YouTurn

கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்களா? பரவும் தவறான செய்தி!

கொளத்தூர் தொகுதி ஆண்டாள் அவென்யூவில் உள்ள 11ம் எண் என்பது தனி வீடல்ல, அது அடுக்குமாடி குடியிருப்பு பகுதி. வாக்குச்சாவடி எண் 84 விவரங்களின்படி, வரிசை எண் 40 முதல் 75 வரையில் உள்ள வாக்காளர்கள் 11ஆம் எண் கொண்ட ஏ.எஸ். வீனஸ் கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்களா? பரவும் தவறான செய்தி!

தேர்தல் ஆணையம், ஆளும் பாஜக அரசுடன் சேர்ந்து, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகவும், வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்ததாகவும் கூறி வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற மோசடிகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் சில ஆதாரங்களை வெளியிட்டு தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


குறிப்பாக கர்நாடக மாநிலத்தின் ஒரு தொகுதியில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்குகள் சேர்க்கப்பட்டு, பாஜக மோசடி செய்து வெற்றி பெற்றதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.


இதே போன்று வாக்காளா் பட்டியல் குளறுபடிக்கு எடுத்துக்காட்டாக பீகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் மிந்தா தேவி என்ற பெண்ணுக்கு 124 வயது என்று குறிப்பிடப்பட்டதையும் அவா் சுட்டிக்காட்டினாா்.


இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 19,476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்களாக இருக்கிறார்கள். 9,133 வாக்காளர்கள் போலி முகவரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் 84-ம் வாக்குச்சாவடியில் உள்ள ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என்றும், அதில் ரஃபியுல்லா என்று ஒரே பெயரில் மூன்று வாக்காளர்கள் உள்ளனர். எப்படி ரஃபியுல்லா என்ற பெயர் 157-ஆம் வாக்குச்சாவடியில் மூன்று முறை வருகிறது என்றும் பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை தமிழ்நாடு பாஜக தனது எக்ஸ் பக்கத்திலும் வீடியோவாக வெளியிட்டுள்ளது. இதனை பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது. 


கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்களா?


பரவி வரும் செய்திகளின் உண்மைத்தன்மையை அறிய, கொளத்தூர் தொகுதியில் உள்ள 84ம் வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்களின் விவரங்களை தமிழ்நாடு அரசின் தேர்தல் துறையின் பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்தோம். 



84ம் வாக்குச்சாவடியில் உள்ள விவரங்களை ஆய்வு செய்ததில், கொளத்தூர் தொகுதி ஆண்டாள் அவென்யூவில் உள்ள 11ம் எண் என்பது தனி வீடல்ல, அது அடுக்குமாடி குடியிருப்பு பகுதி (ஏ.எஸ். வீனஸ் கோர்ட்) என்பதை அறிய முடிந்தது. 




எனவே தான் வாக்குச்சாவடி எண் 84 விவரங்களின்படி, வரிசை எண் 40 முதல் 75 வரையில் உள்ள வாக்காளர்கள் 11ஆம் எண் கொண்ட ஏ.எஸ். வீனஸ் கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இதன் உண்மை தன்மை அறியாமல் பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் உட்பட பலரும் தவறான செய்தியைப் பரப்பி வருகின்றனர். 



மேலும் இதில், ரஃபி என்பவரின் பெயர் வரிசை எண் 50லும், 52ல் கணவர் என்கிற இடத்திலும் இடம்பெற்றுள்ளது.



இதே போன்று வரிசை எண் 348, 352 ஆகியவற்றில் ரஃபி என்பவரின் பெயர் தந்தை என்கிற இடத்தில் இடம்பெற்றுள்ளது. 



இதே போன்று வாக்குச்சாவடி எண் 157ல் உள்ள வாக்காளர் விவரங்களை தமிழ்நாடு அரசின் தேர்தல் துறையின் பக்கத்தில் ஆய்வு செய்தோம். அதன்படி, ரஃபியுல்லா என்ற பெயர் வரிசை எண் 54, 55 ஆகியவற்றில், தந்தை என்ற இடத்திலும், வரிசை எண் 1286-ல் கணவர் என்ற இடத்திலும் வருகிறது. இந்நிலையில் ரஃபியுல்லா என்ற பெயர் 157-ஆம் வாக்குச்சாவடியில் தந்தை மற்றும் கணவர் என்ற பெயர்களில் வருவதை,  ரஃபியுல்லா என்ற பெயர் மூன்று முறை வருகிறது என்று கூறி தவறாகத் திரித்துப் பரப்பி வருகின்றனர். 



மேலும் அனுராக் தாக்கூர் கொளத்தூர் தொகுதி குறித்து குறிப்பிடுகையில், முகம்மது அமீன், ஜஃபர் அலி, ஆரிஃபா, அன்வர், ரஈபுல்லா, ரஃபியுல்லா, ரஃபியுல்லா என்ற பெயர்களை வரிசையாகக் குறிப்பிடுகிறார். அங்கு அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் வாழ்ந்துவரும் நிலையில் இஸ்லாமியர்களின் பெயர்களை மட்டும் வரிசையாக குறிப்பிடுகிறார். இதன் மூலம் அவர் இஸ்லாமியர்களின் மீது கொண்டுள்ள வெறுப்புணர்வை வெளிப்படையாக புரிந்துகொள்ளமுடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை