ஆதார் அட்டையை அடிப்படையாகக் கொண்டு பிறந்ததேதியை நிர்ணயிக்க முடியுமா?
பிறந்ததேதியை தீர்மானிக்க பள்ளிச் சான்றிதழ் நம்பகமான ஆதாரமாக இருக்குமென்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆதார் ஆட்டையை பிறந்ததேதிக்கான ஆதாரமாக ஏற்றுக்கொண்ட பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரித்து உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. மேலும் பள்ளிச் சான்றிதழ் பிறந்ததேதிக்கான நம்பகமான ஆதாரமாக இருக்குமென்று தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.

இந்த வழக்கு சரோஜ் என்பவரால் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டின்மூலம் கொண்டு வரப்பட்டது. சிலக் ராம் என்பவர் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இந்த சிலக் ராம் என்பவருக்கு சரோஜ் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த விபத்திற்கு காப்பீட்டு தொகையை வழங்கவேண்டுமென்று கோரி ’மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயத்தில்’ (Motor Accident Claims Tribunal) முறையீடு செய்தனர். இதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு தீர்ப்பாயத்தால் 19,35,400 ரூபாய் இழப்பீட்டுத்தொகையாக வழங்கப்பட்டது.
இந்த வழக்கு பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது, இந்த இழப்பீட்டுத்தொகை 9,22,336 ரூபாயாக குறைக்கப்பட்டது. காப்பீடு செய்தவரின் வயதை ஆதார் அட்டையில் உள்ள பிறந்ததேதியின் அடிப்படையில் கணக்கிட்டு, அவர் இறக்கும்போது 47 வயதுடையவர் என்பதை காரணம் காட்டி இழப்பீட்டுத்தொகை குறைக்கப்பட்டது.
மோட்டார் வாகனச் சட்டத்தின் (1988) படி, இறந்தவர்களுக்கான இழப்பீடு என்பது, இறந்தவரின் வயது, அவரைச் சார்ந்துள்ள குடும்ப நபர்களின் எண்ணிக்கை ஆகிய காரணிகளை கணக்கில் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. வயதின் மூலமாக கணக்கிடப்படும் ’பெருக்கல் கூறு’ (Multiplier) என்பது, இறந்தவர் மூலமாக அவரைச் சார்ந்தவர்களுக்கு கிடைக்கக்கூடிய நிதிப் பங்களிப்புகளை பிரதிபலிப்பதாக உள்ளது. இந்த வழக்கில் ஆதார் அட்டையை அடிப்படையாகக் கொண்டு, இறந்தவரின் வயது தீர்மானிக்கப்பட்டு, அதன்படி பெருக்கல் கூறை ’13’ என்று கணக்கிட்டு இழப்பீடு உயர்நீதிமன்றத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சஞ்சய் கரோல் மற்றும் உஜ்ஜல் புயன் ஆகியோரை நீதிபதிகளாகக் கொண்ட அமர்வு, மத்திய பிரதேசம், டெல்லி, பஞ்சாப் & ஹரியானா, குஜராத் மற்றும் பம்பாய் உயர்நீதிமன்றங்களின் முந்தைய தீர்ப்புகளை சுட்டிக்காட்டி ”ஆதார் என்பது வயது அல்லது பிறந்த தேதிக்கான உறுதியான ஆதாரம் அல்ல” என்று தீர்ப்பளித்தது.
‘ஒரு நபரின் அடையாளத்தை நிறுவதற்காக ஆதார் அட்டை பயன்படுத்தப்படலாம். ஆனால், ஒரு நபரின் பிறந்ததேதியை நிர்ணயிக்கும் அடிப்படை ஆதாரமாக ஆதார் ஆட்டை இருக்கமுடியாது’ என UIDAI அமைப்பு 2018 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் வெளியிட்டுள்ள இரண்டு சுற்றறிக்கைகள் தெளிவுபடுத்தியுள்ளதை இந்த உச்சநீதிமன்ற அமர்வு சுட்டிக்காட்டியது.
இதனைக்கணக்கில் கொண்டு, பள்ளிச் சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயம் வயதை தீர்மானத்தது செல்லும் என்று இந்த உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. இதன்படி காப்பீடு கோரி மனு அளிக்கப்பட்ட தேதியிலிருந்து 8% வட்டி விகிதத்துடன் 15,00,000 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

இதேபோல், நீதியரசர் புட்டசாமி Vs இந்திய ஒன்றியம் வழக்கிலும், 2019ஆம் ஆண்டின் பிற வழக்குகளிலும் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு, ‘ஆதார் என்பது ஒரு நபரின் வெவ்வேறு ஆவணங்களின் அடிப்படையில் சில தனித்துவமான அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட அடையாள ஆவணம்தான்’ என்று சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆதார் அட்டையின் அடிப்படையில் பிறந்ததேதி மற்றும் வயது கணக்கிடக் கூடாது என்பதற்கான மற்றுமொரு நீதித்துறை தீர்ப்பாக இதனை எடுத்துக்கொள்ளலாம்.