YouTurn

திமுக ஆட்சி பற்றிய பாஜகவின் அறிக்கை! அம்பலப்பட்ட பொய்கள்!

பாஜக திமுக ஆட்சி பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு தவறான தகவல்களையும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி பற்றிய பாஜகவின் அறிக்கை! அம்பலப்பட்ட பொய்கள்!

வருகின்றன ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனையொட்டி பல்வேறு கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. 


இந்நிலையில் கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியின் அவலத்தை பட்டியலிடுவதாக சொல்லி ‘குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு’ என்ற அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் 31ஆம் தேதி சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பியுஷ் கோயலால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தவறான தகவல்களையும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை இருக்கின்றன. அவற்றில் சில பொய்களை நமது ‘You Turn’ தளத்தில் ஏற்கனவே அம்பலப்படுத்தி எழுதியுள்ளோம்.



முதலில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 8,900 கொலைகள் நடந்துள்ளன, திமுக ஆட்சியில் தான் தமிழ்நாட்டில் கொலைகள் அதிகமாக நடக்கின்றன என்ற அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இதனை ஏற்கனவே நமது ‘You Turn’ தளத்தில் அம்பலப்படுத்தியுள்ளோம். 


தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (NCRB) ‘Crimes in India - 2023’ அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு 1686 கொலைகளும், 2022ஆம் ஆண்டு 1690 கொலைகளும், 2023ஆம் ஆண்டு 1681 கொலைகளும் நடந்துள்ளன. 


2024ஆம் ஆண்டிற்கான ’NCRB’ தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் மாநில அரசு வெளியிட்டுள்ள தகவல்களின் படி,  தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டு 1,540 கொலைகளும், 2025ஆம் ஆண்டில் 1,461 கொலைகளும் நடந்துள்ளதாக தெரியவருகிறது. 


அதேவேளையில், தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் இருந்த போது 2019ஆம் ஆண்டு 1745 கொலைகளும், 2020ஆம் ஆண்டு 1661 கொலைகளும்  நடந்துள்ளது. மேலும் 2012ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 1,943 கொலைகளும், 2013ஆம் ஆண்டில் 1,927 கொலைகளும் நடந்துள்ளதாகவும் தெரியவருகிறது.  2012 முதல் 2024 வரையிலான 12 ஆண்டுகளில் இந்த ஆண்டுகளில் தான் மிக அதிகமான கொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளதாக தெரிகிறது. 


2016 முதல் 2020 வரையிலான அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் 8138 கொலைகள் நடந்துள்ளன. 2021 முதல் 2025 வரையில் திமுக ஆட்சியில் 8058 கொலைகள் நடந்துள்ளன. அதாவது அதிமுக ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் கொலைகள் அதிகமாக நடந்துள்ளது. 


அதே நேரத்தில் NCRB தரவுகளின் படி தமிழ்நாட்டை விட உத்தர பிரதேசம், பீகார், மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக கொலைகள் நடப்பதாக தெரிய வருகிறது. இவையெல்லாம் பாஜக ஆளும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தான் ஆளும் மாநிலங்களில் தான் அதிகமான கொலைகள் நடக்கிறது என்ற உண்மையைப் பற்றி பேசாமல், தனது கூட்டணிக் கட்சியான அதிமுகவின் ஆட்சியில் தான் தமிழ்நாட்டில் அதிக கொலை நடந்துள்ளது என்பதை மறைத்துவிட்டு திமுக ஆட்சியில் தான் அதிக கொலைகள் நடந்துள்ளது என அப்பட்டமான பொய்யை பாஜக சொல்லி வருகிறது


ஏழை, எளிய பெண்களின் திருமணத்திற்குப் பேருதவியாக இருந்த 'தாலிக்குத் தங்கம்' திட்டத்தை திமுக தான் ரத்து செய்தது என்று கூறியுள்ளது பாஜக. 


image.png


உண்மையில் கடந்த அதிமுக ஆட்சியில் 2018-19 ஆண்டே ‘தாலிக்குத் தங்கம்’ திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனை சட்டசபையில் நடந்த விவாதத்தில் எடப்பாடி பழனிச்சாமியே ஒப்புக்கொண்டுள்ளார். அமைச்சர் கீதா ஜீவன் ‘அ.தி.மு.க ஆட்சியில் 2018-19 முதலே தாலிக்கு தங்கம் வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டது’ என்று கூறுகிறார். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி,  ‘டெண்டர் வாயிலாகவே தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தங்கம் விலை ஏற்றம், இறக்கமாக காரணமாக, டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை. கொரோனா காலம் என்பதால், இரண்டு ஆண்டுகளாக எந்த பணியும் நடக்கவில்லை. இதனால் தான் நிறுத்தப்பட்டது’ என்று கூறினார். 


ஆனால், இத்திட்டத்திற்காக அதுவரையில் நிலுவையில் இருந்த விண்ணப்பங்களுக்கு மட்டும்  தங்கம் வழங்குவதற்காக 117.18 கோடி ரூபாய் 2023ஆம் ஆண்டு ஒதுக்கியது திமுக அரசு. இதனை மறைத்து 'தாலிக்குத் தங்கம்' திட்டத்தை ரத்து செய்ததாக பொய் சொல்கிறது பாஜக.



’2024-ல் 2,000 கி.கிராம் கஞ்சா காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது’ என்று பாஜக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஒன்றிய அரசின் ’Narcotics Control Bureau’ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, ஒடிசா மாநிலத்தில் தான் 1,43,761 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதான் இந்தியாவிலே அதிகமாகும். மகாராஷ்டராவில் 55,351 கிலோவும், ஆந்திராவில் 53,983 கிலோவும், உத்தர பிரதேசத்தில் 41,327 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டில் 7334 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருகிறது. இது தேசிய அளவில் 15ஆவது இடமாகும். 


ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களான உத்தர பிரதேசம், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்கள் மிக அதிக அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறித்து பாஜக வாய்திறக்கவில்லை. 


அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள், இலவச மடிக்கணினி ஆகிய திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டதாக சொலிகிறது பாஜக.



2022ஆம் ஆண்டு ’Comptroller and Auditor General of India (CAG)’ வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, எடப்பாடி பழனிச்சாமியின் கடைசி (2020 - 21) ஆட்சிக்காலத்தில் கூட மாணவர்களுக்கு முறையாக மடிக்கணினி வழங்கப்படவில்லை என்பது தெரியவருகிறது. 


மேலும், 2017-18 ஆண்டில் 12ஆம் வகுப்பு முடித்த 2.32 லட்சம் மாணவர்களுக்கு அந்த ஆண்டிலே மடிக்கணினி வழங்கப்படவில்லை. இது அந்த திட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாக இருக்கிறது என்று CAG அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.  2017-18, 2018-19 ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் உத்தரவை 2019 நவம்பரில் தான் அதிமுக அரசு பிறப்பித்துள்ளது. மேலும் 55,000 மடிக்கணினிகள் அரசிடம் கைவசம் இருந்தும் அதிமுக அரசு அவற்றை மாணவர்களுக்கு விநியோகம் செய்யவில்லை. இதனால் அரசுக்கு 68 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக சொல்கிறது.



உண்மை நிலை இவ்வாறு இருக்க திமுக தான் மடிக்கணினி கொடுக்கும் திட்டத்தை நிறுத்தி வைத்ததாக பாஜக பொய் சொல்கிறது. 


மேலும், மாணவர்களுக்கு இலவச சைக்கள் வழங்கும் திட்டத்தை திமுக கைவிட்டதாகவும் பொய்யை பரப்புகிறது பாஜக. திமுக ஆட்சியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது குறித்த அத்தனை செய்திகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது. இருந்தாலும் இதனை மறைத்து பொய்யை பரப்புகிறது பாஜக.


பெட்ரோல், டீசலின் விலையை குறைப்போம் என்று வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்று சொல்கிறது பாஜக. 


ஆட்சிக்கு வந்த 2021ஆம் ஆண்டிலே பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு ரூபாய் 3 குறைத்தது திமுக அரசு. இந்த வரிக் குறைப்பால் அரசுக்கு ஆண்டுக்கு ரூபாய் 1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் அப்போதை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார். இதனை மறைத்து பெட்ரோல், டீசலின் விலையை திமுக அரசு குறைக்கவில்லை என்று பொய்யை பரப்புகிறது பாஜக. 


image.png


நகை கடனை ரத்து செய்வோம் என்ற வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்கிறது பாஜகவின் அறிக்கை.


ஆனால், கடந்த 2024 ஆண்டு கூட்டுறவு நிறுவனங்களில் நிலுவையில் இருந்த நகைக் கடனை திமுக அரசு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு குடும்பத்தில் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக் கடன் பெற்று 31.3.2021-ஆம் நாள் வரை நிலுவையிலிருந்த நகைக் கடன்தொகை ஏறத்தாழ ரூ.6,000 கோடியை தள்ளுபடி செய்து ஆணையிட்டார். அந்த ஆணையின்படி 13,12,717 பயனாளிகளுக்கு ரூ.4,818.88 கோடி அளவிற்குத் தள்ளுபடி சான்றிதழுடன் அவர்கள் அடமானம் வைத்த நகைகளும் திருப்பி வழங்கப்பட்டன. 

image.png


ஆனால் இதனை மறைத்து நகை கடனை ரத்து செய்யும் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்று பொய்யை பரப்புகிறது பாஜக. 


திமுக அரசு சொத்துவரியை உயர்த்தி மக்களை வதைத்தது என்று மற்றொரு பொய்யை சொல்கிறது பாஜக.


ஆனால் 2021-26 வரையிலான காலத்திற்கான 15ஆவது நிதி ஆணையத்தின் அறிக்கை படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொடுக்கப்படும் மானியங்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சொத்து வரிகளுக்கான குறைந்தபட்ச அடிப்படை விகிதங்களை மாநிலங்கள் நிர்ணயிக்க வேண்டும், சொத்து வரி வசூலிப்பதை மேம்படுத்த வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருகின்றன. இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியம் கொடுக்கப்படாது என்று சொல்லப்பட்டுள்ளது. இதனால் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது. 


image.png


திமுகவின் ஆட்சியில் தமிழ்நாட்டின் மொத்தக் கடனை 10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், தமிழர்கள் தலையில் திமுக கடனை சுமத்துவதாகவும் சொல்லப்படுகிறது. 


ஆனால் இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தகவலின் படி, 2026 மார்ச் மாதம் இந்தியாவின் மொத்த கடன் 197 லட்சம் கோடியாக உள்ளது எனவும் அது 2027 மார்ச் மாதம் 214 லட்சம் கோடியாக அதிகரித்துக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால், பாஜக அரசு இந்தியர்கள் தலையில் அதிகப்படியான கடனை சுமைத்துக்கிறது என்று சொன்னால் பாஜக இதனை ஏற்றுக்கொள்ளுமா? 


image.png


அடுத்ததாக, திமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை உயர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. 


ஆனால், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ’CITIZEN'S GUIDE TO BUDGET 2025-2026’ என்ற ஆவணத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் கடைசி காலத்தில் (2020-21) வருவாய் பற்றாக்குறை மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 3.49 சதவீதமாக இருந்தது. அது படிப்படியாக குறைந்து 2025-26ஆம் நிதியாண்டில் 1.17 சதவீதமாக இருக்கிறது. திமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை படிப்படியாக குறைந்து வந்துள்ளது. இதனை மறைத்து திமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை உயர்ந்திருப்பதாக பாஜக பொய்யை பரப்பி வருகிறது.


இவ்வாறு உண்மை நிலவரத்தை மறைத்தும் பொய்யான தகவல்களை அடுக்கியும் திமுக ஆட்சி குறித்த இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது பாஜக. 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை