அதிகரித்துவரும் கொரியர் மோசடி! எச்சரிக்கை!
கொரியர் நிறுவன அதிகாரிகள் அல்லது சுங்க அதிகாரிகள் என்ற பெயரில் மோசடியாளர்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை விழிப்புணர்வுடன் கையாளவேண்டும்
முற்றிலும் நவீனமயமாகிவிட்ட இந்த வாழ்வில் விரைவுத் தபால், கொரியர் போன்ற பொருட்களை விநியோகம் செய்யும் வழிமுறைகள் மிகவும் வளர்ந்துவிட்டது. கூடவே கொரியர் போன்ற விநியோக முறைகளை பயன்படுத்தி செய்யும் மோசடிகளும் வளர்ந்துவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு FedEx என்னும் கொரியர் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி கோயம்புத்தூரில் மட்டும் 70 நபர்கள் மொத்தமாக ரூபாய் 5.67 கோடி மோசடி செய்துள்ளனர்.
சமீபத்தில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ரோஹன் ஜோஷி, இதுபோன்ற கொரியர் மோசடி கும்பல் ஒன்று தொலைபேசி அழைப்பின் தன்னை குறிவைத்து பணம் பறிக்க முயன்றதை பற்றி தனது Instagram பக்கத்தில் பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து பலரும் இதுபோன்ற மோசடி அழைப்புகள் தங்களுக்கும் வந்ததாக பதிவு செய்தனர். இந்த செய்திகள் இந்த ’கொரியர் மோசடி’ அதிகரித்த அளவில் நடந்து வருவதை நமக்கு உணர்த்துகிறது.

பெரும்பாலும் இந்த மோசடிகள் குறிப்பிட்ட செயல்முறையின் (modus operandi) அடிப்படையில் நடப்பதாக சைபர் க்ரைம் போலீஸார் தெரிவிக்கின்றனர். மோசடியாளர்கள் முதலில் தொலைபேசி அழைப்பின் மூலமாக குறிப்பிட்ட நபரிடம் தாங்கள் ஒரு கொரியர் கம்பெனியின் அதிகாரிகள் என்றோ அல்லது சுங்க அதிகாரிகள் என்றோ அறிமுகம் செய்துகொள்கின்றனர்.
பின்னர், அவரிடம் ‘உங்களுக்கு வந்திருக்கும் பார்சல் அல்லது நீங்கள் அனுப்பிய பார்சலில், போதைப் பொருட்கள், கள்ளப் பாஸ்போர்ட் போன்ற சட்டவிரோத பொருட்கள் இருப்பதாக’ கூறுகிறார்கள். தாங்கள் போலிகள் என்ற சந்தேகம் ஏற்படாமலிருக்க குற்றவியல் பிரிவு, சுங்கப் பிரிவு, அமலாக்க பிரிவு அதிகாரிகளைப் போல் வேடமணிந்து Skype video அழைப்பில் பேசுகிறார்கள்.

அடுத்து, இதுபோன்ற சட்டவிரோத பொருட்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் நீங்கள் என்னமாதிரியான வழக்குகளை சந்திக்க நேரிடும் என்ற பயத்தை விதைக்கிறார்கள். இந்த பயத்தில் இருந்து அவர் வெளிவந்து சுதாரித்துக்கொள்வதற்குள், ‘இதிலிருந்து தப்பவேண்டுமானால் எங்களுக்கு பணம் அனுப்ப வேண்டும்’ என்று சொல்லி அவசர அவசரமாக முடிவெடுக்க நிர்பந்திக்கிறார்கள். அல்லது ’உங்களது ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் போன்ற அந்தரங்க தனிநபர் தகவல்களை கேட்கிறார்கள்’. இந்த தகவல்களை பயன்படுத்தி பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். இது அவர்களது வழக்கமான செயல்முறையாக இருந்தாலும், இதனை அடிக்கடி சூழலுக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்கிறார்கள்.
இந்த மோசடி கும்பல் எல்லோரையும் அணுகுவதில்லை. மின்னணு உலகம் பற்றி பெரிதாக அறிமுகமில்லாத வயதானவர்கள், மோசடிகள் பற்றிய விழிப்புணர்வில்லாத சிறு நகர மக்கள், போன்றவர்களைத்தான் பெரும்பாலும் குறிவைக்கிறார்கள்.
இவர்களை பிடிப்பதில் காவல்துறைக்கு பொறுப்பிருப்பது போலவே, இதுபோன்ற மோசடியாளர்களிடம் ஏமாறாமல் இருப்பதற்கு நாமும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். அதற்கடிப்படையாக சில விஷயங்களை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
முதலில், கொரியர் நிறுவனங்கள் இதுபோன்ற மொட்டை அழைப்புகளின் வழியாக நம்மை அணுகமாட்டார்கள் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். மேலும் சுங்க அதிகாரிகள் தொலைபேசியில் அழைத்து விசாரிக்கமாட்டார்கள். நாம் அனுப்பிய பொருட்கள் பற்றிய சந்தேகங்கள் இருந்தால் அதை நேரடியாக கொரியர் நிறுவனத்திடம் தொடர்புகொண்டு தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்.
வங்கிக் கணக்கு எண், ஆதார் எண் போன்ற தனிநபர் விவரங்களை யார் கேட்டாலும் பகிர்ந்துகொள்ளவேண்டாம்.
இதுபோல் அழைப்புகள்வரும் பட்சத்தில், அவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனிக்கவேண்டும். அவர்கள் பேசும்முறை, இலக்கணம் பிழைகள், தகவல் பிழைகள் போன்றவை கவனித்து கேள்விகேட்டால் அவர்கள் மோசடியாளர்களாக இருந்தால் அழைப்பை துண்டித்துவிடுவார்கள். மேற்குறிப்பிட்ட நகைச்சுவை நடிகர் ரோஹன் ஜோஷி விஷயத்தில் இதுதான் நடந்தது. மோசடியாளர்கள் தங்களை டெல்லி போலீஸ் என்றும் சுங்க அதிகாரிகள் என்றும் அறிமுகம் செய்துகொண்டு, ரோஹன் ஜோஷியின் ஆதார் எண்ணை பயன்படுத்தி டெல்லியில் இருந்து கம்போடியாவிற்கு போதைப்பொருள் அனுப்பப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்கள்.
ஜோஷி விவரமாக அனுப்பப்பட்டபோதைப் பொருளின் பெயர் என்னவென்று கேட்டிருக்கிறார். அதற்கு மோசடியாளர்கள் "MDMA," என்ற சரியான பெயருக்கு பதிலாக "MMDA" என்று தவறாக சொல்லிருக்கிறார்கள். இதை அவர் சுட்டிக்காட்டியதும் அவர்கள் அழைப்பை துண்டித்துவிட்டனர். மோசடியாளர்கள் நம்மை மிகவும் அவசரப்படுத்தி உடனடியாக வினையாற்றும்படியும், அப்படிச் செய்யவில்லை என்றால் விளைவுகளை சந்திக்க நேரிடுமென்றும் நெருக்குவார்கள். அப்போது நாம் நிதானமாக இருந்து கேள்வி கேட்டால் அவர்களால் நம்மை ஏமாற்றமுடியாது.
மேலும் மோசடியாளர் என்று சந்தேகம் ஏற்பட்டலோ அல்லது பணத்தை பறிகொடுத்துவிட்டாலோ குற்றப்பிரிவு போலீஸாரிடம் தகவல் தெரிவிப்பது முக்கியமான ஒன்றாகும். ஏனெனில், காவல்துறை நடவடிக்கை எடுத்து கோயம்புத்தூரில் மோசடி செய்யப்பட்ட 5.67 கோடி ரூபாயில் 47.31 லட்சம் ரூபாய் வரை மீட்டுக்கொடுத்துள்ளது.

FedEx நிறுவனம் தனது அறிக்கையில் இதுபோன்ற தொலைபேசி அழைப்பின் வழியாக வாடிக்கையாளரின் தனிநபர் விவரங்கள் கோரப்படுவதில்லை என்று விளக்கம் அளித்திருக்கிறது. சென்னை காவல்துறையும், இதுபோன்ற மோசடிகள் பற்றி நடிகர் யோகிபாபுவை வைத்து எடுக்கப்பட்ட வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. நாம் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பமுடியும்.
References:
1. 70 people from Coimbatore lose ₹5.67 crore in ‘FedEx courier scam’ in less than six months.
2. With courier frauds on the rise, here's how you can stay vigilant
3. 'I had the greatest scam call': Comedian Rohan Joshi after being targeted in popular fake courier scam
4. மோசடி கும்பல்களிடம் ஏமாறாதீங்க... நடிகர் Yogi Babu அறிவுரை | Chennai Police | Awareness