YouTurn

முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? வதந்தி Alert!

பொருட்படுத்தத்தகாத (Negligible Amount) அளவில் முட்டையில் இருக்கக்கூடிய AOZ வேதிப்பொருளால் புற்றுநோய் உண்டாவதில்லை என்று மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.

முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? வதந்தி Alert!

கடந்த சில தினங்களுக்கு முன்னால் ‘Trustifed’ என்ற யூடியூப் தளத்தில் ஒரு வீடியோ வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில், ‘Eggoz Nutrition’ என்ற நிறுவனத்தின் முட்டைகளை ஆய்வகத்தில் சோதித்து பார்த்ததாகவும், அதில் நைட்ரோஃபுரான் (Nitrofuran) மற்றும் நைட்ரோமிடாசோல் (Nitroimidazole) என்ற புற்றுநோய் உண்டாக்கக்கூடிய வேதியியல் மூலக்கூறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. 



இதனைத் தொடர்ந்து ‘Eggoz Nutrition’ நிறுவனம் தனது முட்டைகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தி அதன் அறிக்கையை அந்நிறுவனத்தின் வலைத்தளத்தில் பதிவேற்றி இருந்தது. அதில் புற்றுநோய் உண்டாக்கக்கூடிய ஆபத்தான மூலக்கூறுகள் ஏதும் தனது நிறுவனத்தின் முட்டைகளில் இருக்கவில்லை என்று விளக்கமளித்திருந்தது. 



நைட்ரோஃபுரான், நைட்ரோமிடாசோல்  என்ன மாதிரியான வேதிப் பொருட்கள்? 


நைட்ரோஃபுரான் என்பது கோழி, பன்றி, இறால் போன்ற பண்ணையில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு நுண்ணுயிர் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் கிருமிநாசினி (antibiotics) ஆகும். இந்த வேதிப்பொருள் கோழி, பன்றி போன்ற விலங்குகளின் திசுக்களில் படிந்து, பின்னர் வளர்சிதை மாற்றத்திற்கு (Metabolism) உள்ளாகி AOZ, or 3-amino-2-oxazolidinone என்ற வேறொரு வேதிப்பொருளாக மாறுகிறது. இந்த AOZ என்ற வேதிப்பொருள் அதிக நாட்கள் இந்த பண்ணை விலங்குகளின் உடலில் இருக்கக்கூடியது. இது அந்த விலங்குகளின் உடலில் இருப்பதை கண்டறிவதன் மூலம் இந்த விலங்குகள் வளர்ப்பில் நைட்ரோஃபுரான் போன்ற கிருமிநாசினிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டறிய முடியும்.


இந்த நைட்ரோஃபுரான் என்ற கிருமிநாசினியும் அதன் வளர்சிதை மாற்றத்தினால் உண்டாகும் AOZ குழு வேதிப்பொருட்களும் மனிதர்களில் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது. இதனால் கால்நடை வளர்ப்பில் இந்த நைட்ரோஃபுரான் கிருமிநாசினியை பயன்படுத்துவதை இந்திய அரசு தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் தான் ‘Eggoz Nutrition’ நிறுவனத்தின் முட்டைகளில் நைட்ரோஃபுரான், நைட்ரோமிடாசோல் ஆகிய வேதிப்பொருட்கள் இருந்ததாக வெளியிடப்பட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. ‘Trustifed’ யூட்யூப் தளம் ஆய்வு செய்தபோது, ‘Eggoz Nutrition’ நிறுவனத்தின் முட்டைகளில் AOZ  வேதிப்பொருளின் அளவு 0.74 µg/kg ஆக இருந்ததாக சொல்லப்பட்டது. 


இது இந்த முட்டையை இட்ட கோழிகளை வளர்ப்பதற்கு தடைசெய்யப்பட்ட நைட்ரோஃபுரான் கிருமிநாசினி பயன்படுத்திருக்க அதிக வாய்ப்பிருப்பதாக சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனால் இந்த முட்டைகளை உண்பவர்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டன. 



ஆனால் முட்டையில் 0.74 µg/kg அளவில் AOZ இருப்பது இந்தியாவில் உணவில் அது அனுமதிக்கப்பட்ட அளவான 1 µg/kg என்பதைவிட குறைவானதே என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதேபோல், ஐரோப்பிய சந்தைகளில் விற்கப்படும் முட்டைகளில் AOZ  வேதிப்பொருள் 0.5 µg/kg க்கு மிகாமல் இருக்கவேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது. இதனை குறிப்பிட்டு, ஏன் ஐரோப்பியர்கள் அனுமதித்த அளவைவிட இந்தியாவில் AOZ  வேதிப்பொருள் இரண்டு மடங்கு அதிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளது? இது புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் என்றால் இதனை முற்றிலுமாக தடை செய்யக்கூடாது? என்று சமூக வலைத்தளங்கள் பலர் பதிவிட்டு வருகிறார்கள்.



FSSAI என்ற ’இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்’ அவ்வப்போது நடத்தும் சோதனைகளில் சிறிய முறைபடுத்தப்படாத பண்ணைகளில் இருந்து வரும் இறைச்சி மற்றும் முட்டைகளில் சிறிய அளவிலான AOZ வேதிப்பொருள் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் இது ஆபத்து விளைவிக்கக்கூடிய அளவு அல்ல என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். 


பொருட்படுத்தத்தகாத (Negligible Amount) அளவில் முட்டையில் இருக்கக்கூடிய AOZ வேதிப்பொருளால் புற்றுநோய் உண்டாவதில்லை. AOZ வேதிப்பொருளால் புற்றுநோய் உண்டாகுமா என்று எலி போன்ற விலங்குகளில் ஆய்வகத்தில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மேற்கூறிய அளவில் முட்டையில் இருப்பதை விட நூறு மடங்கு அதிகமாக அளவில் தான் எலி போன்ற விலங்குகளில் AOZ வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்குகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. 


மருத்துவர்கள் சொல்வது என்னவென்றால், பொருட்படுத்தத்தகாத (Negligible Amount) அளவில் AOZ வேதிப்பொருள் இருக்கக்கூடிய முட்டைகள் புற்றுநோயை உண்டாக்குவதில்லை. அந்த வேதிப்பொருள் உணவுச் சங்கிலியில் மிகப்பெரும் அளவில் நுழையும் போது தான் ஆபத்து ஏற்படுகிறது. மிக நீண்ட காலத்திற்கு இத்தகைய அதிக அளவிலான AOZ நமது உணவு சங்கிலியில் இருக்கும் போது தான் புற்றுநோய் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் இந்தியாவில் முறைப்படுத்தப்பட்ட சந்தைகளிலிருந்து வாங்கப்படும் முட்டைகளில் புற்றுநோய் உண்டாக்கக்கூடிய அளவில் வேதிபொருட்கள் இருந்ததாக எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. 



முட்டையில் தடைசெய்யப்பட்ட நைட்ரோஃபுரான் என்ற வேதிப்பொருள் இருப்பதாக பரப்பப்பட்ட தகவலை தொடர்ந்து, நாடு முழுவதும் பிராண்டட் மற்றும் பிராண்டட் இல்லாத முட்டைகளின் மாதிரிகளை சேகரித்து, இந்தியா முழுவதும் உள்ள 10 ஆய்வகங்களில் சோதனை செய்ய வேண்டும் என்று FSSAI உத்தரவிட்டுள்ளது.

இதனால் நாம் பொதுவாக உண்ணும் முட்டைகளில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய வேதிப்பொருட்கள் இருப்பதாக மிகைபடுத்தப்பட்டு பரப்பப்படுவதை நாம் நம்பத் தேவையில்லை என்று மருத்துவர்கள் விளக்கமளிக்கிறார்கள். முட்டைகள் தான் மலிவான விலையில் புரதம், வைட்டமின் போன்ற நுண்ணூட்ட சத்துகளை பெரும்பகுதியான மக்களுக்கு வழங்கக்கூடிய உணவாக இருக்கிறது. இதனால் முட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்கள் உண்ணக்கூடிய உணவாக இருக்கிறது. முட்டை போன்ற வெகுமக்கள் உண்ணும் உணவுப்பொருளில் சிறிதளவே ஆனாலும் விஷத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள் இருப்பதை அனுமதிக்க முடியாது. இதனால் தடை செய்யப்பட்ட நைட்ரோஃபுரான் விலங்கு பண்ணைகளில் பயன்படுத்தப்படுவதை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும். பண்ணைகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் முட்டைகளை சீராக ஆய்வுக்குட்படுத்தி அதன் தரம் நிர்ணயிக்கப்பட்ட அளவில் இருப்பதை உறுதி செய்யவேண்டும். அந்த பொறுப்பு FSSAI போன்ற அரசு நிறுவனங்களுக்குதான் உண்டு.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை