கருப்பை வாய் புற்றுநோயும் அதற்கெதிரான தடுப்பூசியும்!
ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று காரணமாக பெண்களுக்கு ஏற்படும் கருப்பை வாய் புற்றுநோய் இந்தியாவில் இரண்டாவது அதிக புற்று நோய் மரணங்களை ஏற்படுவதாக இருக்கிறது.
கடந்த ஜனவரி 27ஆம் தேதி சென்னையில் நடந்த தமிழ்நாடு சர்வதேச மகளிர் மாநாட்டில், Human papillomavirus (HPV)-க்கு எதிரான தடுப்பூசி திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்பட்டுத்தினார். இந்த தடுப்பூசி திட்டத்தின் மூலம் 14 வயதுக்கு மேல் உள்ள 3,38,649 பெண் குழந்தைகள் பயனடையவிருப்பதாக சொல்லப்படுகிறது. முதற்கட்டமாக அரியலூர், தர்மபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் 14 வயதுக்கு மேலுள்ள மொத்தம் 30,209 பெண்களுக்கு செலுத்தப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று காரணமாக பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. உலகம் முழுவதும் பெண்கள் மத்தியில் புற்றுநோய் மரணம் ஏற்படுவதற்கு இந்த கருப்பை வாய் புற்றுநோய் (Cervical cancer) காரணமாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள இந்த கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில்தான் நடக்கிறது. அதாவது உலகிலே கருப்பை வாய் புற்றுநோயால் அதிக மரணங்கள் இந்தியாவில்தான் நடக்கிறது.
ஒட்டுமொத்த இந்திய பெண்களில் 6.6 சதவீத பெண்களுக்கு இந்த ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. அதேவேளையில், இந்தியாவில் 2.5 சதவீதம் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதும், மொத்த பெண்கள் தொகையில் 1.4 சதவீத பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் இறந்து போகும் அபாயம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
HPV வைரஸ் தொற்று பெரும்பாலும் பாலியல் உறவு (Sexually Transmitting) காரணமாகவே நடக்கிறது. ஆனால் இந்த தொற்று ஏற்பட்ட எல்லோருக்கும் அது புற்றுநோயாக வளர்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைபாடு உடைய நபர்களிடத்தில் தான் இந்த வைரஸ் தொற்று புற்றுநோயாக பரிணமிப்பதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
ஆனால் இங்கே நாம் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) மூலமாக மட்டுமே கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதில்லை. பிற காரணங்களாலும் ஏற்படுகிறது. கருத்தடை மாத்திரைகள் குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வதால் கூட கருப்பை வாய் புற்றுநோய் உண்டாகக் காரணமாக இருக்கிறது. அதேபோல், புகை பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. டை எத்தில் ஸ்டில்பெஸ்ட்ரோல் ’Diethylstilbestrol (DES)’, கர்ப்பமான பெண்களுக்கு கரு கலையாமல் இருக்கவும், குறை பிரசவத்தில் குழந்தை பிறப்பை தவிர்க்கவும் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த மருந்தை தொடர்ந்து எடுத்துக்கொள்வதால் கூட கருப்பை வாய் புற்றுநோய் வரக் காரணமாக இருக்கிறது.
எல்லா வகையான HPV வைரஸ்களும் மிகுந்த ஆபத்தானவை அல்ல. HPV 16, HPV 18 ஆகிய இந்த இரண்டு வகை வைரஸ்கள் 76 சதவீத கருப்பை வாய் புற்றுநோய்க்கு காரணமாக உள்ளது. பாலியல் உறவில் ஈடுபாடு உள்ளவர்கள் (sexually active adults) 75 சதவீத நபர்களுக்கு ஏதேனும் ஒருவகையான HPV வைரஸ் தொற்று ஏற்படுகிறது. ஆனால் பெரும்பாலும் அவை காலப்போக்கில் தானாகவே சரியாகிவிடுகிறது. இந்த தொற்று ஏற்பட்ட ஒரு சதவீதத்திற்கும் குறைவான நபர்களில் மட்டுமே இது புற்றுநோயாக வளர்கிறது.
இதனால் பெரும்பாலும் கருப்பை வாய் புற்றுநோய்க்கு HPV வைரஸ் தொற்று காரணமாக இருப்பதால், அதற்கான தடுப்பூசி செலுத்துவது நோய் தடுப்பில் முக்கியமானதாக இருக்க முடியும்.
இந்தியாவில் முதன்முதலில் பஞ்சாப் மாநிலத்தின் பதிந்தா, மான்சா ஆகிய மாவட்டங்களில் 2016ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) உதவியுடன் HPV தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல் 2018ஆம் ஆண்டு சிக்கிம் மாநிலம் HPV தடுப்பூசியை அறிமுகப்படுத்தியது.
கடந்த 2024ஆம் ஆண்டில் பீகார் மாநிலம் முழுவதும் 9 முதல் 14 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக ஆண்டுதோறும் 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்தது. முதற்கட்டமாக பீகாரில் நான்கு மாவட்டங்களில் இந்த தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் 9 முதல் 14 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதன் பின்னர் தான் பீகார், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய HPV தடுப்பூசி!
2012ஆம் ஆண்டில் இந்த தடுப்பூசியால் தீவிர பக்க விளைவுகள் (side-effects) ஏற்படுவதாக சொல்லப்பட்டது. மேலும் இந்த தடுப்பூசியை இந்தியாவிற்கு விற்பனை செய்யும் மெர்க் ஷார்ப் & டோம் (MSD) and கிளாக்சோ ஸ்மித்க்லைன் (GSK), நிறுவனங்கள் உரிமங்கள் ரத்து செய்யச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGI) நீண்டகாலமாக இந்த HPV தடுப்பூசியை பரிந்துரை செய்யாமல் இருந்தது. ஆனால் 2022ல் இந்த HPV தடுப்பூசியை பரிந்துரையில் சேர்ந்தது NTAGI. அதன் பிறகு 2018ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெடின் போது ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டு பின்னர் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டது.