YouTurn

காவல்துறையும் காலனியம் வழக்கமும்: 'Orderly’ போலீஸின் அவலநிலை!

காலனிய காலத்தின் வழக்கமாக ‘ஆடர்லி’ முறை இன்றும் இந்தியா குறிப்பாக தமிழ்நாட்டு காவல்துறையில் இருக்கிறது என்பது தான் அவலமான உண்மையாகும்

காவல்துறையும் காலனியம் வழக்கமும்: 'Orderly’ போலீஸின் அவலநிலை!

காவல்துறை உயர் அதிகாரிகள் அலுவலகங்களிலும் வீடுகளிலும் காவல் சீருடை அணிந்த கடைநிலை காவலர்களை நாம் நமது சொந்த வாழ்க்கையிலோ அல்லது திரைப்படங்களிலோ நிச்சயம் பார்த்திருப்போம். இவ்வாறு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உதவியாக பணியமர்த்தப்பட்டிருக்கும் காவலர்களுக்கு ‘ஆர்டர்லி’ (Orderly) என்று பெயர். இது பிரிட்டிஷ் காலத்து காலனிய வழக்கமாகும். 


இந்த ‘ஆர்டர்லி’ என்ற பணியமைப்பு முதலில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மருத்துவமனைகளிலும் இராணுவத்திலும் தான் வழக்கத்தில் இருந்தது. பெரிதாக தனித்திறன் ஏதும் தேவைப்படாத உடல் உழைப்பு சார்ந்த வேலைகளை மட்டுமே செய்வதற்காக மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டிருந்த நபர்கள் தான் ‘ஆர்டர்லி’ என்று அழைக்கப்பட்டனர். 


image.png


பின்னர் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் இந்தியாவை ஆட்சி செய்த போது, 1860களில் இந்த ‘ஆர்டர்லி’ முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த 1860 காலகட்டத்தில் ஆங்கிலேய போலீஸ் அதிகாரியின் குடியிருப்புக்கும் அவரது அலுவலகத்திற்குமான தூரம் அதிகமாக இருந்ததால், ‘ஆர்டர்லி’யாக வேலை செய்பவர்கள் தகவல் தொடர்பு விஷயத்தில் முக்கியமானவர்களாக கருதப்பட்டார்கள். அக்காலத்தில் ‘ஆர்டர்லி’யாக வேலை செய்த எளிய காவலர்கள் ஆங்கிலேய அதிகாரிகளின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களது சீருடைகளை பராமரிக்கவும், தகவல் தொடர்புக்காகவும் வேலை செய்திருக்கிறார்கள். இந்த எளிய கடைநிலை காவலர்கள் தங்களது ஆங்கிலேய மேல் அதிகாரிகளால் அடிமையாக நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது வரலாற்று உண்மையாகும்.


இந்த காலனிய காலத்தின் வழக்கம் இன்றும் இந்திய காவல்துறையில் இருக்கிறது என்பது தான் அவலமான உண்மையாகும். 1977ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட தேசிய போலீஸ் ஆணையம் (NPC) ’ஆடர்லிகளாக’ வேலை செய்யும் காவலர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வேலைகள் குறித்து கவனப்படுத்துகிறது. அதிகாரிகளை அவர்களது அலுவலகத்தில் சந்திக்க வருபவர்களை கவனிப்பது, அதிகாரிக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை அவர் இல்லாதபோது பேசி, அது குறித்து உரிய அதிகாரிக்கு தெரியப்படுத்துவது, அதிகாரி ஒப்படைக்கும் கோப்புகளை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சேர்ப்பது ஆகியவற்றுடன் மேலதிகாரியின் சீருடைய பராமரிப்பது, அவரது அலுவலகத்தை சுத்தமாக வைத்திருக்க பொறுப்பேற்பது போன்ற வேலைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. 


image.png


’ஆடர்லி’ முறை குறித்து முறையான சட்டங்களோ அல்லது விதிகளோ எதுவும் இல்லை. ஆனால் அந்தந்த மாநிலங்களின் காவல்துறை கையேடுகளில் (Police Manual) மட்டுமே இது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும். அதிலும் உயர் அதிகாரிகளுக்கு உதவவேண்டும் என்றும் பொதுவாக குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் ’ஆடர்லி’ காவலர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வேலைகள் குறித்த விளக்கமான வரையறை ஏதுமிருக்காது.  


ஆனாலும் மேற்குறிபிட்ட வேலைகளைத் தாண்டி, ’ஆடர்லிகளாக’ வேலை செய்யும் காவலர்களை உயர் அதிகாரிகள் தங்களது வீடுகளில் வேலைச் செய்யச் சொல்லி துஷ்பிரயோகம் செய்வது பல காலமாக நடந்துவருகிறது. உயர் அதிகாரிகளின் வீடுகளில் சமைப்பது, வீட்டு வேலைகள் செய்வது, அவர்களது குடும்பத்திருக்கு ஓட்டுநராக வேலை பார்ப்பது, அவர்களது குழந்தைகளை பள்ளியில் விட்டு மீண்டும் அழைத்து வருவது போன்ற வேலைகளையும் செய்யவேண்டி ‘ஆடர்லிகள்’ நிர்பந்திக்கப்படுகிறார்கள்.


‘ஆடர்லிகளாக’ வேலை செய்யும் காவலர்கள் தங்களது உயர் அதிகாரிகளால் மனிதத்தன்மையற்ற முறையில் நடத்தப்பட்ட பல சம்பவங்கள் வெளிவந்திருக்கின்றன. கர்நாடகா மாநிலத்தில் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் அவருக்கு நியமிக்கப்பட்ட ‘ஆடர்லி’ காவலரை சமையல்காரராக பயன்படுத்தி வந்துள்ளார். அந்த உயர் அதிகாரி ஓய்வு பெற்ற பின்னரும் அந்த காவலரை அவர் சமையல் வேலைக்காக வைத்திருக்கிறார். இந்த குற்றச்சாட்டை அந்த உயர் அதிகாரி மறுக்கக்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


2016ஆம் ஆண்டு ஆடர்லியாக வேலை செய்யும் காவலர்கள், தங்களது மோசமான பணிச்சூழலை எடுத்துக்காட்டியும் அதிகாரிகளால் மனித்தன்மையற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் கூறி, ஒரே நாளில் மொத்தமாக விடுமுறை எடுக்கப்போவதாக போராட்டத்தை அறிவித்தார்கள். 2018ஆம் ஆண்டு கேரளாவில் போலீஸ் உயர் அதிகாரி ஒருவரின் மகள் ‘ஆடர்லி’ காவலர் தன்னை அழைப்பதற்காக சரியான நேரத்தில் வாகனத்தை ஓட்டிவரவில்லை என்று கூறி அவரை அடித்திருக்கிறார். 


தமிழ்நாடு மாநிலத்தை பொறுத்த வரை இந்த ‘ஆடர்லி’ முறை 1979ஆம் ஆண்டிலே ஒழிக்கப்பட்டுவிட்டதாக சொல்லப்பட்டாலும் இன்னும் அது நடைமுறையில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதே யதார்த்தமாகும். கடந்த 2025 டிசம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர், ‘தமிழ்நாடு காவல்துறை இயக்குனரின் (DGP) அறிக்கையை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் ஒரு ‘ஆடர்லி’ கூட இல்லை’ என்று வாதம் செய்தார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. 


image.png


சமீபத்தில் தமிழ்நாட்டின் காவல்துறை இயக்குனர் அபைய் குமார் சிங் அனைத்து மட்டங்களிலும் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் ’பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற காவல் உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ‘ஆடர்லிகளை’ உடனே விடுவிக்குமாறு’ குறிப்பிட்டுள்ளார். ‘ஆடர்லி’ முறை ஒழிக்கப்பட்டுவிட்டதென்றால் எதற்காக இந்த சுற்றறிக்கை?


தமிழ்நாட்டில் மொத்தம் 1.3 லட்சம் காவலர்கள் பணியில் இருக்கிறார்கள். அதில் 4 சதவீதம் காவலர்கள் அதாவது தோராயமாக 5000 காவலர்கள் ‘ஆடர்லிகளாக’ பணி செய்து வருகிறார்கள். அதில் 800 காவலர்கள் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்காக ’ஆடர்லிகளாக’ வேலை செய்து வருவதாக ‘Times of India’ செய்தி வெளியிட்டுள்ளது. அரசு தரப்பு வாதத்தையும்  காவல்துறை இயக்குனரின் அறிக்கையையும் நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம் ‘Times of India’ வெளியிட்டுள்ள மேற்குறிப்பிட்ட செய்திக் கட்டுரையை அடிப்படையாக கொண்டு ‘ஆடர்லி’ முறை குறித்த வழக்கை தானாக முன்வந்து ‘Suo Motu’ விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. 


image.png


அதன்படி இந்த வழக்கு பிப்ரவரி 5ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ’ஆடர்லி முறையை’ ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு குழுக்கள் அமைக்க அரசு உத்தரவிட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


இந்த மாவட்ட அளவிலான குழுக்கள் ‘ஆடர்லி முறையை’ ஒழிக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கவிருக்கிறது என்பதை எதிர்காலத்தில்தான் தெரிந்துகொள்ள முடியும். 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை