குழந்தைகள் இறப்பு விகிதம்: தமிழ்நாட்டின் நிலை என்ன?
இந்தியாவில் முன்னேறிய மாநிலங்களில் கூட சாதி ரீதியான ஏற்றுத்தாழ்வுகள் பொருளாதார வாழ்விலும், மருத்துவத்தை அணுகுவதிலும் ஆதிக்கம் செலுத்துவதைக் காட்டுவதாக இருக்கிறது.
கடந்த 2025-26 நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் (Economic Survey 2025-26), இந்தியாவில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் இறப்பு விகிதங்கள் (Mortality Rates) குறித்தும் பேசப்பட்டிருந்தது. அதில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தில் (Infant Mortality rate) கேரளாவும் தமிழ்நாடும் இந்தியாவிற்கே முன்னோடியாக இருப்பதாக தரவுகள் சொல்கிறது.
பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் (IMR) என்பது பிறக்கும் 1000 குழந்தைகளில் ஒரு வயதை அடையும் முன்பே எத்தனை குழந்தைகள் இறந்து போகிறது என்பதை கணக்கிடுவதாகும். 2023ஆம் ஆண்டின் தரவுகள் படி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் 37 என்ற அளவிற்கு அதிகமாக இருக்கிறது. அதாவது பிறக்கும் 1000 குழந்தைகளில் ஒரு வயதை அடையும் முன்பே 37 குழந்தைகள் இறந்து போகின்றன.

ஆனால், கேரளாவில் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் 5ஆகவும், தமிழ்நாட்டில் இது 12ஆகவும் இருந்திருக்கிறது. இதில் இந்தியாவின் தேசிய சராசரி 25ஆக உள்ளது. அதாவது, இந்தியாவில் பிறக்கும் 1000 குழந்தைகளில் ஒரு வயதை அடையும் முன்பே 25 குழந்தைகள் இறந்து போகின்றன. எந்த அளவிற்கு குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறதோ அந்த அளவிற்கு ஒரு மாநிலம் சிறப்பாக செயல்படுவதாக அர்த்தம்.
மேற்கூறிய தரவுகளிலிருந்து தமிழ்நாடு மருத்துவக் கட்டமைப்பில் முன்னோடியாக இருப்பதாக கூறலாம். கற்பிணி பெண்களுக்கான மருத்துவ உதவி, மருத்துவமனைகளில் மகப்பேறு நடப்பது (Institutional delivery), குழந்தைகளுக்கான தடுப்பூசி என பல வகைகளில் தமிழ்நாடு இந்திய சராசரியை விட மேம்பட்டதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு மருத்துவமனைகளில் மகப்பேறு நடப்பது அதிகரித்துள்ளதும் முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த உண்மைக்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. ஒரு நாட்டில் உள்ள இறப்பு விகிதம் என்பது அதன் பொருளாதார செயல்திறனையும் அதன் மருத்துவ கட்டமைப்பையும் மதிப்பீடு செய்ய முக்கியமாக அளவுகோலாக இருக்கிறது. அதேநேரத்தில் இறப்பு விகிதம் என்பது ஒரு நாட்டில் பல்வேறு சமூகங்களுக்கு இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வை (economic disparities) பற்றிய சித்திரத்தை துல்லியமாக காட்டுகிறது. மேலும் அது இந்த ஏற்றத்தாழ்வு எந்த வகைகளில் எல்லாம் இருக்கிறது என்பதையும் நமக்குச் சொல்லும்.
இந்தியாவின் மருத்துவ கட்டமைப்பு எல்லா சமூக பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் பொதுவாக அணுகக்கூடிய வகையில் இல்லை. குறிப்பாக 1991-ல் நவ தாராளவாத பொருளாதார கொள்கை அமல்படுத்த தொடங்கிய பின்னர், பட்டியல் சமூக மக்களுக்கும் பிற மக்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு அனைத்து வகைகளிலும் அதிகரித்திருக்கிறது.

இந்திய அரசாங்கம் செய்துள்ள பல்வேறு கள ஆய்வுகளின் படி, உயர்சாதிகள் என்று சொல்லப்படும் சாதிகளைக் (Non SC/ST) காட்டிலும் பட்டியல் சமூக மக்கள் மத்தியில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக 2019-21 ஆண்டுகளில் செய்யப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வின் (NFHS) படி, இந்தியாவில் தேசிய அளவிலான பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் (IMR) என்பது 35.2-ஆக இருக்கிறது. ஆனால் பட்டியல் சமூக மக்கள் மத்தியில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் என்பது 40.8-ஆகவும், பழங்குடிகள் மத்தியில் இது 41-ஆகவும் இருக்கிறது. இது அரசின் கொள்கை முன்னெடுப்புகள் எல்லா சாதிகளுக்கும் பொதுவான வகையில் சென்று சேரவில்லை என்பதை காட்டுகிறது.
இதில் தமிழ்நாடும் விதிவிலக்கல்ல என்பது கசப்பான உண்மை. 2019-21 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் நகர்புறங்களில் 13.7ஆகவும் கிராமப்புறங்களில் 21.6ஆகவும் இருந்தது. அதேபோல், ஆதிக்க சாதிகள் (Non SC/ST) மத்தியில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் 14.9ஆகவும், பட்டியல் சமூக (SC) மக்களிடத்தில் இது 24.8ஆகவும், பழங்குடி (ST) மக்களிடத்தில் இது 31.3ஆகவும் இருக்கிறது.

தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் மருத்துவக் கட்டமைப்பால் பயன்பெறுபவர்கள் மத்தியில், கிராமப்புறம் (Rural) நகரப்புறம் (Urban) சார்ந்த ஏற்றத்தாழ்வும், சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வும் நிலவதை தெளிவாகக் காணமுடிகிறது.
மருத்துவமனைகளில் மகப்பேறு நடப்பது தமிழ்நாட்டில் பரவலாக அதிகரித்திருப்பது பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளதற்கு முக்கிய காரணமென்று மேலே குறிப்பிட்டுள்ளோம். தமிழ்நாட்டில் ஏற்கனவே 98.9 சதவீதம் மகப்பேறு மருத்துவமனைகளில் தான் நடக்கிறது. இதில் பெரியதாக முன்னேற்றம் காண்பதற்கு இடமில்லை.
அதேவேளையில், பச்சிளம் குழந்தைகள் இறந்து போவதற்கு மற்றொரு முக்கிய காரணமாக இருப்பது தாய்மார்கள் சரியான ஊட்டசத்து இல்லாமல் இருப்பது தான். இதனால் ஊட்டச்சத்து குறைபாடு (malnourishment), இரத்த சோகை நோய் (anaemia) ஆகியவற்றின் மீது அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான சுகாதார ஆய்வில், 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளில் 60 சதவீத பேருக்கு இரத்த சோகை நோய் இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. அதேபோல் 15 முதல் 49 வயதுள்ள பெண்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேருக்கு இரத்த சோகை நோய் உள்ளது.
வறுமையும் அதனால் ஊட்டச்சத்து குறைபாடும் அதன் காரணமாக இரத்த சோகை நோயும் குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கு காரணமாக இருக்கிறது. இந்த பொருளாதார பின் தங்கிய நிலையும் வறுமையும் அனைத்து மக்களுக்கும் பொதுவானதல்ல. தமிழ்நாட்டில் கூட பிற்படுத்தப்பட்ட சாதிகளைக் காட்டிலும் பட்டியல் சமூக மக்களிடம் வறுமை அதிகமாக இருக்கிறது. 2016ஆம் ஆண்டின் தரவுகள் படி, தமிழ்நாட்டில் பட்டியல் சமூக மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கும் இடையிலான வருமான ஏற்றத்தாழ்வு இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமானதாகும்.
இது இந்தியாவில் முன்னேறிய மாநிலங்களில் கூட சாதி ரீதியான ஏற்றுத்தாழ்வுகள் பொருளாதார வாழ்விலும், மருத்துவத்தை அணுகுவதிலும் ஆதிக்கம் செலுத்துவதைக் காட்டுகிறது. இதனால் தான் மருத்துவ கட்டமைப்பில் முன்னோடியான தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதிலும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் வெவ்வேறு சாதி படிநிலைகள் மற்றும் பொருளாதார நிலைகளைப் பொறுத்து வேறுப்பட்டதாக இருக்கிறது.