அமெரிக்காவின் புதிய உணவுக் கொள்கை! ஒரு பார்வை!
கடந்த ஜனவரி 7ஆம் தேதி ‘அமெரிக்க மக்களுக்கான ‘புதிய உணவுமுறை வழிகாட்டுதல்கள்’ வெளியிடப்பட்டுள்ளது.
உணவுப் பழக்கம் உடல்நல பிரச்சனைகளுக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது என்ற அறிவியல் பார்வை தற்போது சமூகத்தில் வளர்ந்து வருகிறது. உணவு பழக்கம் காரணமாக நீரிழிவு நோய், இதய நோய், இரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பல நாட்பட்ட நோய்கள் (chronic diseases) ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் நம்மை எச்சரிக்கை செய்து வந்திருக்கிறார்கள். இதன் காரணமாக, உணவு பழக்க முறைகளை மேம்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும் என்ற பார்வையில், அரசுகள் தங்களது நாட்டில் உணவு கொள்கை வகுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

இந்த வகையில் அமெரிக்காவின் ’சுகாதாரம் மற்றும் மனித சேவைகள்’ துறை செயலாளர் ராபர்ட் கென்னடி ஜூனியர் கடந்த ஜனவரி 7ஆம் தேதி ‘அமெரிக்க மக்களுக்கான ‘புதிய உணவுமுறை வழிகாட்டுதல்கள்’ வெளியிட்டார். அதனை ஊடகங்கள் ‘புதிய உணவு கொள்கை (New Food Pyramid)’ என்று அழைக்கிறார்கள். இவ்வாறு உணவு கொள்கை மூலம் உணவுகளை பரிந்துரை செய்வது 1990களில் ஃபிராங்க் டுமாண்ட் என்பவரால் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு முறையும் முந்தைய உணவு கொள்கையை மீளாய்வு செய்து திருத்தங்கள் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய உணவுக் கொள்கை முந்தைய உணவுக் கொள்கையை கீழாக புரட்டிப்போடுவதாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த புதிய உணவு கொள்கை முதன்முதலாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை (processed foods) குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரையை வழங்குகிறது. அமெரிக்காவின் ’நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்’ வெளியிட்டுள்ள தகவலின் படி அமெரிக்க மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் உணவு மூலம் எடுத்துக்கொள்ள கலோரிகளில் 55 சதவீதம் பதப்படுத்தப்பட்ட உணவின் மூலமாக வருவதாக தெரியவருகிறது. இதனால் இந்த உணவுக் கொள்கை பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைத்துக்கொண்டு, பதப்படுத்தப்படாத உணவிற்கு முக்கியத்தும் அளிக்குமாறும் பரிந்துரைக்கிறது. இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ’eating real food’ கோஷத்தை முன்வைத்து பதப்படுத்தப்படாத காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உண்ணுமாறு பரிந்துரைக்கிறது.

அதேபோல் ’Added Sugars’ என்று சொல்லப்படக்கூடிய சக்கரை (சீனி), குளிர்பானங்களில் சேர்க்கப்படும் இனிப்பு ஆகியவற்றை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பழங்கள், காய்கறி போன்றவற்றில் இருக்கும் இயற்கையான இனிப்பு (Natural Sugars) இந்த ’Added Sugars’ வகையில் சேராது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய உணவு கொள்கையில் உயர்தரமான புரதங்களை (Proteins) எடுத்துக்கொள்ளச் சொல்லி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முட்டை, கோழி, கடல் உணவு, சிவப்பு இறைச்சி என்று சொல்லப்படகூடிய மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவற்றையும் தாவர உணவுகள் மூலம் கிடைக்கக்கூடிய புரதங்களையும் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாவுசத்து (carbohydrates), ’Added Sugars’ என்கிற இனிப்புகள் ஆகியவை கலக்காமல் நல்ல புரதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முந்தையை உணவு கொள்கையில் புரதச்சத்து என்பது கொழுப்பு இல்லாத உணவின் மூலமாகவும், தானியங்கள் மூலமாக அதிகமாக எடுத்துக்கொள்ள பரிந்துரைப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அதிக கொழுப்பு உள்ள சிவப்பு இறைச்சி மூலமாக நல்ல புரதச்சத்துள்ள உணவை சாப்பிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது முக்கியமான மாற்றமாகும்.

இந்தவகையில் இந்த உணவுக் கொள்கை இதுவரை அமெரிக்காவில் அரோக்கியமான கொழுப்பு (Healthy Fats) உணவு மீது இருந்த தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் கொழுப்பு அதிகம் இருக்கக்கூடிய பால் சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வரை கொழுப்பு குறைவாக இருக்கக்கூடிய பால் பொருட்களே பரிந்துரைக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், தினசரி உணவில் வெவ்வேறு வகையான காய்கறிகளும் பழங்களும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நார்ச் சத்து (fiber) நிறைந்த பயிர் வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தவகையில், கொழுப்பு சத்து மிகுந்த புரதம், காய்கறி மற்றும் பழங்களுக்கு அதிக முக்கியத்துவ கொடுத்தும், தானியங்கள் பயிர்களுக்கு இரண்டாம் பட்ச முக்கியத்துவம் கொடுத்ததன் மூலம் இந்த உணவுக் கொள்கை இதற்கு முந்தைய கொள்கைகளிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது.
இவ்வாறு இறைச்சி, காய்கறி, பழங்கள் என்ற பதப்படுத்தப்படாத உணவுகளை உண்பதை பழக்கமாக்கிக் கொண்டால், உடலின் வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். இதனால் பெரும்பாலான நோய்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்று இந்த உணவு கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது.
அதேவேலையில், இந்த உணவுக்கொள்கை என்பது நாடு முழுவதற்கு பொதுவாக கொண்டுவரப்படும் ஒன்று. ஒவ்வொரு மனிதரும் தனித்துவமான உடலமைப்பும், தன்மையும் இருக்கும். சிலருக்கு கொழுப்பு உண்பது ஒவ்வாததாக இருக்கலாம். இதனையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, பொது வரையறை இயந்திரத்தனமாக பின்பற்றாமல், தங்களது தனித்துவத்திற்கு ஏற்றாப்போல் உணவு பழக்கத்தை அமைத்துக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.