YouTurn

பொது சுகாதார அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் நுண் பிளாஸ்டிக்.

கடுமையான நோய்களுக்கும் நுண் பிளாஸ்டிக்களுக்கும் இருக்கும் தீர்மானகரமான தொடர்பை உறுதி செய்ய இன்னும் அதிகமான ஆய்வுகள் செய்யப்படவேண்டும் என்றாலும், நுண் பிளாஸ்டிக் பிரச்சினை என்பது இனிமேலும் வெறுமனே சுற்றுச்சூழல் பிரச்சினையாக மட்டுமல்லாமல், புற்றுநோய் போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் பொது சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பொது சுகாதார அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் நுண் பிளாஸ்டிக்.

கடந்த 2019ஆம் ஆண்டில் 460 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இந்த அளவு வரும் 2060ஆம் ஆண்டில் மூன்று மடங்கு உயரும் வாய்ப்பிருப்பதாக கணக்கிடப்படுகிறது. இது மக்களின் வாழ்வில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு பெருமளவில் அங்கம் வகிப்பதை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.

 

இந்நிலையில் ஆராய்ச்சியாளர்களின் கவனம் நுண் பிளாஸ்டிக்கள் (Microplastics) பற்றி திரும்பியுள்ளது. இந்த நுண் பிளாஸ்டிக்கள் என்பது 5000 μm (மைக்ரோ மீட்டர்) அதவாது 5 மில்லி மீட்டருக்கும் குறைவான அளவில் உள்ள பிளாஸ்டிக் துகள்களை (Plastic Particles) குறிப்பதாகும்.

 

இந்த நுண் பிளாஸ்டிக்கள் எந்த அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன என்பதைப் பொருத்து அவை முதல்நிலை (Primary), இரண்டாம் நிலை (Secondary) நுண் பிளாஸ்டிக்கள் என்று வகை பிரிக்கப்படுகிறது. இதில் முதல்நிலை (Primary) நுண் பிளாஸ்டிக்கள் என்பது குறிப்பிட்ட தொழில்முறை தேவைகளுக்காக திட்டமிட்டு உருவாக்கப்படுபவை ஆகும். ஆனால் இந்த இரண்டாம் நிலை (Secondary) என்பது பெரிய பிளாஸ்டிக் பொருட்களில் ஏற்படும் பௌதிக அல்லது இரசாயன மாற்றங்கள் காரணமாக அதிலிருந்து சிதைந்து பிரிந்து வருபவை ஆகும். வாகனங்களின் டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், துணிகள் ஆகியவற்றில் இருந்து சிதைந்த பிளாஸ்டிக் துகள்களான இந்த நுண் பிளாஸ்டிக்கள் சுற்றுச்சூழலில் கலக்கிறது. மிக முக்கியமாக, வாகனங்களின் டயர்களுக்கும் சாலைக்கும் இடையில் நடக்கும் உராய்வு (Friction) காரணமாக உருவாக்கும் நுண் பிளாஸ்டிக் துகள்கள் பெருமளவு காற்றில் கலக்கின்றன.

 

இந்த வகையில் பெரிய பிளாஸ்டிக் பொருட்களின் சிதைவிலிருந்து உருவாகும் நுண் பிளாஸ்டிக்கள் காற்று, நீரின் மேற்பரப்பு, கடற்கரைகள், உணவு என சுற்றுச்சூழலில் பெரும்பாலான இடங்களில் கலந்திருக்கிறது. இந்த நுண் பிளாஸ்டிக்களின் மிகக் குறைந்த அளவின் காரணமாக அவை மனிதன் மற்றும் விலங்குகளின் உடல்களில் மிக எளிதாக நுழைந்து விடுகிறது. இந்த நுண் பிளாஸ்டிக்கள் இதயம், மூளை, நுரையீரல், சிறுநீரகம்  உட்பட மனித உடலின் ஒவ்வொரு உறுப்புகளிலும்  கண்டறியப்பட்டுள்ளன.

 

இதனால் ஏற்படும் நோய்கள் மற்றும் உடல் பிரச்சினைகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை Environmental Science and Technology என்ற ஆய்விழலில் வெளியானது. கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தை (UCSF) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். 3000-க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை பகுப்பாய்வு செய்து எழுதப்பட்டுள்ள இந்த ஆய்வுரை நுண் பிளாஸ்டிக்களால் ஏற்படக்கூடிய கடுமையான உடல் பாதிப்புகள் குறித்து புதிய தகவல்களை வெளியிடுகிறது. காற்றிலும் சுற்றுச் சூழலிலும் கலந்துள்ள நுண் பிளாஸ்டிக்களுக்கும் கருவுறுதல் பிரச்சனை (Infertility), நாள்பட்ட நுரையீரல் பிரச்சனை, பெருங்குடல் புற்றுநோய் ஆகிய நோய்களுக்கும் உள்ள தொடர்பை அடையாளம் காட்டுகிறது.

 

இந்த நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் நுரையீரல் திசுக்களில் ஆழமாக ஊடுருவி, அங்கே DNAவில் சடுதி மாற்றம் (mutation) ஏற்படுவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துகிறது. இது புற்றுநோய் உண்டாகி வளர்வதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும், காற்றில் கலந்திருக்கும் இந்த நுண் பிளாஸ்டிக்கள் சுவாசிக்கும் போது உடலில் நுழைந்து நுரையீரல் திசுக்களில் உட்பொதிவதால் (Embed) நாட்பட்ட (chronic) நுரையீரல் பிரச்சினைகள் ஏற்படுகிறது.

 

நுண் பிளாஸ்டிக்கள் உணவின் மூலமாக உட்கொள்ளப்படும் போது, செரிமான மண்டலத்தில் உள்ள நுண்ணுயிர்களை (Gut Microbiome) பாதிக்கிறது. இதனால், பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது.


'மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கும் நுண் பிளாஸ்டிக்களுக்கும் இருக்கும் தொடர்பை உறுதிபடுத்தும் விதமாக தற்போது நம்மிடம் உள்ள அறிவியல் ஆதாரங்கள்  மோதுமானவை அல்ல. இந்த நுண் பிளாஸ்டிக் துகள்கள் மனித திசுக்களில்  காலப்போக்கில் எப்படியெல்லாம் வினையாற்றுகிறது என்பது சிக்கலான விஷயமாக இருப்பதால், இந்த நோய்களை நுண் பிளாஸ்டிக்கள் தான் நேரடியாக தோற்றுவிக்கிறது என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் நம்மிடம் இல்லை. சில ஆய்வுகள் நுண் பிளாஸ்டிக்களால் உயிரணு ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதாக கூறினாலும், இதனை உறுதியாக நிறுவுவதற்கான தீவிரமான நீண்ட கால ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்' என்று 'எக்ஸ்' தளத்தில் 'The Liver Doc' என்ற பெயரில் இயங்கி வரும் மருத்துவர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் தெரிவிக்கிறார்.

 

மேற்கூறிய கடுமையான நோய்களுக்கும் நுண் பிளாஸ்டிக்களுக்கும் இருக்கும் தீர்மானகரமான தொடர்பை உறுதி செய்ய இன்னும் அதிகமான ஆய்வுகள் செய்யப்படவேண்டும் என்றாலும், அந்த ஆய்வுரையில் கொடுக்கப்பட்டுள்ளவற்றை நாம் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு, சிறந்த ஒழுங்குமுறை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளால் நுண் பிளாஸ்டிக்களால் ஏற்படக்கூடிய சுகாதார அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

நுண் பிளாஸ்டிக் பிரச்சினை என்பது இனிமேலும் வெறுமனே சுற்றுச்சூழல் பிரச்சினையாக மட்டுமே இருக்காது, இதுவொரு பொது சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்பதை ஒப்புக்கொண்டு பொதுக் கொள்கை வகுக்கும் (Public Policy Making) போது இதனை கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை