YouTurn

தமிழ்நாட்டின் மிக நீளமான “ஜி.டி.நாயுடு மேம்பாலம்” கட்ட 1 கி.மீ.க்கு 170 கோடி ரூபாய் செலவா? ஓர் அலசல்!

இந்தியாவில் மேம்பாலம் கட்ட சராசரியாக 1 கி.மீ.க்கு 18 கோடி ரூபாய் செலவிட்டுக்கொண்டிருக்கும் பொழுது அதே 1 கி.மீ.க்கு 170 கோடி ரூபாய் மக்கள் பணத்தில் செலவழித்து தமிழ்நாட்டின் மிக நீண்ட கோவை - அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்து பதிவு கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் மிக நீளமான “ஜி.டி.நாயுடு மேம்பாலம்” கட்ட 1 கி.மீ.க்கு 170 கோடி ரூபாய் செலவா? ஓர் அலசல்!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக்டோபர் 09) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர், கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 1,791 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிக நீளமான 10.10 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நான்கு வழித்தட “ஜி.டி. நாயுடு மேம்பாலத்தை” மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.


இந்நிலையில், இந்தியாவில் மேம்பாலம் கட்ட சராசரியாக 1 கி.மீ.க்கு 18 கோடி ரூபாய் செலவிட்டுக்கொண்டிருக்கும் பொழுது அதே 1 கி.மீ.க்கு 170 கோடி ரூபாய் மக்கள் பணத்தில் செலவழித்து தமிழ்நாட்டின் மிக நீண்ட கோவை - அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்து பதிவு கூறியுள்ளார். 



கோவையில் கட்டப்பட்ட “ஜி.டி.நாயுடு மேம்பாலம் - ஒரு பார்வை: 


கோவை அவிநாசி சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்டப் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திட்டப்பணி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இந்த பாலத்தின் மொத்த தூரம் 10.10 கிலோ மீட்டர். ஓடுதள அகலம் 17.25 மீட்டர். 304 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவிநாசி சாலையில், 4 வழித்தட உயர்மட்டப் பாலம், 6 வழித்தடத்துடன் விரிவுபடுத்தப்பட்ட தரைத்தளச் சாலை என மொத்தம் 10 வழித்தடங்களுடன் 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு, தென்னிந்தியாவிலேயே மிக நீளமான உயர்மட்ட பாலமாக இது உள்ளது. மேலும் இந்த உயர்மட்ட மேம்பாலப் பணிக்காக செக்மண்டல் கட்டுமான முறை (PSC Segmental Construction) பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது


மேலும் இந்த பாலம் மூலம், கோவை நகரில் இருந்து விமான நிலையம் செல்லும் நேரம் 45 நிமிடத்திலிருந்து வெறும் 10 நிமிடமாக குறைகிறது. கோவை நகரிலிருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், அவிநாசி செல்வதற்கு முன்பு 10 சிக்னல் சந்திப்புகளை கடந்து செல்ல வேண்டியிருந்தது. தற்போது இந்த மேம்பாலம் மூலம் அந்த பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது என்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் கூறப்பட்டுள்ளது. 


சமீபத்தில் கட்டப்பட்ட முக்கிய மேம்பாலங்களுக்கு ஒரு கி.மீ.க்கு ஆன செலவு எவ்வளவு?


கடந்த 2021ஆம் ஆண்டு கோயம்பேட்டில் திறக்கப்பட்ட நான்கு வழித்தடங்கள் கொண்ட மேம்பாலத்தின் ஒரு கி.மீ அளவு ரூ. 95 கோடியிலும், கடந்த 2022ஆம் ஆண்டு மேடவாக்கத்தில் திறக்கப்பட்ட மேம்பாலத்தின் ஒரு கி.மீ அளவு ரூ. 100 கோடியிலும் கட்டப்பட்டுள்ளது


மதுரை-நத்தம் சாலையில் 6.9 கிமீ தூர நான்கு வழி மேம்பாலத்தின் ஒரு கி.மீ அளவு ரூ.100 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. மறைமலைநகர் முதல் கிளாம்பாக்கம் வரை கட்டப்பட்டுள்ள 6 வழித்தடங்கள் கொண்ட மேம்பாலத்தின் ஒரு கி.மீ அளவிற்கான செலவு ரூ.188 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. 



தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையே 3.2 கி.மீ நீளத்திற்கு மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கான செலவும் ஒரு கி.மீ அளவிற்காக ரூ. 195 கோடி செலவு செய்யப்பட இருப்பதாகவும், மொத்தமாக இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட ரூ. 621 கோடி செலவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.



இதே போன்று லக்னோ 6 வழிச் சாலை மேம்பாலத்திற்கு ஒரு கி.மீ அளவிற்கான செலவு ரூ.260 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இந்திய வரலாற்றில் மிகவும் அதிக செலவு கொண்ட விரைவுசாலை என அழைக்கப்படும் துவாரகா விரைவுசாலைக்கான செலவு  ஒரு கி.மீ.க்கு ₹250 கோடி வரை இருக்கும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. 




பொதுவாக கட்டுமான பொருட்களின் விலை உயர்வு மற்றும் தொழிலாளர்களின் கூலி உயர்வு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, ஆண்டு தோறும் கட்டுமான செலவில் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்துகிறது நெடுஞ்சாலைத் துறை. இது தவிர பொதுவாக மேம்பாலம் மற்றும் விரைவுசாலைகள் கட்ட ஆகும் செலவு, மெட்ரோ சுரங்கத்தின் மேல் கட்டுதல், மண் உறுதிப்படுத்தல், மின்விநியோகம் மற்றும் நிலம் வாங்குதல்/கையகப்படுத்துதல் போன்ற பல காரணிகளால் மாறுபடுகிறது. 


உதாரணமாக தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலத்திற்காக, ஒரு கி.மீ அளவிற்காக ரூ. 195 கோடி செலவு ஆகும் எனக் கணக்கிடப்பட்டது. இந்த மேம்பாலம், சுரங்க மெட்ரோ இரயில் பாதையின் மேலுள்ள சாலையில் அமைக்கப்படவுள்ளதால், இந்த மேம்பாலத்திற்கான அடித்தளம் அமைக்க அண்ணா சாலையின்‌ மேற்பரப்பில் இருந்து 7 மீட்டர் வரை தோண்டப்பட வேண்டும். மேலும் இதற்காக வழக்கமான பயன்படுத்தப்படும் Piling Machineக்கு பதிலாக Micro- Piling Machine பயன்படுத்தப்படுகிறது. இந்த குறைந்த ஆழத்தில் பாலத்தின் தூண்களுக்கான அடித்தளம் அமைக்கப்படுவதால், அதனை நிலையானதாகவும் வலுவானதாகவும் அமைக்க சில சிறப்பு கட்டுமான பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இது குறித்து நம் பக்கத்தில் ஏற்கனவே கட்டுரை வெளியிட்டுள்ளோம். 


மேலும் படிக்க: தமிழ்நாட்டின் அதிக செலவு மிக்க தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலம்! பின்னணி என்ன?


இவ்வாறு மேம்பாலத்தின் கட்டுமான பணியில் உள்ள சிக்கல்கள் அனைத்தையும் கணக்கில் கொண்டே மேம்பாலம் அமைப்பதற்கான செலவு கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் மேம்பாலம் கட்ட சராசரியாக 1 கி.மீ.க்கு 18 கோடி ரூபாய் செலவிட்டுக்கொண்டிருக்கும் பொழுது அதே 1 கி.மீ.க்கு 170 கோடி ரூபாய் மக்கள் பணத்தில் செலவழித்து தமிழ்நாட்டின் மிக நீண்ட கோவை - அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது எனக் கூறுவது தவறான ஒப்பீடு!


ஆதாரங்கள்:


Land acquisition, flyovers and tunnels raised Bharatmala cost: Official


PER KM. COST OF CONSTUCTION OF EXPRESSWAYS


14km skyway to decongest Polytechnic-Kisan Path road


Rs 18 crore per km to Rs 250 crore per km, CAG flags ‘very high’ project cost of Dwarka Expressway


Teynampet-Saidapet flyover is TN’s costliest at Rs 195 crore per km


Lucknow's Rs 2,000 crore flyover: A 7.7 km, 6-lane solution to traffic woes


National Highway (NH) network increased by 60% from 91,287 km in 2014 to 1,46,145 km in year 2023

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை