அமெரிக்காவிடம் இருந்து அதிக இறக்குமதி செய்யும் இந்தியா.. விவசாயிகளின் காவலராக அவதாரம் எடுத்துள்ள பிரதமர் மோடி!
அமெரிக்காவுடனான வர்த்தக மற்றும் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட பின்னடைவுகளை மறைக்க விவசாயிகளின் காவலராக வேடத்தைத் தற்போது ஏற்றிருக்கிறாரா பிரதமர் நரேந்திர மோடி?
ஜூலை மாத இறுதியில் இந்தியா மீதான இறக்குமதி வரியை 25 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அது ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார். இந்நிலையில் இந்தியா, ரஷியாவிடம் எண்ணெய் இறக்குமதி செய்வதைக் கண்டித்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடுத்தடுத்து உயர்த்தி அறிவித்துள்ளார். ஏற்கனவே 25% இறக்குமதி வரியை அறிவித்த அவர், மீண்டும் 25% இறக்குமதி வரியை உயர்த்தியதன் மூலம், தற்போது 50% ஆக வரி அதிகரித்துள்ளது.
ஆசிய பிராந்தியத்திலேயே விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வரி:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது விதித்துள்ள 50% வரி, ஆசிய பிராந்தியத்திலேயே விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வரி என்று சொல்லப்படுகிறது, இந்த வரி ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதனால் சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா கடும் பாதிப்புகளைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சீனா மற்றும் பாகிஸ்தானைக் காட்டிலும் இந்தியாவுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்துள்ளதை இங்கு கவனித்தாக வேண்டும்.
அமெரிக்கா விதித்த 50% வரியால் இந்தியாவில் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு?
இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத அமெரிக்க வரி விதிப்பு இறால், கரிம வேதிப்பொருட்கள், ஆடைகள், பின்னலாடைகள், அலங்காரப்பொருட்கள், வைரங்கள், இயந்திரங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட ஒன்பது தயாரிப்பு வகைகளின் ஏற்றுமதியை 50-70 சதவீதம் பாதிக்கும் என்று ஜிடிஆர்ஐ கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
வரிவிதிப்பால் எஃகு, அலுமினியம், தாமிரம் மற்றும் வாகனங்களின் பாகங்கள் போன்ற பொருட்களின் ஏற்றுமதியிலும் அதிக தாக்கம் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

விவசாயிகளின் காவலராக அவதாரம் எடுத்த பிரமர் மோடி!
இந்த விலையேற்றத்தைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேசக் கருத்தரங்கில் விவசாயிகள் முன்பாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவின் வரிவிதிப்புக் குறித்து மௌனம் கலைந்துள்ளார். "அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு அனுமதி அளித்தால் இந்திய விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். மீனவர்கள், பால் விவசாயிகளின் நலன்களில் ஒருபோதும் சமரசம் கிடையாது. விவசாயிகளின் நலனுக்காக என்னுடைய தனிப்பட்ட நலன்களில் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை" என்று அவர் கூறி இருக்கிறார்.
பிரதமர் மோடியின் இக்கருத்தின் மூலம் அவர் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களால் இந்திய விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இந்தியா கடந்த பல ஆண்டுகளாக வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. இதில் அமெரிக்காவும் அடக்கம்.
இது குறித்து ஒன்றிய வேளாண் அமைச்சகம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியிட்ட ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அறிக்கையின்படி, மொத்தம் ரூ.2,39,189.50 கோடி மதிப்பிலான வேளான் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இவற்றுள் எண்ணெய், பழங்கள், பருப்பு வகைகள், ரப்பர், காட்டன் உள்ளிட்டவை அடக்கம்.
இதில் அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், 2021-2022 நிதியாண்டின்படி, 1732.66 மில்லியன் டாலர் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 11% சதவீதம் அதிகம்.
இதே போன்று, அமெரிக்க வேளாண் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 1,693.2 மில்லியன் டாலர்களுக்கு உணவுப் பொருட்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கியுள்ளது. இது கடந்த 2024 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டைக் காட்டிலும் 49.1% அதிகம். அதாவது 2024 ஜனவரி முதல் ஜூன் வரை 1,135.8 மில்லியன் டாலர்களுக்கு அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகள், எத்தனால், சோயா பீன், காட்டன் ஆகிய பொருட்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்து வருகிறது. இதில் எத்தனாலை எரிபொருளாகவும் இந்தியா பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் உலகளவில் அமெரிக்க வேளாண் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 14 வது இடத்தில் இடத்தில் இருப்பதாக Foodexport.org என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.
வேளாண் பொருட்கள் இறக்குமதிக்கு எதிராகப் பேசி வரும் பிரதமர் மோடி தலைமையிலான இதே ஒன்றிய அரசுதான், கடந்த 2025 மே மாதம் சோயா எண்ணெய், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் ஆகிய சமையல் எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் வகையில் இறக்குமதிக்கான அடிப்படை சுங்க வரியைக் குறைத்தது.
இறக்குமதி மட்டுமல்ல, இந்தியாவில் வேளாண் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு 100% அனுமதியளிக்கப்பட்டு 12 ஆண்டுகள் கடந்துவிட்டது. 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்தக் கொள்கையில், 2014 ஆண்டு பிரதமராகி தற்போது மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி எதுவும் செய்யவில்லை. இதன் மூலமாகவும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றன.
நிலைமை இவ்வாறு இருக்க, அமெரிக்காவுடனான வர்த்தக மற்றும் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட பின்னடைவுகளை மறைக்க விவசாயிகளின் காவலராக வேடத்தைத் தற்போது ஏற்றிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!