இந்தியா பாகிஸ்தான் போர் குறித்து பரவிய பொய் செய்திகளின் தொகுப்பு இதோ!!
இந்தியா பாகிஸ்தான் போர் நடவடிக்கைகள் குறித்து பல பொய் செய்திகள் சமூக ஊடகங்களில் தவறாகப் பரவின. அவற்றை தொகுத்து இங்கு வழங்கியுள்ளோம்.
ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தளமான பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு, அதன் பசுமை நிறைந்த அழகான புல்வெளிகளுக்குப் பெயர் பெற்றது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 7500-8000 அடி உயரத்தில் இருக்க்கும் இது, மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 22 அன்று உள்ளூர் காவலர்களின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் இளைஞர் ஒருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் ஒரு இந்திய கடற்படை அதிகாரி, ஒரு உளவுத்துறை அதிகாரி, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவரும் அடங்குவர். கடந்த முப்பது ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பெரிய தாக்குதலாக இது உள்ளது.
இந்த தீவிரவாத தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ஆதரவு அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரன்ட்' (டிஆர்எப்) பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த மே 7-ம் தேதி இரவு, பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியாவின் முப்படைகளும் தாக்குதல் நடத்தினர்.
பாகிஸ்தானில் 4 இடங்களிலும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்களிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் குறைந்தபட்சம் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்வினையாக பாகிஸ்தான் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக இந்திய எல்லைகளில் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகக் கூறி அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் போர் நடவடிக்கைகள் குறித்து பல பொய் செய்திகள் சமூக ஊடகங்களில் தவறாகப் பரவின. அவற்றை தொகுத்து இங்கு வழங்கியுள்ளோம்.
இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம் எனப் பரவும் பழைய வீடியோ!
‘ஆபரேஷன் சிந்தூர்’ போர் நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பே “பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து நமது இராணுவ வீரர்கள் தாக்குதலை தொடங்கி இருக்கிறார்கள். இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய இராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது” என்று கூறி வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.

பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்ததில், இந்த வீடியோ கடந்த 2020-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது உறுதியாகிறது. இதை தற்போது நடந்த சம்பவம் என்று கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வந்தனர்.
மேலும் படிக்க: இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம் எனப் பரவும் பழைய வீடியோ!
'பாகிஸ்தான் சோதனை செய்த ஏவுகணை தோல்வி' எனப் பரவும் ரஷ்ய ஏவுகணையின் வீடியோ!
பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் சோதனை செய்த ஏவுகணை தோல்வியில் முடிவடைந்ததாகக் கூறி 21 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்பட்டது.

இது குறித்து ஆய்வு செய்ததில், “Euronews“ யூடியூப் பக்கத்திலும் “ரஷ்யாவின் புரோட்டான்-எம் ராக்கெட் ஏவிய உடனே தோல்வியடைந்ததன் காரணமாக விபத்துக்குள்ளாகி வெடித்தது“ என்று குறிப்பிட்டு கடந்த 2013 ஜூலை 02 அன்று வீடியோ வெளியிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. பரவி வரும் வீடியோவோடு இது கச்சிதமாகப் பொருந்துவதையும் காண முடிகிறது.
மேலும் படிக்க: 'பாகிஸ்தான் சோதனை செய்த ஏவுகணை தோல்வி' எனப் பரவும் ரஷ்ய ஏவுகணையின் வீடியோ!
இந்தியாவின் 'ஏவுகணை சோதனை முயற்சி' எனப் பரவும் தவறான காணொளிகள்!
தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை மற்றும் இந்தியாவின் ‘Spartans’ ஏவுகணையின் ஒத்திகையைப் பாருங்கள் என்று கூறி இரண்டு காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.


பரவி வரும் வீடியோக்கள் குறித்து ஆய்வு செய்ததில், தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை என்று கூறி பரவும் வீடியோ, பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு முன்பே எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும், இந்தியாவின் ‘Spartans’ ஏவுகணையின் ஒத்திகை எனப் பரவும் வீடியோ, 3D Animation மற்றும் VFX தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்பதையும் தெளிவாக அறிய முடிகிறது.
மேலும் படிக்க: இந்தியாவின் 'ஏவுகணை சோதனை முயற்சி' எனப் பரவும் தவறான காணொளிகள்!
லாகூரில் போர் விமானத்தில் ஏவுகணை பொருத்தும் போது தீ விபத்து எனப் பரவும் தவறான வீடியோ!
தீ விபத்து ஏற்பட்டு புகை மூட்டமாக இருக்கும் வீடியோ ஒன்றை, ’போர் தொடங்கும் முன்பே, பாகிஸ்தான் இராணுவம் லாகூர் விமான நிலையத்தில் போர் விமானத்தில் ஏவுகணையை பொருத்தியபோது பேட்டரி வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டதாகக் கூறி பாஜகவினர் சமூக வலைத்தளத்தில் பரப்பிவந்தனர்.

பரவி வரும் வீடியோ குறித்து தேடியதில், வீடியோ ஓராண்டிற்கும் முன்னால் லாகூர் விமான நிலையத்தில் short circuit காரணமாக ஏற்பட்ட தீ விபத்தின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிந்தது.
மேலும் படிக்க: லாகூரில் போர் விமானத்தில் ஏவுகணை பொருத்தும் போது தீ விபத்து எனப் பரவும் தவறான வீடியோ!
பாகிஸ்தானுடன் யுத்தம் செய்ய விரும்பாத இந்திய ராணுவ அதிகாரிகள் எனப் பரவும் வீடியோ! உண்மை என்ன?
‘பாகிஸ்தான் உடன் நாங்கள் யுத்தம் செய்ய மாட்டோம் எனக் கூறி விலகிச் செல்லும் இந்திய ராணுவ அதிகாரிகள்’ என வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது.

ஆய்வு செய்ததில், புஷ்பிந்தர் சிங் பாத் தாக்குதல் சம்பவம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட பழைய காணொளி இது என்பது உறுதியானது. இதை பாகிஸ்தான் உடன் நாங்கள் யுத்தம் செய்ய மாட்டோம் எனக் கூறி விலகிச் செல்லும் இந்திய ராணுவ அதிகாரிகள்’ என தவறாக பரப்பினர்.
மேலும் படிக்க: பாகிஸ்தானுடன் யுத்தம் செய்ய விரும்பாத இந்திய ராணுவ அதிகாரிகள் எனப் பரவும் வீடியோ! உண்மை என்ன?
‘Operation Sindoor’-ஐ முன்வைத்து பரப்பப்படும் தவறான தகவல்கள்!
‘Operation Sindoor’-ன் கீழ் இந்தியா பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள் என சில வீடியோக்கள் பாஜகவினர் உள்ளிட்டவர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரப்பப்பட்டது.


பரவி வரும் வீடியோ 2023ஆம் ஆண்டு இஸ்ரேல் வட காஸாவில் குண்டு வீசி தாக்குதல் நடத்திய போது எடுக்கப்பட்டது இதே போன்று இரண்டாவது வீடியோ கடந்த 2024 அக்டோபர் மாதம் ஈரான் இஸ்ரேலை ஏவுகணைகள் கொண்டு தாக்கியபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது உறுதியாகிறது.
மேலும் படிக்க:‘Operation Sindoor’-ஐ முன்வைத்து பரப்பப்படும் தவறான தகவல்கள்!
பழைய வீடியோக்கள் தற்போது இந்திய இராணுவம் நடத்திய ‘Operation Sindoor’ எனத் தவறாக பரப்பப்படுகிறது!
‘Operation Sindoor’-ன் கீழ் இந்தியா பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள் என சில வீடியோகள் ’News18 தமிழ்நாடு’ ஊடகம் உட்பட சிலரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டது.


முதல் வீடியோ பாலஸ்தீன் மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இன அழிப்பு போரில் காஸா மீது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியத போது எடுக்கப்பட்டது. இதே போன்று மற்றொரு வீடியோ, கடந்த ஜனவரி மாதம் பிலடெல்பியா நகரத்தில் நடந்த விமான விபத்தால் ஏற்பட்ட சேதத்தை காட்சிபடுத்தும் வீடியோ என்பது உறுதியாகிறது.
மேலும் படிக்க: பழைய வீடியோக்கள் தற்போது இந்திய இராணுவம் நடத்திய ‘Operation Sindoor’ எனத் தவறாக பரப்பப்படுகிறது.