விளையாட்டு வீரர்களுக்கு அரசு வழங்கும் ஊக்கத் தொகை! சர்ச்சைகளும் உண்மையும்!
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷூக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய ஊக்கத் தொகையையும், ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடிக்காக தங்கம் பதக்கம் வென்ற கண்ணகி கார்த்திகாவிற்கு வழங்கப்பட்ட ஊக்கத் தொகையையும் ஒப்பிட்டு பல சர்ச்சைக்குரிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகின்றன.
பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில், கபடி பிரிவில் இந்தியாவின் ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றனர். வெற்றிபெற்ற பெண்கள் அணியைச் சேர்த்த சென்னை கண்ணகி நகர் கார்த்திகா என்பவரையும், ஆண்கள் அணியில் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் என்பவரையும் முதல்வர் தனது இல்லத்திற்கு அழைத்து பாராட்டினார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கினார்.

இந்நிலையில் கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு வழங்கப்பட்ட ரூ.25 லட்சம் மிகக் குறைவானது என்று சமூக வலைத்தளத்தில் சர்ச்சையானது.
கடந்த 2024 டிசம்பர் மாதம் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை வழங்கியது தமிழ்நாடு அரசு. செஸ் போட்டியில் வென்றவருக்கு 5 கோடி ரூபாய் வழங்கிய தமிழ்நாடு அரசு, ஏன் சென்னை கண்ணகி நகரிலிருந்து பல்வேறு சமூக தடைகளைத் தாண்டி வென்ற கார்த்திகாவிற்கு வெறும் ரூ. 25 லட்சம் மட்டும் கொடுக்கிறது? என்று சமூக வலைத்தளத்தில் பலர் திமுக அரசை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பல்வேறு வகையான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு எவ்வளவு ஊக்கத்தொகை கொடுக்கப்பட வேண்டும் என்ற முடிவை தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆவணமாக வெளியிட்டுள்ளது.

அந்த வரையறையின் படி, ஆசிய சீனியர் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு ரூபாய் 50 லட்சமும், இளையோர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு ரூபாய். 15 லட்சமும் ஊக்கத்தொகையாக கொடுக்கப்படும்.
இந்த வகையில், ஆசிய இளையோர் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூபாய். 25 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
அதேபோல், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு ரூபாய். 1 கோடியும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு ரூபாய். 75 லட்சமும் கொடுக்கப்படும்.
இந்த வகையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற குகேஷ்க்கு 75 லட்சம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு ரூபாய். 5 கோடி வழங்கப்பட்டது.
கடந்த 2024 டிசம்பர் மாதம் உலக செஸ் சாம்பியன்ஷிப்-ன் இறுதி போட்டியில் சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த வகையில் 18 வயதில், அதாவது உலகிலே இளமையான உலக செஸ் சாம்பியன் என்ற பெருமையை பெற்றார் குகேஷ். கடந்த 40 ஆண்டு காலமாக உலகின் இளமையான செஸ் சாம்பியன் என்ற பெருமையை கொண்டிருந்தவர் ரசியாவின் கேரி காஸ்பரோவ் என்பவராவார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் 1886ஆம் ஆண்டிலிருந்து நடந்து வருகிறது. ஆனால் இதுவரை 18 நபர்கள் மட்டுமே இந்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். அதில் குகேஷ் 18ஆவது நபர். மேலும் உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்ற மூன்று ஆசியர்களில் குகேஷ்-ம் ஒருவர். முதல் நபர் விஸ்வநாதன் ஆனந்த்.
இவ்வாறு குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றது மிக தனித்துவமான சாதனை ஆகையால் தான் அவரது வெற்றி உலக அளவிலே பாராட்டப் பெற்றது. அதனால் தான் தமிழ்நாடு அரசும் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட அதிக தொகையை ஊக்கத்தொகையாக வழங்கியது.
மேலும் சிலர் கபடியில் தங்கம் வென்றதற்காக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பூஜா நர்வால் என்ற வீராங்கனைக்கு அம்மாநில அரசு 3 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியதையும் குறிப்பிட்டு வருகின்றனர்.
பூஜா நர்வால் கலந்து கொண்டது ஆசிய விளையாட்டுப் போட்டி. தற்போது கார்த்திகா வென்றிருப்பது இளையோர் (Junior) பிரிவு ஆசிய விளையாட்டுப் போட்டி ஆகும். இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடும் புரிந்து கொள்ளப்பட வேண்டியது.
மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற அனைவருக்கும் 3 கோடி ரூபாய் கொடுக்கவேண்டும் என்பது ஹரியானா மாநில அரசின் கொள்கை முடிவாகும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்த தொகை வெவ்வேறானதாக உள்ளது. கேரளாவில் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வெல்பவர்களுக்கு 25 லட்சம் ரூபாயும், மகாராஷ்டிராவில் ஒரு கோடி ரூபாயும் தமிழ்நாட்டில் 50 லட்சமும் வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசைப் பொறுத்தவரை ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தங்கப் பதக்கத்திற்கான ஊக்கத் தொகை 30 லட்சமாக உள்ளது. மேலே குறிப்பிடப்பட்டிருக்கிற தொகை என்பது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தொகை. Asian Youth Games-ல் பதக்கம் வென்றவர்களுக்கான தொகை அல்ல. பல்வேறு மாநிலங்களில் Asian Youth Games-க்கு வழங்கப்படும் விவரங்கள் கிடைக்கவில்லை.
ஆனால் மேற்சொன்ன காரணங்களையெல்லாம் தாண்டி, கண்ணகி நகர் கார்த்திகாவின் வெற்றியும் தனித்துவமானது தான். சென்னையில் இருந்தாலும் கண்ணகி நகர் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். சென்னையில் நகர மேம்பாட்டு திட்டங்களுக்காக நகர்புற குடிசை பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டது. இவ்வாறு 2000 முதல் 2010 வரையில் பல வீடுகள் இடிக்கப்பட்டது. இன்றும் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் நகர்புற ஏழை மக்களின் வீடுகள் இடிக்கப்படுவது நடந்து வருகிறது.
இதனால் வீடுகள் இழந்த மக்கள், சென்னைக்கு வெளியே கண்ணகி நகர், எழில் நகர் போன்ற அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியேற்றப்பட்டார்கள். 1.25 லட்சம் மக்கள் வாழும் இந்த பகுதிகளில் குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்புகள் மிக மோசமாக இருக்கும். அங்கே குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறுவதாக குறிப்பிட்டு அங்கிருக்கும் மக்களுக்கு நிறுவனங்களில் வேலைகள் மறுக்கப்படுகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கே போராட வேண்டியுள்ளது.
அப்படிப்பட்ட பின்தங்கிய பகுதியிலிருந்து அத்தனை சமூக தடைகளையும் தாண்டி கபடியில் தங்கம் வென்றது மிக உயர்வான சாதனை. அவரது இந்த சாதனையை முன்மாதிரியாக கொண்டு சமூகத்தின் விளிம்பு நிலையில் பின்தங்கியுள்ள பல மாணவர்கள் இளைஞர்கள் முன்னேற ஊக்கம் பெறுவார்கள். சென்னையின் மையமான வளர்ந்த பகுதிகளுக்கு வெளியில் பின்தங்கிய பகுதியாக இதுவரையில் அடையாளப்படுத்தப்பட்ட கண்ணகி நகர் கார்த்திகாவின் சாதனைக்கு பிறகு, கபடியின் அடையாளமாக மாறும்.
இந்த வகையில் கார்த்திகாவின் சாதனை மகத்தானது. அதனால் அவருக்கு கொடுக்கப்பட்ட ரூ. 25 லட்சம் ஊக்கத்தொகையை இன்னும் உயர்த்திக் கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கை மிக நியாயமானது தான்.

அதேவேளையில், நாம் விளையாட்டின் பல்வேறு வகைகளையும் நிலைகளையும் ஒப்பீடு செய்யமுடியாது. ஆசிய போட்டியை உலக சாம்பியன்ஷிப் போட்டியுடன் ஒப்பிட முடியாது. அதேபோல் தனிநபர் விளையாட்டான சதுரங்க (Chess) போட்டியை குழு விளையாட்டான கபடியுடன் ஒப்பிட முடியாது. எனவே அடிப்படையிலேயே குகேஷுக்கு வழங்கப்பட்டதையும், கார்த்திகாவிற்கு வழங்கப்பட்டதையும் ஒப்பிட்டு உரையாடலை நிகழ்த்துவது சரியானதாக இருக்காது.
மேலும் குகேஷூக்கு வழங்கப்பட்டதை அவரது சாதியின் பெயரைச் சொல்லி கார்த்திகாவிற்கு வழங்கப்பட்ட தொகையுடன் ஒப்பிட்டு தமிழ்-தெலுங்கு என்ற இனவாத விவாதத்தையும் சமூக வலைதளங்களில் சிலர் விளையாட்டிற்குள் திணித்து வருகிறார்கள். இது அபாயகரமான போக்கு. கார்த்திகாவிற்கு ஊக்கத் தொகையை உயர்த்தித் தர வேண்டும் என்பதை கார்த்திகாவின் தனித்தன்மையை மையப்படுத்தி பேசுவதே சரியானது.
கார்த்திகா இன்று கண்ணகி நகரை இந்தியாவின் அடையாளமாக மாற்றியிருக்கிறார். ஆனால் இந்தியாவின் அடையாளமாக உயர்ந்து நிற்கிற கண்ணகி நகர் மக்களின் வாழ்நிலை எப்படி இருக்கிறது என்ற கேள்வியும் அரசின் முன்வைக்கப்பட வேண்டிய பிரதான கேள்வியாக இருக்கிறது. கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் என அனைத்து மட்டங்களிலும் கண்ணகி நகர் மக்களின் வாழ்நிலை இப்படி இருப்பதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வி தமிழ்நாட்டை ஆண்ட, ஆளும் அனைத்து கட்சிகளிடமும் கேட்கப்பட வேண்டியதே.

ஊடகங்களிடம் பேசிய கார்த்திகா எனது விளையாட்டின் மூலம் எங்கள் கண்ணகி நகரின் சமூக அடையாளத்தை மாற்றுவோம் என்று அறுதியிட்டு சொல்கிறார். இதன்மூலம் ஒரு விளையாட்டு வீரராக மட்டுமல்லாமல் தமிழ்நாடு தலையில் வைத்து தூக்கிக் கொண்டாட வேண்டிய பெண்ணாக கார்த்திகா உயர்ந்து நிற்கிறார். ஆனால் கார்த்திகாவை தூக்கிக் கொண்டாடுவதுடன் நிறுத்தி விட்டால் போதாது. கண்ணகி நகரில் இன்னும் நிறைய கார்த்திகா பல கனவுகளை சுமந்து கொண்டு காத்திருக்கிறார்கள். அவர்களை தூக்கிவிட கரம் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. மேலும் கண்ணகி நகர் கபடி குழுவினர் சிறந்து விளங்குவதாக பல செய்திகள் ஊடகங்களில் வெளியாகி இருக்கின்றன. எனவே கண்ணகி நகரின் கபடி வீரர்களுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செய்து தந்து இன்னும் பல கார்த்திகாவினரை உலகுக்கு அடையாளம் காட்ட வேண்டியது அரசின் பொறுப்பு.