YouTurn

போலி வங்கி வலைதளம் உருவாக்கி நூதன முறையில் மோசடி! எச்சரிக்கை!

SBI வங்கியின் பெயரில் போலி வலைத்தளத்தை உருவாக்கி அதன் மூலமாக வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட நிதி சார்ந்த தகவல்களை திருடுகிறார்கள்.

போலி வங்கி வலைதளம் உருவாக்கி நூதன முறையில் மோசடி! எச்சரிக்கை!

இந்தியாவில் ஸ்மார்ட் போன்கள் மற்றும் இணையத்தின் பயன்பாடு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், இணையவழி குற்றங்களும், மோசடிகளும் அதே போல் அதிகரித்துள்ளது. 


இந்த வகையில் தற்போது SBI வங்கியின் பெயரில் போலி வலைத்தளத்தை உருவாக்கி அதன் மூலமாக வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட நிதி சார்ந்த தகவல்களை திருடுகிறார்கள் என்ற செய்தி வெளியாகி பயனர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

image.png

இந்த மோசடி கும்பல் முதலில் SBI வங்கியின் கடன் அட்டை (Credit Card) சம்பந்தமான Link ஒன்றை வாட்ஸ் ஆப் செயலியில் அனுப்புகிறது. இந்த ’Link’-ஐ கிளிக் செய்தால் SBI வங்கியின் உண்மையான வலைத்தளத்திற்குப் பதிலாக வேறொரு வலைத்தளத்திற்கு இட்டுச்செல்கிறது. அந்த வலைத்தள முகவரியின் முடிவில் ‘wixsite.com’ என்று உள்ளது. ‘wix’ என்ற இலவச இணையதளம் உருவாக்கும் தளத்தின் மூலம்தான் இந்த தளம் இயங்குகிறது என்று இதிலிருந்து தெரியவருகிறது. இந்த தளம் அடிப்படையில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்குப் எவ்வித பாதுகாப்பற்ற (Red Flag) ஒரு தளம் என்பது குறிப்பிடத்தக்கது. 


அதேவேளையில் இந்த மோசடி கும்பல் தங்களை நம்பகமான நபர்களாகக் காட்டிக்கொள்ள “Customer Identity Card" என்ற போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தியுள்ளனர்.


image.png


பயனர்கள் மோசடி கும்பல் அனுப்பும் ’Link’-ன் மூலம் அந்த மோசடியான வலைத்தளத்திற்கு நுழைந்ததும், பயனர்களின் பெயர், அலைபேசி எண், பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட விவரங்களைப் பதிவிடச் சொல்லிக் கேட்கிறது. அடுத்து கடன் அட்டை பற்றிய  முக்கிய தகவல்களான அட்டை எண் (card number), காலாவதி தேதி (expiry date) மற்றும் CVV ஆகியவற்றைப் பதிவிடச் சொல்லிக் கேட்கிறது. 


இந்த வலைத்தளத்தில் “Expiry date” என்பதற்குப் பதிலாக “Expari date" என்றும்; “Enter OTP" என்பதற்குப் பதிலாக “Intar OTP" என்றும் எழுத்துப்பிழைகளுடன் எழுதப்பட்டுள்ளது. இந்த வலைத்தளம் மோசடி நடவடிக்கைகளுக்காகப் போலியாக உருவாக்கப்பட்ட ஒன்று என்பது இந்த எழுத்துப்பிழைகளைக் கொண்டே தெரிந்துகொள்ள முடியும். 


சிலர் இவை மோசடி கும்பலால் வேண்டுமென்றே செய்யப்பட்ட எழுத்துப்பிழைகள் என்று கூறுகிறார்கள். இவ்வாறு எழுத்துப்பிழைகளைப் பார்த்த உடன் தெரிந்துகொள்ளும் ‘படித்தவர்கள்’ இதனைப் போலியான வலைத்தளம் என உறுதி செய்து விலகிவிடுவார்கள். போதுமான அளவு விழிப்புணர்வு அற்றவர்கள்தான் இதனால் ஏமாற்றம் அடைவார்கள். அவர்களை மட்டும் குறிவைத்து மோசடி செய்யலாம். இதுவொரு வகையான வடிகட்டும் முறை என்று இதற்கு விளக்கமளிக்கிறார்கள்.


இது போன்று குறுஞ்செய்தி (SMS) வாட்ஸ் ஆப் வழியாக வரும் தகவல்களை நம்பு வேண்டாம் என்றும் வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்படியும் ‘State Bank of India (SBI)’ எச்சரிக்கை அளித்துள்ளது.



சமீபத்தில் இணையவழி குற்றங்கள் அதிக அளவில் நடக்கும் நாடுகளின் பட்டியலைச் சர்வதேச ஆய்வாளர்கள் வெளியிட்டார்கள். அதில் இந்தியா 10ஆவது இடத்தில் இருக்கிறது. மேலும் இந்தியாவில் நடக்கும் இணைய மோசடிகள் ஒருவகையில் மிக நிபுணத்துவம் வாய்ந்தவையாக இருப்பதாகச் சொல்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.


இந்தியாவில் அதிக அளவு இணைய மோசடிகள் நடப்பதற்கான காரணம் பற்றி மேற்கூறிய ஆய்வை நடத்திய ஆய்வாளர்களில் ஒருவரான ரிதி காஷ்யப் கூறுகையில், ‘"மக்கள் தங்கள் வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களை தங்கள் ஸ்மார்ட் போன்கள் வழியாகச் செய்கிறார்கள், ஆனால் டிஜிட்டல் தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு (Digital Literacy) அதே அளவில் வளரவில்லை’ என்கிறார்.


இணையத்தின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் இன்றைய காலத்தில், இணையம் பற்றிய விழிப்புணர்வு (Digital Literacy)  என்பது நமது தனிப்பட்ட தகவல்களையும் பணத்தையும் பாதுகாத்துக்கொள்ள மிக முக்கியமானதாகும்.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை