நீதித்துறையில் சமூகநீதி: நீதிபதிகள் நியமனத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் நிலை ?
இந்திய மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் பெரும்பாலானோர் உயர்சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
சமீபத்தில் நாடாளுமன்ற விவாதத்தின் போது நீதித்துறையில் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளில் பெரும்பாலான நபர்கள் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் தான் என்று ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தரவுகள் பல்வேறு தளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்தியாவின் நீதித்துறையில் பட்டியல் சமூக மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோரின் பிரதிநிதித்துவம் என்னவாக இருக்கிறது என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது.
ராஜ்யசபாவில் திமுக உறுப்பினர் P. வில்சன் எழுப்பிய கேள்விக்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி எழுத்துப்பூர்வ பதிலளித்த ஒன்றிய இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், ’கடந்த 2021 முதல் 2026 ஜனவரி வரை இந்திய மாநிலக்களில் உள்ள பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்டுள்ள 593 நீதிபதிகளில் 79.76 சதவீதம் உயர் சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பதாக’ தெரிவித்தார்.
.
இந்த 593 உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 26 பேர் பட்டியல் சாதியை (SC) சேர்ந்தவர்கள், 14 பேர் பட்டியல் பழங்குடி (ST) வகுப்பை சேர்ந்தவர்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் (OBC) வகுப்பைச் சேர்ந்தவர்கள் 80 பேர், சிறுபான்மையினர் 37 பேர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.
இதனை சதவீத வாரியாக (In percentage) பார்க்கும்போது, கடந்த ஐந்தாண்டுகளில் நியமிக்கப்பட்ட 593 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 4.38% மட்டுமே SC வகுப்பை சேர்ந்தவர்கள், 2.36% மட்டுமே ST வகுப்பை சேர்ந்தவர்கள், 13.49% மட்டுமே OBCs வகுப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவருகிறது. இதனை கருத்தில் கொண்டுதான் ‘உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படையான பாகுபாடு உள்ளதாக’ வில்சன் குறிப்பிட்டுள்ளார்.
2018 முதல் 2026 ஜனவரி வரையில் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தாலும், இந்தியா முழுவதும் நியமிக்கப்பட்ட 847 உயர் நீதிமன்ற நீதிபதிகளில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் 3.8 சதவீதமாகவும், 2 சதவீத பட்டியல் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் சதவீதமாகவும், 12.27 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் சதவீதமாகவும், பெண்கள் ஒட்டுமொத்தமாகவே 15.34 சதவீதமாகவும் இருக்கிறார்கள்.

இதேபோல் கடந்த ஜனவரி 29ஆம் தேதி கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த ஒன்றிய இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், இந்தியா முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில் ஆகியவற்றில் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளின் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த தரவுகளை அளித்தார். அதில் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடு இருப்பதைக் காணமுடிந்தது.
குஜராத் மாநிலத்தில் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளில் 28.29 சதவீதம் நபர்கள் மட்டுமே பட்டியல் சமூக மற்றும் பிற்படுத்தப்பட்ட (SC/ST/OBC) வகுப்புகளை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதேபோல் உத்தர பிரதேச மாநிலத்தில் 53.56 சதவீதம் (SC/ST/OBC) வகுப்புகளை சேர்ந்தவர்கள் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரையில், மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 97.65 சதவீதம் பட்டியல் சமூக மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் நீதிபதிகளாக இருக்கிறார்கள்.
இந்திய மாநிலங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் நிலை இவ்வாறு இருக்க உயர் நீதிமன்றங்கள் கிட்டத்தட்ட 80 சதவீதம் நீதிபதிகள் உயர்சாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பது, நீதித்துறையின் உயர் அடுக்குகளில் பல்வேறு வகுப்புகளை சேர்ந்த மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதைக் காட்டுவதாக இருக்கிறது.
மாவட்ட நீதிமன்றங்களிலும் கீழமை நீதிமன்றங்களிலும் பட்டியல் சமூகம் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கான வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஓரளவிற்காகவேனும் சாத்தியப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் மேற்குறிப்பிட்ட வகுப்புகளின் பிரதிநிதித்துவம் 50 சதவீதத்திற்கும் மேலாக இருக்கிறது. ஆனால் உயர்நீதிமன்றங்களில் இந்த பிரதிநிதித்துவம் சாத்தியப்படவில்லை என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

சட்ட விதிகள் 124, 217 மற்றும் 224 ஆகியவற்றின் கீழ் தான் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. இந்த விதிகளின் கீழ் சாதி அல்லது வகுப்பு சார்ந்த இட ஒதுக்கீடு கொடுப்பதற்கான வழியில்லை என்று காரணம் சொல்லப்படுகிறது. ஆனால் அதேவேளையில் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் செய்வதற்காக விதிகளை அந்தந்த மாநில அரசாங்கம் அந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றத்துடன் இணைந்து உருவாக்கிக்கொள்ளலாம் என்று 233, 234 சட்டவிதிகள் சொல்கின்றன.
இதனால் உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் பட்டியல் சமூகம் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை (SC/ST/OBC) சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் அரசியலமைப்பில் சட்டத் திருத்தம் ஒன்றை பிப்ரவரி 6ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வில்சன் முன்மொழிந்தார். மேலும் சாதிவாரி கணப்பெடுப்பை மாநில அரசுகளே நடத்தும் வகையில் மாநிலங்களுக்கு அதிகாரமளிக்கவும் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரவேண்டுமென்று முன்மொழிந்தார்.