 - 5,215 (19.5%)
TNPSC ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகள்
(2013 - 2022)
1,789 355 182 (10.2%) 258 (14.4%)
TNPSC சிவில் நீதிபதிகள்
(2013 - 2022)
- 79 39 (9.9%) 57
பணியில் உள்ள துணை ஆட்சியர்கள் 542 - - 63 (11.6%)

இந்த RTI பற்றி செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பொய்யான தரவுகளை தயார் செய்து, அதனை ஊடகங்களுக்கு அனுப்பி செய்தி வெளியிட நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என எந்த அடிப்படையுமின்றி குற்றச்சாட்டை முன்வைக்கிறார். 

ஒரு பிரிவில் சில ஜாதிகளுக்கு மட்டும் போதுமான பிரதிநிதித்துவம் கிடைக்காத பட்சத்தில், அவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதுதான் சமூகநீதியாக இருக்கும். 

தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையில் வன்னியர்கள் 14 சதவிகிதம் இருப்பதாக கூறப்படுகிறது. மருத்துவம் போன்ற கல்வியிலும் அரசு பணிகளிலும் சராசரியாக வன்னியர்களின் பிரதிநிதித்துவம் 11 சதவிகிதத்துக்கும் மேல் உள்ளது. இன்னும் பல துறைகளில் 17 சதவிகிதத்துக்கும் அதிகமான பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ளனர். 

ஆனால், பாமக மற்றும் வன்னியர் சங்கம் 10.5 சதவிகிதம் தான் வன்னியர்களுக்கான சரியான நீதியாக இருக்கும் என பிரச்சாரம் செய்து வருகின்றனர். உண்மையில் 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு என்பது அவர்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையிலேயே அமையும்.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை