YouTurn

தமிழ்நாட்டின் பொருளாதாரம் குறித்து நாம் தமிழர் சொல்லும் பொய்கள்!

தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் குறித்து மிகைப்படுத்தப்பட்ட பொய்களை நாம் தமிழர் பேச்சாளர் பேசி வருகிறார்.

தமிழ்நாட்டின் பொருளாதாரம் குறித்து நாம் தமிழர் சொல்லும் பொய்கள்!

சமீபத்தில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் ஒருவர் அடுக்கடுக்காக தவறான தகவல்களையும், பொய்களையும் கூறினார். 


முதலில், தமிழ்நாடு அரசின் மொத்த பட்ஜெட் 3 லட்சம் கோடி ரூபாய். அதில் 1.25 லட்சம் கோடியை தமிழ்நாடு அரசு ஏற்கனவே வாங்கிய கடனுக்கான வட்டியாக செலுத்துகிறது. இவ்வாறு ஆண்டுதோறும் செலுத்தி வருகிறது என்கிறார். 


இது குறித்து தேடிய போது, 2025-26 நிதியாண்டு பட்ஜெட்டில், தமிழ்நாடு அரசின் வருவாய் 3,32,325 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொகை அரசு தனது செலவீனத்திற்காக வாங்கும் கடன்களை சேர்க்காமல் வந்த தொகையாகும். 


அரசின் செலவீனத்தில் பெரும்பகுதி நிர்ணயிக்கப்பட்ட செலவீனம் (Committed expenditure) என்ற வகையில் அரசு ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம், கடனுக்கு வட்டி கட்டுவது ஆகியவற்றுக்கே செலவிடப்படும். அந்த வகையில் 2025-26 நிதியாண்டில் கடனுக்கு வட்டி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.69,114 கோடியாகும். மேற்குறிப்பிட்ட மொத்த வருவாயில் இந்த தொகை 20.8 சதவீதம் மட்டுமே ஆகும். 



உண்மை நிலை இவ்வாறு இருக்க நாம் தமிழர் பேச்சாளர், 1.25 லட்சம் கோடி வட்டி கட்ட செலவிடப்படுவதாக அப்பட்டமான பொய்யைச் சொல்கிறார்.


அடுத்ததாக, அரசுக்கு வருமானம் வரக்கூடிய துறையான போக்குவரத்து துறையில் 1 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது; அரசுக்கு வருவாய் கொடுப்பது டாஸ்மாக் மட்டுமே என்று நாம் தமிழர் பேச்சாளர் கூறுகிறார். 


கடந்த 2024-25 நிதியாண்டில் பல்வேறு மாநில அரசு வரிகள் மூலமாக தமிழ்நாடு அரசிற்கு கிடைத்த வருவாயின் மொத்த  தொகை 1,92,740 கோடி ரூபாய் ஆகும். ஒன்றிய அரசின் நிதிப்பகிர்வையும், வரியல்லாத பிற வருமாய்களையும் சேர்க்காமலே இந்த தொகை. இதில் வாட் (VAT) வரி 65,486 கோடியாகவும் கலால் வரி 22,815  கோடியாகவும் இருக்கிறது.



2024-25 நிதியாண்டில் டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் அரசுக்கு மொத்த வருவாய் 48,344 கோடி. இதில் வாட் வரியாக 37,324 கோடியாக, கலால் வரியாக 11,020 கோடியாக அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. அதாவது அரசுக்கு வாட் வரியால் கிடைத்த வருவாயில் 57 சதவீதம் டாஸ்மாக் மூலமாக கிடைத்திருக்கிறது. அதேபோல் அரசின் கலால் வரியில் 48 சதவீதம் டாஸ்மாக் மூலமாக கிடைத்திருக்கிறது. 


அரசுக்கு கலால் வரி, வாட் வரி ஆகியவற்றின் மூலம் கிடைத்த வருவாயில் கிட்டத்தட்ட பாதி அளவு டாஸ்மாக்-ல் இருந்து தான் கிடைக்கிறது என்பது உண்மைதான். ஆனால் பெரும்பாலான நுகர்வுப் பொருட்கள் GST வரியின் கீழ் இருப்பதால், அரசின் முக்கிய வருவாய் ஆதாரமாக இருப்பது மாநில GST வரியும், ஒன்றிய அரசு வரியிலிருந்து கிடைக்கும் பங்கீடும் தான். 


இதனை மறைத்து, டாஸ்மாக்-ல் இருந்தே பெரும்பாலான வருவாய் தமிழ்நாடு அரசுக்கு வருவதாக தவறான தகவலை நாம் தமிழர் பேச்சாளர் பேசுகிறார். 


image.png


அரசு துறை நிறுவனங்களின் கடன்கள், இழப்புகள் ஆகியவற்றை குறித்த செய்திகளை தேடினோம். தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள தரவுகளின்படி, 2022-23 நிதியாண்டில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் மொத்தமாக 6,077.89 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டில் இந்த வருவாய் இழப்பு Rs 6,380.83 கோடியாக அதிகரித்துள்ளது. 2024-25 நிதியாண்டில் (பிப்ரவரி மாதம் வரையில் மட்டும்) வருவாய் இழப்பு 6,228.79 கோடியாக இருந்திருக்கிறது. போக்குவரத்துக் கழக்த்தின் சராசரி தினசரி வருவாய் இழப்பு ஆண்டுதோறும் அதிகரித்துச் செல்வதாகவும் தெரிகிறது. 



2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரையிலான நிதியாண்டில் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து  CAG ஆய்வு செய்து 2024 டிசம்பரில் அறிக்கை சமர்பித்தது. அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மொத்தக் கடன் ரூ.21,980 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. மேலும்  அரசு போக்குவரத்து கழகத்தின் ஒட்டுமொத்தமான இழப்பு (Accumulated losses) 2022ஆம் ஆண்டிலே ரூ.48478 கோடியாக உயர்ந்துவிட்டதாக CAG அறிக்கை தெரித்துள்ளது. 



இதிலிருந்து, அரசு போக்குவரத்து கழகம் ஒரு லட்சம் கோடி நஷ்டத்தில் இயங்குவதாக நாம் தமிழர் பேச்சாளர் பேசுவது மிகைப்படுத்தப்பட்ட பொய் என்பது தெரியவருகிறது. இவ்வாறு தமிழ்நாட்டில் நிலவும் சமூக பொருளாதார பிரச்சினைகள் குறித்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அக்கட்சியில் இருக்கும் பலரும் மிகைப்படுத்தப்பட்ட பொய்யான தகவல்களை பரப்பிவருகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை