அப்பட்டமாக புறக்கணிக்கப்பட்ட தமிழ்; இதுதான் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு கொடுக்கும் முக்கியத்துவமா?
பிரதமர் கிசான் திட்ட இணையதளத்தில் தமிழ் வழிகாட்டுதல் புறக்கணிப்பு. மேலும் குறைவான எண்ணிக்கையிலேயே தமிழ்நாடு விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
’பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி’ எனப்படும் (PM Kisan) 19ஆம் தவணைக்கான தொகையை கடந்த பிப்ரவரி 24ம் தேதி பிரதமர் மோடியால் வெளியிடப்பட்டது. அந்த நிதி ஒன்றிய அரசு வகுத்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்ட தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநில விவசாயிகளுக்கு வழங்கப்பட்டாலும், புதிதாக பி.எம். கிசான் திட்டத்தில் இணைய ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு ஏழை விவசாயிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
ஆனால், தமிழ்நாடு விவசாயிகளுக்கு பேரதிர்ச்சியைக் கொடுக்கும் வகையில் உள்ளது ஒன்றிய அரசின் செயல்பாடு. பிரதமர் கிசான் திட்டத்தின் பயன் பெற, விவசாயிகள் ’E-KYC’ செயல்முறையை நிறைவு செய்வது மிகவும் அவசியம். இச்செயல்முறையை எவ்வாறு செய்வது? என்று தெரியாத விவசாயிகள், ஒன்றிய அரசின் ’pmkisan.gov.in’ என்ற போர்டலுக்கு சென்று ’Know About eKYC Process’ என்ற மெனுவை கிளிக் செய்து பல்வேறு மொழிகளில் செயல்முறை வழிகாட்டலை பெறலாம்.
அப்பக்கத்தில் ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி ஆகிய மொழிகளில் செயல்முறை வழிகாட்டல்கள் உள்ளன. ஆனால், இந்த முக்கிய தகவல்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் மட்டும் பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது.
மற்ற மொழிகளைத் தொடுத்தால் செயல்முறை விவரங்கள் காட்டப்படும் நிலையில், தமிழ் மொழியில் மட்டும் எந்த விவரங்களும் இடம்பெறவில்லை. வெறும் வெள்ளைத்தாள் மட்டுமே பதிவேற்றப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அப்பட்டமாக தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டு விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஒன்றிய அரசு தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக மேடைக்கு மேடை தமிழ்நாடு பாஜகவினர் மார்த்தட்டிப் பேசி வரும் சூழலில், இந்தி உட்பட மற்ற மாநில மொழிகளுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை தமிழ் மொழிக்கு மட்டும் ஏன் கொடுக்க மனம் வரவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதான் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும், தமிழ் மொழிக்கும் ஒன்றிய அரசு கொடுக்கும் முக்கியத்துவமா?
2024-25 நிதியாண்டின் (ஆகஸ்ட் – நவம்பர்) மாத தவணையின் புள்ளி விவரங்களின்படி, தமிழ்நாட்டில் தகுதியான விவசாயிகள் என 22,01,348 பேருக்கு மட்டுமே பி.எம். கிசான் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டை விட சிறிய மாநிலமான கேரளாவில் 28,16,138 விவசாயிகளுக்கு தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் குஜராத்தில் 49,14,821; கர்நாடகாவில் 46,70,456; ஆந்திராவில் 41,77,423; தெலங்கானாவில் 31,08,272 என விவசாயிகள் தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஒப்பீட்டின் மூலம் தமிழ்நாடு விவசாயிகளை ஒன்றிய அரசு வஞ்சிப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
திட்டத்தில் பயனடைய ஏதுவாக உள்ள வழிகாட்டுதலை தமிழில் வெளியிடாமலும் குறைவான எண்ணிக்கையில் தமிழ்நாடு விவசாயிகளை பயனாளிகளாக கொண்டும் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு புறக்கணித்துள்ளது. ஆனால், பாஜகவினரோ தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக வெற்று வார்த்தைகளை மட்டும் மக்கள் மத்தியில் கூறி வருகின்றனர் என்பது மீண்டும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது.