YouTurn

இந்தியாவில் வெறுப்புப் பேச்சு: 2024ஆம் ஆண்டிற்கான அறிக்கை!

முஸ்லீம்கள் மீதான வெறுப்பு பேச்சுகள் தன்னெழுச்சியாக பேசப்பட்டவையல்ல. தனக்குச் சாதகமான தேர்தல் வெற்றிகளைக் குவிக்கும் யுத்தியாகவே இந்த வெறுப்புப் பேச்சுகளை பாஜக பயன்படுத்தி வருவதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்தியாவில் வெறுப்புப் பேச்சு: 2024ஆம் ஆண்டிற்கான அறிக்கை!

இந்தியாவில் கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த அரசியல் பேரணிகள், தேர்தல் பிரச்சார நிகழ்வுகள், மத ஊர்வலங்கள் போன்ற பல்வேறு வகையான வெகுஜனக் கூட்டங்களின் போது உதிர்க்கப்பட்ட வெறுப்புப் பேச்சுகளை (Hate Speech) பற்றி பகுப்பாய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது ‘The India Hate Lab (IHL)’ என்ற ஆய்வு மையம்.


image.png


கடந்த 2023ஆம் ஆண்டு 668 நிகழ்வுகளில் மதச் சிறுபான்மையினர் பற்றி வெறுப்புப் பேச்சுக்கள் பேசப்பட்டதாக ஆவணப்படுத்தப்பட்டது. ஆனால் 2024ஆம் ஆண்டில் இது 74.4 சதவீதம் அதிகரித்து 1,165 நிகழ்வுகளில் வெறுப்புப் பேச்சு சிறுபான்மையினரை நோக்கிப் பேசப்பட்டிருக்கிறது.     

                                                                                                                                                                                   மதச் சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு அறைகூவல் விடுப்பது, சமூக ரீதியாக புறக்கணிப்பது, முஸ்லீம் கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்வது, மத வழிபாட்டுத் தளங்களைக் கைப்பற்றி அழிப்பதற்கான அறைகூவல், முஸ்லீம்களை பிறநாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் ’ஊடுருவிய அந்நியர்கள் (infiltrator)’ என்று சித்தரிப்பது போன்று வெறுப்பு தூண்டும் வகையில் பொதுவெளியில் பேசப்பட்டிருக்கிறது. மேலும், ‘ஜிஹாத்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி முஸ்லீம்களை எதிர்மறையான வெளிச்சத்தில் சித்தரித்து, பொதுச் சமூகத்தின் மத்தியில் அவர்களைக் கலாச்சார ரீதியாக வெறுப்பிற்குரியவர்களாக நிறுவும் வகையில் பாஜக மற்றும் சங்க பரிவார அமைப்புகள் வேலை செய்து வருவதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


’லவ் ஜிஹாத்’ - முஸ்லீம் ஆண்கள் இந்து பெண்களைக் காதலித்து அவர்களைக் கட்டாயமாக மதம் மாற்றுகிறார்கள் என்றும், ‘மக்கள்தொகை ஜிகாத்’ - முஸ்லீம்கள் நிறையக் குழந்தைகள் பெற்று மக்கள்தொகை பெருக்கத்தின் மூலம் இந்தியாவை முஸ்லீம் நாடாக மாற்ற முயல்கிறார்கள் என்றும், ‘எச்சில் ஜிகாத்’ - முஸ்லீம்கள் தாங்கள் நடத்தும் கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களில் எச்சில் துப்பிக் கொடுக்கிறார்கள் என்றும் பல்வேறு பெயர்களில் உண்மைக்குப் புறம்பான சதிக் கோட்பாடுகளை (conspiracy theories) உருவாக்கி இஸ்லாமியர்களை ‘இந்துக்களுக்கான அச்சுறுத்தல்’ என்று கட்டமைக்க முயற்சிக்கிறார்கள்.


’முஸ்லீம்கள் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம்’ என்று பிரச்சாரம் செய்து பொருளாதார ரீதியாக முஸ்லீம்களைத் தனிமைப்படுத்தி, அவர்களை பொது நீரோட்ட வெளியிலிருந்து அகற்றும் நோக்கத்துடன் ‘பொருளாதார புறக்கணிப்புகள்’ சங்கப் பரிவார இயக்கங்களால் முன்னெடுக்கப்படுகிறது. மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட ஆகிய மாநிலங்களில் இந்த வகையில் முஸ்லீம் வெறுப்பு பெருமளவில் பரப்பப்படுகிறது.

image.png

2024ஆம் ஆண்டில் மட்டும் முஸ்லீம் மக்களையும் கிறிஸ்துவ மக்களையும் குறித்து வெறுப்பை உண்டாக்கும் வகையில் 1,147 நிகழ்வுகளில் பேசப்பட்டிருக்கிறது.


இதுபோன்று வெறுப்பரசியல் பேசப்படும் பெரும்பாலான நிகழ்வுகளை ஆளும் பாஜக அரசுதான் ஏற்பாடு செய்து நடத்திருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது. 2023ஆம் ஆண்டு இதுபோன்று 50 நிகழ்வுகளை மட்டுமே நடத்தியிருந்த பாஜக, 2024ஆம் 340 நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறது. இது மொத்த வெறுப்பு பேச்சு நிகழ்வுகளில் 29.2% ஆகும். விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP), பஜ்ரங் தள் போன்ற ஆர் எஸ் எஸின்  துணை அமைப்புகள் இதுபோன்ற மதச் சிறுபான்மையினர் மீது வெறுப்பைப் பரப்பும் 279 நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்திருக்கிறது. 


குறிப்பிட்ட மத சமூகத்தைப் பற்றி எதிர்மறையாக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவதையும் தாண்டி, குறிப்பிட்ட மத சமூகத்தின் மீதான தாக்குதலுக்கு அறைகூவல் விடுப்பது, அதற்காக ஆயுதங்களைப் பயன்படுத்துமாறு வழிகாட்டுவது ஆகிய செயல்களை ‘ஆபத்தான பேச்சு (Dangerous Speech)’ என்று வகைப்படுத்துகிறார்கள். இதுபோன்ற வன்முறைக்கு அழைப்புவிடுக்கும் 259 நிகழ்வுகள் 2024ஆம் ஆண்டில் நடந்துள்ளதாக  ‘The India Hate Lab (IHL)’  இந்த அறிக்கையில் ஆவணப்படுத்துகிறது. இதில் 217 நிகழ்வுகள் பாஜக ஆளும் மாநிலத்தில் நடந்தவையாகும்.

image.png

மதச் சிறுபான்மையினர் மீதான இந்த வெறிப்புப் பேச்சுகளைப் பரப்புவதில் Facebook, Instagram, YouTube, X (Twitter) ஆகிய சமூக ஊடகங்கள் பெரும் பங்காற்றியிருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த வெறுப்புப் பேச்சுகளைத் தடுப்பதில் இந்த சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது மதச் சிறுபான்மையினர் மீது வெறுப்பை விதைக்கும் நிகழ்வுகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது. பாஜக தனது இந்துத்துவ கருத்துநிலையை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவும், தேர்தலில் வெற்றி பெறவும் மதச் சிறுபான்மையினர் மீதான வெறுப்பு பேச்சுகளைத் திட்டமிட்டுப் பயன்படுத்தியது. பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஆகியோர் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லீம்களைக் குறித்து வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொள்வதன் மூலம் தேர்தலில் ஆதாயம் அடைய முயற்சித்தார்கள் என்று அறிக்கை கூறுகிறது.


இப்படி வெறுப்புப்  பேச்சுகளின் மூலமாகத் தேர்தல் ஆதாயம் அடைவது தேர்தல் நடத்தை விதிகளின்படி தவறானது என்றாலும்  ’இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI)’ இந்த வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்கத் தவறிவிட்டது மட்டுமல்ல, வெறுப்புப் பேச்சுகளின் மூலமாக பாஜக தேர்தல் ஆதாயமடையும் இந்த ஒட்டுமொத்த நிகழ்வை ஊக்கப்படுத்தும் விதமாக  (enabling role) தேர்தல் ஆணையம் செயல்பட்டது என்று அறிக்கை குறிப்பிடுகிறது.


முஸ்லீம்கள் மீதான வெறுப்பு பேச்சுகள் என்பது பாஜக அரசியல்வாதிகள் மேடைகளில் எதோ உணர்ச்சி வேகத்தில் தன்னெழுச்சியாக பேசியவை அல்ல. தனக்குச் சாதகமான தேர்தல் வெற்றிகளைக் குவிக்கும் யுத்தியாவே மதச் சிறுபான்மையினர் மீதான வெறுப்புப் பேச்சுகளை பாஜக பயன்படுத்தி வருவதாக அறிக்கை குறிப்பிடுகிறது. 


மேலும், வெறுப்பு பேச்சுகள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்துவதில் நீதித்துறை மற்றும் பிற அரசு நிர்வாக அமைப்புகள் கட்டமைப்பு ரீதியான தோல்விகள் ஏற்பட்டுள்ளதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை