YouTurn

நாகப்பட்டினத்தில் விஜய்-ன் உருட்டுகளும்! அதற்கு பெலிக்ஸ்-ன் முட்டுகளும்!

விஜய் நாகப்பட்டினத்தில் பேசியது சரியான தகவல்தான் என்று "ரெட்பிக்ஸ்" யூட்யூப் தளத்தை நடத்திவரும் பெலிக்ஸ் பொய்யாக பரப்பிவருகிறார்.

நாகப்பட்டினத்தில் விஜய்-ன் உருட்டுகளும்! அதற்கு பெலிக்ஸ்-ன் முட்டுகளும்!

2026 சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த வகையில், கடந்த செப்டம்பர் 20ஆம் தேதியன்று நாகப்பட்டினத்தில் பிரச்சாரத்தின் போது இளைஞர்களின் வேலை வாய்ப்பு பற்றி பேசுகையில், ”இங்க (நாகப்பட்டினத்தில்) ஏற்கனவே இருந்த ஸ்டீல் ரோலிங் மில்லையும், ரயில் பெட்டி தயாரிக்குற தொழிற்சாலையையும் மூடிட்டாங்க. அதை மறுபடியும் திறந்தா இங்கே நிறைய பேர்க்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஏன் அதைப் பத்தி யோசிக்கல? என்றார் விஜய். 


விஜய்-ன் இந்த பேச்சில் உண்மை இருக்கிறதா அல்லது இவை தவறான தகவலா? என்பது விவாதமானது. சன் நியூஸ் தொலைக்காட்சியில் கேள்விக் களம் நிகழ்ச்சியில் பேரலை ஊடகத்தைச் சேர்ந்த மில்டன், “விஜய் கூறுவது அப்பட்டமான பொய் என்றும் நாகப்பட்டினத்தில் எந்த இடத்தில் அப்படியொரு தொழிற்சாலை இருந்தது என தவெக கட்சியினரிடம் கேளுங்கள்” என்றும் பேசினார்.



இது குறித்து "ரெட்பிக்ஸ்" யூட்யூப் தளத்தில் பெலிக்ஸ் ஜெரால்ட் பேசுகையில், ‘The New Indian Express’-ல் நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டு 30 ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி எழுதப்பட்டுள்ள கட்டுரை ஒன்றை ஆதாரமாக காட்டி, ”தென்னிந்திய ரயில்வே 1897 ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் நீராவி இன்ஜின்களைப் பராமரிக்க ஒரு மையப் பட்டறையை (central workshop) அமைத்தது” என்றும் “பின்னர் சிறந்த இடம் வேண்டும் என்பதற்காக இந்த பட்டறை திருச்சிக்கு மாற்றப்பட்டதாகவும்” அதில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறார். இதனைக் கொண்டு விஜய் பொய் சொல்லவில்லை, சன் நியூஸ் தொலைக்காட்சியில் மில்டன் தான் பொய் சொல்கிறார் என்கிறார் பெலிக்ஸ். 


image.png


பெலிக்ஸ் ஆதாரமாக கொடுத்துள்ள இந்த செய்தியிலே அது workshop என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொழிற்சாலை (Factory) அல்ல. இந்த வொர்க் ஷாப் நீராவி இன்ஜின்களைப் பராமரிக்க அமைக்கப்பட்டது. சுத்தம் செய்தல், பழுது பார்த்தல் போன்ற பணிகள் மட்டுமே அங்கு நடைபெறும். இரயில்பெட்டிகள் அங்கு தயாரிக்கப்படாது. ஆதாரம் இவ்வளவு தெளிவாக உள்ள போதே, விஜய் சொன்ன தவறான தகவலை நியாயப்படுத்தும் வகையில் பெலிக்ஸ் ஒருதலைப்பட்சமாக பேசுகிறார்.


மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த பட்டறை மூடப்படவில்லை. இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஏன் யாரால் இடம் மாற்றம் செய்யப்பட்டது என்ற கேள்விக்கு செல்ல வேண்டுமல்லவா! 


இது குறித்து தேடியதில், திருச்சி பொன்மலை இரயில்வே பட்டறை வெளியிட்டுள்ள ஒரு வெளியீடை காணமுடிந்தது. அதில், இந்த பட்டறை ஆங்கில ஆட்சிகாலமான 1928ஆம் ஆண்டே நாகப்பட்டினத்திலிருந்து திருச்சி பொன்மலைக்கு மாற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 



மேலும் தேடுகையில், திருச்சி பொன்மலை இரயில்வே பட்டறை குறித்த அதிகாரப்பூர்வ கள அறிக்கையிலும் (Field Report), ’தென்னிந்திய ரயில்வே நீராவி இன்ஜின்களைப் பராமரிக்க 1897 ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் ஒரு மத்திய பட்டறை அமைத்ததாகவும், அது பின்னர் திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் பட்டறை இடமாற்றம் செய்யப்பட்டதற்காக காரணமாக ‘Locational Advantage’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, திருச்சி இந்த பட்டறை அமைவதற்கான சிறந்த இடமாக இருக்குமென்று அன்றைய ஆங்கிலேய அதிகாரிகள் மதிபிட்டிருக்கிறார்கள். அதனால் தான் பட்டறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 



இது குறித்து மேலும் தேடுகையில், ‘THE TIMES OF INDIA’ வெளியிட்டுள்ள செய்தியில், ’நாகப்பட்டினத்திலிருந்து திருச்சிக்கு இந்த பட்டறை மாற்றப்பட்டதற்கு காரணம், திருச்சியை ஒட்டி கடல் இல்லை. நிலத்தால் மட்டுமே சூழப்பட்டிருக்கிறது (landlocked city). இதனால் புயல், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர் போன்ற பிரச்சனைகள் இல்லை. இந்த வகையில் திருச்சி புவியியல் ரீதியாக சாதகமான இடமாக இருந்தது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதிலிருந்து நாகப்பட்டினத்தில் ஆங்கிலேய ஆட்சியில் அமைக்கப்பட்டது தொழிற்சாலை அல்ல அதுவொரு பட்டறை மட்டுமே என்பதும், அது 1928ஆம் ஆண்டிலே புவியியல் சாதகங்கள் காரணமாக திருச்சி பொன்மலை பகுதிக்கு மாற்றப்பட்டுவிட்டது என்பதும் தெளிவாக தெரியவருகிறது. மேலும் புவியியல் சாதகங்கள் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட ஒரு பட்டறையை மீண்டும் நாகப்பட்டனத்தில் நிறுவச் சொல்வது அறிவியல் பார்வையற்ற அணுகுமுறை. 


மேலும், நாகப்பட்டினத்தில் ஸ்டீல் ரோலிங் மில் மூடப்பட்டதாக விஜய் பேசுகிறார். ஆனால் அது எந்த மில் என்று அவர் சொல்லவே இல்லை. நாகப்பட்டினத்தில் 1990களில் டாட்டா  ஸ்டீல் ரோலிங் மில் மூடப்பட்டது. அதற்கு முக்கிய காரணமாக அதில் வேலையிழந்த தொழிலாளர்களே சொல்வது ‘நிதி நெருக்கடி’ தான். நிதி நெருக்கடி காரணமாக ஒரு தனியார் முதலாளி தொழிற்சாலையை மூடியதற்கு அரசு என்ன செய்யவேண்டுமென்று விஜய் எதிர்பார்க்கிறார்? அதை அவர் தான் அடுத்த பிரச்சாரத்தில் விளக்கவேண்டும். 


"ரெட்பிக்ஸ்" யூட்யூப் தளத்தை நடத்திவரும் பெலிக்ஸ் வேண்டுமென்றே இந்த தகவல்களை மறைத்து, விஜய் நாகப்பட்டினத்தில் பேசியது சரியான தகவல்தான் என்று பொய்யான தகவலை பரப்பிவருகிறார்.     

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை