"என் மீது கொலை முயற்சி" என இஸ்லாமிய வெறுப்பை தூண்டுகிறாரா மதுரை ஆதீனம்? காவல்துறை தந்த விளக்கம் இதோ!
மதுரை ஆதீனத்தை கொலை முயற்சி செய்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை என கள்ளக்குறிச்சி காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
கடந்த மே 3-ஆம் தேதி சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக் கழகம் ஒன்றில, அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்க மதுரையிலிருந்து சென்னைக்கு மதுரை ஆதீனம் காரில் வந்துகொண்டிருந்தபோது, உளுந்தூர்பேட்டை அருகே அவர் பயணித்த கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், மதுரை ஆதீனத்தை கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாகக் கூறி செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. இது குறித்து பேட்டியளித்துள்ள மதுரை ஆதீனம், "விபத்து ஏற்படுத்தியவர்கள் குல்லா அணிந்திருந்தார்கள், தாடி வைத்திருந்தார்கள், காரில் நம்பர் பிளேட் இல்லை, பேரி கார்டை உடைத்து வந்து எங்கள் கார் மீது மோதினார்கள். நான் நிலை குலைந்து போய் விட்டேன்" என்று கூறியுள்ளதைக் காண முடிகிறது. இதனையே தமிழ் ஜனம் ஊடகமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.
மேலும் ‘விஸ்வ ஹிந்து பரிஷத் - வட தமிழ் நாடு’ தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில் “02/05/2025 அன்று ஸ்ரீ மதுரை ஆதீன சுவாமிகள் மதுரையிலிருந்து சென்னைக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது, நம்பர் பிளேட் இல்லாத ஒரு பழைய வெள்ளை நிற கார், மதுரை ஆதீனத்தின் காரின் மீது மோதியது. அந்த காரை ஓட்டி வந்தவர், தான் ஒரு முஸ்லிம் என்பதைக் குறிக்கும் தொப்பியை அணிந்திருந்தான். அதே கார் மீண்டும் சாலைத் தடுப்பில் ஸ்ரீ ஆதீனத்தின் காரை மோத முயன்றது.
சில நாட்களுக்கு முன்பு பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக ஸ்ரீ ஆதீனம் வெளியிட்ட அறிக்கைக்கு இது ஒரு பதிலாக இருக்கலாம் என்று வி.எச்.பி சந்தேகிக்கிறது. இந்த விபத்தில் ஸ்ரீ ஆதீனம் காயமடையவில்லை, அதே துணிச்சலுடன் தனது அன்றாடக் கடமைகளைச் செய்து வருகிறார்“ என்றும் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
#MaduraiAdheenamMurderAttempt#VHPNTN#IslamicFundamentalism
மதுரை ஆதீனம் மீது நடத்தப்பட்ட கொலை தாக்குதல் முயற்சி! pic.twitter.com/uF4t7FWCu6
இதே போன்று, இந்து முன்னணி அமைப்பினரும், “வாகனத்தில் அமர்ந்திருந்தவர்கள் தொப்பி அணிந்து இருந்தார்கள் என்று அவர் கூறியுள்ளார். மதுரை ஆதீனத்தின் வாகனத்தில் மோதிய மர்ம நபர்களை, காவல்துறை காப்பாற்ற முயற்சிப்பதின் மர்மம் என்ன?", என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளனர்.
மதுரை ஆதீனத்தின் வாகனத்தில் மோதிய மர்ம நபர்களை,
காவல்துறை காப்பாற்ற முயற்சிப்பதின் மர்மம் என்ன...!!
கள்ளக்குறிச்சியில் சென்று கொண்டிருந்த மதுரை ஆதீனத்தின் வாகனத்தில் மோதி விபத்து ஏற்படுத்திய விவகாரத்தில் பொய் செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி… pic.twitter.com/IwPk4KA5Tf
‘மதுரை ஆதீனம் மீது கொலை முயற்சி சதி இல்லை’ என காவல் துறை விளக்கம்:
மதுரை ஆதீனமே, தன்னை கொல்ல முயற்சி நடப்பதாக கூறிவரும் நிலையில், முதற்கட்ட விசாரணையில் கொலை முயற்சிக்கான சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. இந்த விபத்தானது முழுக்க முழுக்க மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து என கள்ளக்குறிச்சி காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “02.05.2025-ம் தேதி காலை மதுரை ஆதீனம் மடாதிபதி அவர்கள் சென்னைக்கு TN64U 4005 Fortuner என்ற பதிவெண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டை சேலம் ரவுண்டானா அருகே மற்றொரு காரின் மீது இடித்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திலிருந்து பொதுமக்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் இரு தரப்பினர்களும் சென்றுவிட்டனர்.
சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில் மேற்படி மதுரை ஆதீனத்தின் வாகனம் அஜிஸ் நகர் மேம்பாலத்தில் செல்வதற்கு பதிலாக அஜிஸ் நகர் பிரிவு சாலை வழியாக சேலம் ரவுண்டானா அருகே உளுந்தூர்பேட்டை மார்க்கத்தில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தபோது சேலத்திலிருந்து சென்னை மார்க்கமாக சேலம் ரவுண்டானா முன்பு வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை கடந்து மெதுவாக வந்த Suzuki என்ற வாகனத்தின் மீது காலை சுமார் 09.45 மணியளவில் பக்கவாட்டில் உரசியதில் மேற்படி மாருதி வாகனத்தின் முன்பகுதியிலும், Fortuner வாகனத்தின் இடது பின்பக்கத்திலும் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிறகு அவர்களாகவே சுமார் 10:00 மணியளவில் அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மதுரை ஆதீனத்தை கொலை முயற்சி செய்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. மதுரை ஆதீனம் அவர்களே தன்னை கொல்ல முயற்சி நடப்பதாக தெரிவித்து வருகிறார். முதற்கட்ட விசாரணையில் கொலை முயற்சிக்கான சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. மேற்படி விபத்தானது முழுக்க முழுக்க மதுரை ஆதீனம் அவர்கள் பயணம் செய்த Fortunன வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து எனத் தெரிகிறது. CCTV பதிவுகளை ஆய்வு செய்ததில் மதுரை ஆதீனம் அவர்கள் பயணம் செய்த வாகனம் அதிவேகமாக சென்று இவ்விபத்தினை ஏற்படுத்தியதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக மதுரை ஆதீனமோ அவர்களை சார்ந்தவர்களோ கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எவ்வித புகாரும் இதுவரை கொடுக்கவில்லை. பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிரும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இது குறித்து உளுந்தூர்பேட்டை- சேலம் சாலை ரவுண்டானாவில் வைக்கப்பட்டுள்ள CCTV காட்சிகளையும் யூடர்ன் தரப்பிலிருந்து ஆய்வு செய்தோம். மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகன ஓட்டுனரின் கவனக் குறைவால் தான் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது என்பதை வீடியோ காட்சிகளின் மூலம் அறிய முடிந்தது.
இந்நிலையில் மதுரை ஆதீனம் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி மதுரை காவல் ஆணையரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.