YouTurn

இந்துகளின் எண்ணிக்கை குறைந்து வருவது பற்றி பேசினாரா ஆந்திராவின் முதல்வர்?

மக்கள்தொகை வளர்ச்சி குறைந்து வருவதால் இளைஞர்களின் விகிதம் (Proportion) குறைந்து வருவது பற்றி பொருளாதார கண்ணோட்டத்தில் பேசினார் சந்திரபாபு நாயுடு.

இந்துகளின் எண்ணிக்கை குறைந்து வருவது பற்றி பேசினாரா ஆந்திராவின் முதல்வர்?

இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை கணக்கில்கொண்டு, ‘இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டால் சலுகைகள் கொடுக்கப்படும்’ என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாக, வலதுசாரிகளால் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.



அமராவதியில் முன்னாள் அரசாங்கத்தால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கட்டுமானப் பணிகளை துவங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ’தம்பதிகள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வதை ஊக்கப்படுத்த, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது பற்றி சிந்தித்து வருகிறோம்’ என்று தெரிவித்தார்.


‘இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது’ என்று சட்டம் வகுத்திருந்த ஆந்திராவில், முதல்வர் இப்படி பேசவேண்டிய காரணம் என்ன?


’1950களில் 6.2 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் சராசரி மக்கள்தொகை வளர்ச்சி, 2021ஆம் ஆண்டில் 2.1 சதவீதமாக குறைந்திருக்கிறது. ஆந்திராவில் இது இன்னும் குறைவாக 1.6 சதவீதமாக இருக்கிறது. இதனால் ஆந்திராவின் மக்கள்தொகையில் இளைஞர்களின் விகிதம் (Proportion) குறையும்.  தற்போது ஆந்திரா மக்கள் தொகையில் 32ஆக இருக்கும் சராசரி வயது, 2047ஆம் ஆண்டில் 40ஆக உயரும்.


இதனால் 2027ஆம் ஆண்டுக்கு பிறகு ஆந்திராவில் இளைஞர்களைவிட வயதானவர்களே அதிகமாக இருப்பார்கள்’ என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியிருந்தார். அவரது பேச்சின் முக்கியமான சாரமாக இருப்பது, ‘மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் இளைஞர்களின் விகிதம் குறைவானால், வேலைதிறனுள்ள தொழிலாளர் பட்டாளமும் குறையும். இதனால் பொருளாதாரம் பாதிக்கப்படும்’ என்பதுதான்.


இந்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் என்பது  Total Fertility Rate  (TFR) என்று சொல்லப்படக்கூடிய ‘மொத்த கருவுறுதல் விகிதத்தின்’ அடிப்படையில் கணக்கிடப்படுவதாகும். ‘மொத்த கருவுறுதல் விகிதம்’ என்பது ஒரு பெண் தனது கருவுறும் திறனுள்ள ஆண்டுகளில் பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கையை குறிப்பதாகும்.


இந்த  ‘மொத்த கருவுறுதல் விகிதம்  (TFR)’ என்பது 2.1ஆக இருந்தால், தற்போது இருக்கும் மக்கள்தொகையை கூடாமல் குறையாமல் அப்படியே அடுத்த தலைமுறையில் தக்கவைக்க முடியும். TFR வெகுகாலத்திற்கு 2.1க்கும் குறைவாக இருந்தால், மக்கள்தொகை குறையத் தொடங்கும். இதனால், வயதானவர்கள் எண்ணிக்கை அதிகமாகும். அதாவது, குறிப்பிட்ட அளவு மக்கள்தொகையில் இளைஞர்கள் விகிதம் (Proportion) குறையும். இது வேலைத்திறனுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறையை ஏற்படுத்தும். 


இதனை கணக்கில் கொண்டுதான் ஆந்திர முதல்வர் “இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடுவதில் இருந்து விலக்கி வைக்கும் பழைய சட்டத்தை திரும்பப்பெருவதாக சமீபத்தில் மாநில அமைச்சரவை முடிவெடுத்திருப்பதாகவும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட முடியும் என்ற புதிய சட்டத்தை கொண்டுவருவது பற்றி சிந்தித்து வருவதாகவும்” பேசியிருந்தார்.


ஆந்திர முதல்வரின் இந்த பேச்சிற்கு மதச்சாயம் பூசி,  ’இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை கணக்கில்கொண்டு’ இவ்வாறு பேசுகிறார் என்று பொய்த்தகவலை பரப்புகின்றனர். ஆந்திர முதல்வர், பொருளாதார கண்ணோட்டத்தில் பேசியதை திரித்து மதக் கண்ணோட்டத்தில் வலதுசாரிகள் பரப்புகின்றனர். 


பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை