YouTurn

குட்கா கடத்தலை பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்.. பின்னணி என்ன ? தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லையா ?

குட்கா கடத்தலை பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்.. பின்னணி என்ன ? தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லையா ?
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்குக் கடத்த முயன்ற 6,000 கிலோ கிராம் குட்காவை ஒன்றிய சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்துள்ளதாக இந்து முன்னணி அமைப்பினர் தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். 

மேலும் அப்பதிவில் போதைப்பொருள் தொடர்பாகத் தமிழ்நாடு அரசோ தமிழ்நாடு போதை தடுப்பு பிரிவோ எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் ஒன்றிய அரசு அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. 



Archive link

முதலில் குட்கா என்பது Narcotic Drugs and Psychotropic Substances கீழ் வரும் போதைப் பொருள் கிடையாது என்கிற அடிப்படை கூட தெரியாமல் இந்த விஷயத்தை இந்து முன்னணி பேசியுள்ளது. இந்து முன்னணி குறிப்பிடும் 6,000 கிலோ கிராம் குட்கா தொடர்பாக முக்கிய வார்த்தைகளைக் கொண்டு இணையத்தில் தேடியதில், கடந்த 22ம் தேதி ’டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்’ வெளியான செய்தி கிடைத்தது. 

பெங்களூரில் இருந்து 6,000 கிகி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் குட்காவை கண்டெய்னர்களில் சென்னை மாதவரத்தில் உள்ள ஒரு யார்டுக்கு (yard) கொண்டு வரப்பட்டுள்ளது. ராம்கேஷ் திவாகர் தலைமையிலான சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இதனைக் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். 

கண்டெய்னர் டிரைவர் தங்கவேலிடம் நடத்திய விசாரணையில் பெங்களூரில் இருந்து தலா 30 கிலோ எடைகொண்ட 200 மூட்டைகளில்  குட்கா பொருட்கள் கண்டெய்னரில் ஏற்றி வந்தது தெரிய வந்துள்ளது. இதைச் சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்கு கப்பல் மூலம் சிங்கப்பூருக்குக் கடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதாவது பெங்களூரில் இருந்து சிங்கப்பூருக்கு குட்கா உள்ளிட்ட பொருளைக் கடத்த சென்னை ஒரு வழித்தடமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சென்னைக்குக் கடத்தி வரப்பட்ட போதைப் பொருளும் கிடையாது. சென்னையிலிருந்து கடத்த முயற்சி செய்யப்பட்ட போதைப் பொருளும் கிடையாது. 

அடுத்தபடியாக தமிழ்நாடு அரசோ காவல் துறையோ போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என இந்து முன்னணி கூறியுள்ளது. 

கும்பகோணத்தில் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள 585 கிலோ குட்கா பொருட்களைத் தமிழ்நாடு காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக நேற்றைய தினம் (மார்ச் 23) செய்திகள் வெளியாகியுள்ளது. 

அதற்கும் முன்னதாக கடந்த 16ம் தேதி சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் 2.7 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 14ம் தேதி வேலூர் காட்பாடி அருகே ரூ.3.86 லட்சம் மதிப்புள்ள 604.5 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 10 நாட்களில் நடந்தவை. இவற்றைத் தவிரப் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க தமிழ்நாடு காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

சில நாட்களுக்கு முன்னர் பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, தமிழ்நாடு கஞ்சா தலைநகராக இருப்பதாகக் கருத்து தெரிவித்தார்.  கடந்த ஆண்டுகளில் இந்தியா முழுவதும் மாநில வாரியாக பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து இந்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு தரவுகளை வெளியிட்டுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு அண்ணாமலை சொன்ன தகவல் தவறானது என விளக்கமாக ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தோம். 

மேலும் படிக்க : ‘தமிழ்நாடு கஞ்சாவின் தலைநகரம்’, ‘காலை உணவுத் திட்டம்’ பற்றி அண்ணாமலை சொன்ன பொய்கள்!

தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது என ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே (பாஜக) ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார். இங்குள்ள பாஜக மற்றும் வலதுசாரிகளோ தமிழ்நாடு போதைப்பொருள் தலைநகராக இருக்கிறது என்றும் அதற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பொய்களைப் பிரச்சாரமாக முன்வைத்து வருகின்றனர். 
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை