YouTurn

நீரியல் சுழற்சியில் இடையூறு: பூமியின் மீதான அதன் விளைவுகள்!

நீரியல் சுழற்சி என்னும் அமைப்பில் ஏற்படும் இடையூறுகள் பூமியின் மீது பல்வேறு வகைகளில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

நீரியல் சுழற்சியில் இடையூறு: பூமியின் மீதான அதன் விளைவுகள்!


சமீபகாலமாக நாம் அடிக்கடி அதிகன மழை, வெள்ளம் ஆகியவற்றை எதிர்கொண்டு வருகிறோம். இது இயல்பானதா? அல்லது காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகளா? என்ற கேள்வி எல்லோரிடம் உண்டு. காலநிலை மாற்றத்தின் காரணமாக இந்தியா, சீனா, தைவான் போன்ற ஆசிய நாடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதை லண்டன் இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சியாளர், மரியம் சகரியா அவர்களின் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. காலநிலை மாற்றம் என்பது எங்கோ தொலைதூரமாக இருக்கும் எதிர்காலத்திற்கான பிரச்சனை என்று  இனிமேலும் நாம் இறுமாந்திருக்க முடியாது. காலநிலை மாற்றம் என்பது அதிக வெப்பம், வறட்சி, நோய், வெள்ளம், காட்டுத்தீ, கடல் மட்டம் உயர்வு போன்ற பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்துகிறது. காலநிலை மாற்றம்  ‘நீரியல் சுழற்சி’யில் ஏற்படுத்தும் இடையூறுகள் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. நீரியல் சுழற்சியும் காலநிலை மாற்றமும் ஒன்றன் மீது ஒன்று வினையாற்றக்கூடியவை. 


  


நீரியல் சுழற்சி என்பது, ஏரி குளங்கள் போன்ற நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் ஆவியாகி (Evaporation) வளிமண்டலத்திற்கு செல்கிறது. அங்கே நீராவி ஒடுக்கமாகி (Condensation) மழை மேகமாக மாறிகிறது. பின்னர், கேகங்கள் உருகி (Precipitation) மழை பொழிகிறது. இந்த மழைநீர் நிலத்தடி நீராக மாறுகிறது. இவ்வாறு பூமி வளிமண்டலம் ஆகியவற்றுக்கு இடையே நீர் இடைவிடாமல் பயணித்துக்கொண்டிருக்கிறது. இதில் பிறழ்வு அல்லது இடையூறு வரும் பொழுது பூமியின் அன்றாட நிகழ்வுகள் பிரச்சனைக்குரியதாகிறது. இந்தவகையில், நீரியல் சுழற்சியில் பசுமை நீரின் பாத்திரம் முக்கியமானது.


ஆனால், நீர் என்றால் பெரும்பாலும் ஆறு, குளம், ஏரி போன்ற மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மரங்களின் இலைகள் வழியாக வளிமண்டலத்திற்குள் வெளியேற்றப்படும் (Evapo-Transpiration) நீர் ‘பசுமை நீர்’ என்றழைக்கப்படும். இந்த பசுமை நீர் நாம் பெரும் மழையில் கணிசமான அளவை உருவாக்குகிறது, மேலும் நன்னீர் ஆதாரமாகவும் இருக்கிறது. 


பூமியின் நீரியல் சுழற்சி என்னும் அடிப்படையான அமைப்பில் மனித நடவடிக்கைகளால் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மனித நடவடிக்கைகளால் வெளியேற்றப்படும் பசுமைக்குடில் வாயுகளால் (Greenhouse Gases) பூமியின் வளிமண்டலம் வெப்பமடைந்து வருகிறது என்பதை நாம் அறிவோம். மேலும், பெரும்பரப்பு காடுகள் கழிக்கப்படுகிறது. இதனால், மரங்களின் பசுமை நீராக தங்கியிருக்கவேண்டிய நீர் ஆவியாகி வளிமண்டலத்திற்கு செல்கிறது. இலைகளில் இருந்து வேர் மட்டத்திற்கு செல்லவேண்டிய நீரும் குறைகிறது. இதனால், மண்ணின் ஈரப்பதம் குறைவதோடு, பூமிப்பரப்பின் காற்று வறண்டு போகிறது. இலைகளில் இருக்கும் பசுமை நீரும், மண்ணின் ஈரப்பதமும் குறையும்போது, கார்பன் டை ஆக்சைடை (CO2) உருஞ்சி ஆக்ஸிசனை வெளியிடுவதில் தேய்வு ஏற்படுகிறது. இது மேலும் பூமி வெப்பமயமாக்கலை அதிகப்படுத்துகிறது. இப்படி பூமிப்பரப்பு ஈரப்பதமற்று வறண்டு போவதால் மழைப்பொழிவு முறை மாற்றத்திற்கு (Shift in Raining Pattern) உள்ளாகிறது. 


மழைப்பொழிவு முறைகள் மாறுவது, வெப்பநிலை அதிகரித்து வருவது ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவுகளின் காரணமாவும்,  நீர் சேமிப்பு திட்டங்களை அமல்படுத்தாதது, சுத்தமான நீர் கிடைக்காமல் இருப்பது ஆகியவற்றின் காரணமாவும்,  வரும் 2050 ஆம் ஆண்டளவில் உயர் வருமானம் கொண்ட நாடுகளிலே மொத்த உள்நாட்டு உற்பத்தி  சராசரியாக 8% சரியும் என்று கணக்கிடப்படுகிறது. பருவம் தவறிய மழை, மண்ணின் ஈரப்பதம் குறைந்து போவது ஆகியவற்றின் காரணமாக விவசாய உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது.

 


தென் அமெரிக்காவில்  காலநிலை மாற்றம், காடு அழிப்பு போன்றவற்றால் வறட்சி அதிமமாகி வருகிறது. மழைக்காடுகளாக இருந்த அமேசான் காடுகள் பண்பளவிலான மாற்றமடைந்துள்ளன. அதாவது ஆண்டு முழுவதும் மழை பெறக்கூடிய காடுகளாக இருந்தது, தற்போது சில பருவங்களில் மட்டுமே மழை பெரும் காடுகளாக மாறிவருகிறது. இந்த காடுகளின் பரப்புகள் வறண்டு கொண்டே போகிறது. இதனால் அந்தக் காடுகளில் தற்போது அடிக்கடி காட்டுத் தீ ஏற்படுகிறது.


இது அடுக்கடுக்கான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. மழைக்காடுகள் தன்மை அளவில் மாறுபட்டாலோ, அழிந்து போனாலோ, அது தென் அமெரிக்க பருவ மழை அமைப்பிலே மாற்றங்களை உண்டாக்கும்; இது தன் பங்கிற்கு மழையின் அளவை குறைக்கும். இறுதியாக, அந்தப்பகுதியில் வாழும் பல்லுயிர்த் தொகுதி பாதிக்கப்படும். 


இப்படி தென் அமெரிக்காவில் நடக்கும் மாற்றங்கள் அந்தப்பகுதியோடு நின்றுவிடாது. அது உலகம் முழுவதும் மாற்றங்களை ஏற்படுத்தும். ஏனெனில், நீரியல் சுழற்சி என்பது ஒரு பிராந்திய அமைப்பல்ல. அது உலகம் முழுவதும் பிணைக்கும் அமைப்பாகும். காலநிலை மாற்றம் நீரியல் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்தும், பதிலுக்கு நீரியல் சுழற்சி காலநிலை மாற்றத்தை பாதிக்கும். இதுவொரு சுழலேணி (spiral) போல் சென்றுக்கொண்டேயிருக்கும். 


2022  ஆண்டின்  தொடக்கத்தில் மடகாஸ்கர், மொசாம்பிக், மலாவி மற்றும் ஜிம்பாப்வே போன்ற நாடுகளை தாக்கிய வெப்பமண்டல புயல்களை ஆராய்ந்ததில், மனித நடவடிக்கைகளால் உண்டான காலநிலை மாற்றத்தின் காரணமாக வெப்பமண்டல புயல்களுடன் தொடர்வுடைய அதிகன மழைகள் பொழிவதற்கான சாத்தியத்தையும் தீவிரத்தையும் அதிகரித்திருக்கிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 


பசுமைக்குடில் வாயு, பூமி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம், நீரியல் சுழற்சி இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று சிக்கலான வகையில் தொடர்புடையவை. குறிப்பாக நீரியல் சுழற்சியில் ஏற்படும் இடையூறுகளும், காலநிலை மாற்றமும் நவீன நாகரிகங்கள் இதுவரை சந்தித்திராத அளவிலான அபாயங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன்வொரு பகுதியாக பெருமழையும், வெள்ளமும் ஏற்படுகிறது. மழைநீர் வடிகால்கள் மூலமாக நமது நகரங்களை தற்காலிகமாக  காப்பாற்ற முடியும். ஆனால் பூமியை காப்பற்ற முடியாது. நீரியல் சுழற்சி, காலநிலை மாற்றம் போன்ற தீவிரமான பிரச்சினைகளுக்கு நாம் அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து அணுகவேண்டும்.


Links


Beyond boundaries: Earth’s water cycle is being bent to breaking point


Brazil's Amazon fires off to record 2024 start as green union blames firefighting budget cut


Impending Amazon tipping point puts biome and world at risk, scientists warn


Human induced climate change behind recent flooding disasters in Nepal

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை