கவலையளிக்கும் உணவுப்பொருட்களின் விலையேற்றம்!
உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்கும் அதே விகிதத்தில் ஊதியம் உயர்வதில்லை. உண்மை ஊதியமும் சரிந்து வருகிறது.
துல்லியமான புள்ளி விவரங்களை நாம் தெரிந்து வைத்திருக்கவில்லை என்றாலும், உணவுப்பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே செல்வதை அன்றாட வாழ்க்கை அனுபவத்தின் வழியாக பொதுவாக அறிந்துள்ளோம். ஆனால் புள்ளி விவரங்கள் ’விலைவாசி உயர்வு’ பற்றி இன்னும் அதிக கவலையளிக்கும் சித்திரத்தை தருகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே உணவுப்பொருட்களின் விலை வேகமாக உயர்ந்துகொண்டே வருகிறது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் செய்யப்பட்ட ஆய்வில், 2019 முதல் 2023 வரையிலான ஐந்தாண்டுகளில் உணவிற்கான செலவு 71% உயந்திருப்பதாக ‘The Hindu’ பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது.
.
மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உணவிற்காக நாம் செலவு செய்ததைவிட இந்த அக்டோபர் மாதம் 52% அதிகமாக நாம் செய்துகொண்டிருக்கிறோம். அதாவது, சென்ற ஆண்டு நாம் உணவிற்காக ரூபாய்.100 செலவு செய்ததாக வைத்துக்கொண்டால், இப்போது நாம் ரூபாய்.152 செலவு செய்யவேண்டியிருக்கிறது. வீடுகளில் உணவு சமைப்பதற்கு தேவையான பொருட்களின் விலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருக்கிறது.

இந்த ஆய்விற்கு மகாராஷ்டர மாநிலம் மாதிரியாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஏனெனில், காய்கறிகள் மற்றும் பிற உணவுப்பொருட்களின் விலைகள் பற்றிய சீரான தரவுகள் மும்பை நகரத்திலும், மகாராஷ்டர மாநிலத்திலும் தான் கிடைக்கிறது.
இந்தத் தரவுகளின்படி, அக்டோபர் 2023 - அக்டோபர் 2024 இடைப்பட்ட ஓராண்டில் மட்டும், தக்காளியின் விலை 247 சதவீதமும், உருளைக்கிழங்கின் விலை 180 சதவீதமும், பூண்டின் விலை 128 சதவீதமும் உயர்ந்துள்ளது. உணவு சமைப்பதற்கான அனைத்து காய்கறிகளின் விலைகளும் சராசரியாக 89 சதவீதம் உயர்ந்துள்ளது.
உணவுப்பொருட்களின் விலை உயரும் இதே வேகத்திலும் அளவிலும், இவற்றை வாங்குவதற்கு தேவையான ஊதியம் அதிகரித்திருக்கிறதா? என்று கேள்வி இப்போது எழுகிறது.
அதே மகாராஷ்ட்ர மாநிலத்தை மாதிரிக்களமாக கொண்டு பார்க்கும்போது, ஆண்களின் சராசரி தினக்கூலி 9.1 சதவீதமும் பெண்களின் தினக்கூலி 10.5 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. இந்த தினக்கூலித் தொழிலாளர்கள் பெரும்பாலும் முறைசார வேலைகளில் (Casual) பணியாற்றும் நபர்களாவர். முறைசார்ந்த வேலைகளில் (Regular) பணியாற்றும் ஆண்களின் சராசரி மாத வருமானம் 9 சதவீதமும், பெண்களின் மாத வருமானம் 10.4 சதவீதமும் அதிகரித்திருக்கிறது.
உண்மை ஊதியத்தை கணக்கில்கொண்டு பார்க்கும்போது, இந்த நிலை இன்னும் மோசமாக இருப்பதை காணலாம். சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் (IHD) ஆகியவை இணைந்து தயாரித்த அறிக்கை, கடந்த பாத்தாண்டுகளில் (2012 முதல் 2022 வரை) இந்தியாவில் சராசரியான உண்மை ஊதியம் (Real Wage) குறைந்துள்ளதாக தெரிவிக்கிறது. முறைசார்ந்த தொழிலாளர்களுக்கு (Regular) 2012 ஆண்டு சராசரியாக 12,100 ரூபாயாக இருந்த உண்மை ஊதியம் 2022 ஆண்டு 10,925 ரூபாயாக குறைந்துள்ளது.

உண்மை ஊதியம் என்றால் என்ன?
ஒரு நபர் தான் பெறும் ஊதியத்தை நிலவும் பணவீக்கத்திற்கு ஏற்றாப்போல் சரிசெய்த பிறகு கிடைக்கும் பணத்தை தான் உண்மை ஊதியம் என்கிறோம். அதாவது, 2014ஆம் ஆண்டு நம்முடைய ஒருநாள் ஊதியம் 100 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். ஒரு தோசையின் விலை 10 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். இப்போது, 100 ரூபாயைக் கொண்டு நாம் 10 தோசை வாங்கலாம். பத்தாண்டுகளில் நமது ஊதியம் 40 ரூபாய் அதிகரித்து 2024 ஆண்டு 140 ரூபாயாக இருக்கிறது. ஆனால் இப்போது ஒரு தோசையின் விலை 20 ரூபாயாக உள்ளது. இந்த 140 ரூபாயைக் கொண்டு நம்மால் 7 தோசை மட்டுமே வாங்க முடியும். 10 தோசை வாங்கும் அளவிற்கு ஊதியம் பெற்றுவந்த நாம், இப்போது 7 தோசை வாங்கும் அளவிற்கு மட்டுமே ஊதியம் பெருகிறோம். அதாவது, நமது உண்மை ஊதியம் குறைந்திருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை மொத்த ஊதியத்திலிருந்து உணவுப் பொருட்களுக்கான செய்யப்படும் செலவின் பங்கு அதிகமாகவுள்ளது. கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் தங்களது மொத்த வருமானத்தில் 46 சதவீதத்தை உணவிற்காக செலவு செய்கிறார்கள். நகர்புறவாசிகள் தங்களது மொத்த வருமானத்தில் 39 சதவீதத்தை உணவிற்காக செலவு செய்கிறார்கள் என்று 2022-23 ஆண்டின் Household Consumer Expenditure Survey (HCES) தெரிவிக்கிறது.

மேலும் இந்திய மக்கள்த்தொகையில் 0.2% (அதாவது ஒரு சதவீதத்திற்கும் மிகக் குறைவானவர்கள்) மட்டுமே ஒருநாளுக்கு 1000 ரூபாய்க்கு மேல் செலவு செய்கிறார்கள். ஆனால், 33.8% மக்கள் ஒருநாளுக்கு 100 ரூபாய்க்கும் குறைவாக செலவு செய்கிறார்கள் என்று HCES தெரிவிக்கிறது. மேலும் Mint செய்தித்தளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, குறைவாக வசதி படைத்தவர்கள் அத்தியாவசிய உணவுப்பொருட்களாக தங்களது வருமானத்தில் பெரும் பகுதியை செலவு செய்வதை அறிகிறோம்.
இதிலிருந்து, உணவுப்பொருட்களின் விலை மிக அதிகமாக உயர்ந்து வருவது தெரிகிறது. இதனை Food Inflation (உணவுப் பணவீக்கம்) என்று அழைக்கிறார்கள். மொத்த பணவீக்கத்தில் உணவுப் பணவீக்கத்தின் பங்கு கனிசமானதாக இருக்கிறது. ஆனால், ஊதியம் சொல்லிக்கொள்ளும் படியாக உயரவில்லை. மேலும் இந்த பணவீக்கத்தின் காரணமாக உண்மை ஊதியத்தின் அளவும் குறைந்துள்ளது. இதனால், குறைவான வருமானம் உள்ள ஏழை மற்றும் கீழ் நடுத்தர வர்க்க மக்கள் தங்களது வருமானத்தின் பெரும்பகுதியை உணவுப்பொருட்களுக்காக செலவு செய்யவேண்டிய கட்டயாத்தில் உள்ளனர். இதனால் அவர்களால் வாகனம், AC, Washing Machine போன்ற வீட்டு உபயோகப்பொருட்களை வாங்கமுடிவதில்லை.
உணவுப் பணவீக்கம் பற்றி பொருளாதார வல்லுநர்கள் அதிகம் கவலைப்படக் காரணம் இதுதான். ஏனெனில், மற்ற பொருட்களைப் போல் உணவுப்பொருட்களின் விலை, விலையேற்றம் பெற்ற பின்பு குறையாது. உதாரணமாக ஒரு தோசை 20 ரூபாயை தொட்டுவிட்டால் அது மீண்டும் 15 ரூபாய்க்கு எப்போதும் இறங்காது. இந்த உணவுப் பண்வீக்கம் பொருளாதாரத்தின் அனைத்து பகுதிகளையும் பாதிக்கும். அதனால்தான் பொருளாதார வல்லுநர்கள் உணவுப் பணவீக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அணுகுகின்றனர்.