YouTurn

அதிகரிக்கும் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்! திமுக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

அதிகரிக்கும் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்! திமுக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்ததால் இதுவரை சுமார் 50 பேர் இறந்துள்ளனர். இன்னும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சுமார் 35 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கடந்த 18ஆம் தேதி நள்ளிரவு கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் பிரவீன் என்பவர் விஷச்சாராயம் அருந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். மது அருந்தியுள்ளார் என அரசு மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துள்ளனர்.

ஒருவேளை அவர் அனுமதிக்கப்பட்டிருந்தால் விஷச்சாராயம் அருந்தியுள்ளதை மருத்துவப் பரிசோதனையில் கண்டறிந்து, இத்தனை உயிர்கள் இறந்திருப்பதைத் தடுத்திருக்கலாம். பிரவீனின் உறவினர் சுரேஷ் என்பவரும் இதே காரணங்களினால் 19ஆம் தேதி அதிகாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். பின்னர் அடுத்தடுத்து 5 பேர் உயிர் இழந்த நிலையில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகத் தொடங்கின.

அத்தகைய செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் "கள்ளச்சாராயம் குடித்து ஐந்து பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் செய்தியில் உண்மையில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

ஆனால், அந்த ஊர் மக்கள் இவர்களின் இறப்பிற்குக் விஷச்சாராயமே காரணம் என உறுதியாகத் தெரிவித்து வந்தனர். இப்பகுதியைச் சேர்ந்த பலர் இதே போல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்தனர். தொடக்கத்திலேயே இது விஷச்சாராயத்தால் நிகழ்ந்த மரணம் எனக் கண்டறியப்பட்டிருந்தால் பல இறப்புகள் தடுக்கப்பட்டிருக்கலாம். 

இதன்தொடர்ச்சியாக இந்தப் பிரச்சனையை முன்னரே கண்டறிந்து சரியாகக் கையாளாத மாவட்ட ஆட்சியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக எம்.எஸ் பிரசாந்த் என்பவர் தற்போது பொறுப்பேற்றுள்ளார். மேலும் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அப்பதவிக்கு ரஜத்சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இறப்பு எண்ணிக்கை 35-ஐ தாண்டிய நிலையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்றைய தினம் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட்டனர். மேலும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் ஆகியோரும் கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  டாக்டர்.திருமாவளவன் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்ததுடன், வரும் 24ஆம் தேதி தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட வேண்டுமென ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த வழக்கில் கன்னுக்குட்டி(எ) கோவிந்தராஜ் உள்பட 4 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோசப் ராஜா என்பவரும் இன்றைய தினம் (ஜூன்.21) சிபிசிஐடி-யால் கைது செய்யப்பட்டுள்ளார். 

தமிழ்நாடு அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா பத்து இலட்சம் ரூபாயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு மே மாதம் மரக்காணத்தில் இதே போன்று கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்தனர். அப்போதும் இதே போன்ற நிதியுதவியை அரசு அறிவித்தது. ஒருவர் கள்ளச்சாராயம் குடித்து இறக்கிறார் என்றால் அவருக்கு எதற்கு நிவாரணம் என்கிற கருத்துகளும் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படுகிறது. 



பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம், அதிகாரிகள் பணிநீக்கம் மற்றும் பணியிடை மாற்றம் எல்லாம் ஒருபுறம் இருக்க, மரக்காணத்தில் கள்ளச்சாராய மரணம் நடந்து ஓராண்டு மட்டுமேயான நிலையில் அரசு இதனைத்தடுக்க எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது மக்களின் அடிப்படை கேள்வியாக உள்ளது. இப்படிக் கள்ளச்சாராயம் எளிதில் புழங்கக் காவல்துறை மற்றும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணமென அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



இதுதொடர்பாக நமது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றும் பதிவிட்டுள்ளோம்.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை