YouTurn

உணவு நுகர்வு முறைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்!

உணவு தானியங்களின் நுகர்வு விகிதம் குறைந்து, பன்முகப்பட்ட (Diverse dietary Needs) உணவுத் தேவைக்கான நுகர்வு அதிகரித்திருப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

உணவு நுகர்வு முறைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்!

ஒரு நாட்டின் பொருளாதாரம் மாற்றமடையும் போது, அதனையொட்டி அதன் உணவு நுகர்வு முறையும் மாற்றங்களுக்கு உள்ளாகும் என்பது பொதுவான விதியாகும். இந்த வகையில் கடந்த முப்பதாண்டுகளாக இந்தியர்களின் உணவு நுகர்வு முறைகளை எவ்வாறு மாற்றமடைந்து வந்திருக்கிறது என்பதைப் பற்றி பகுப்பாய்வு செய்த அசோகா பல்கலைக்கழகத்தின் ‘பொருளாதார தரவு மற்றும் பகுப்பாய்விற்கான மையம் (CEDA) ’ ‘இந்தியாவில் தானிய நுகர்வு முறைகள்’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.


அதன்படி, 1993-94 தொடங்கி 2023-24 வரையுள்ள முப்பதாண்டுகளில் இந்தியாவில் தானிய உற்பத்தி அதிகரித்திருக்கிறது. 1993-94ல் 122.8 மில்லியன் ஹெக்டேர்களாக இருந்த விவசாய விளைநிலப் பரப்பு முப்பதாண்டுகளில் 132.1 மில்லயன் ஹெக்டேர்களாக உயர்ந்திருக்கிறது. இந்த முப்பதாண்டுகளில், தானிய உற்பத்தி 184.3 மில்லியன் டன்களில் இருந்து 332.3 மில்லியன் டன்களாக உயர்ந்திருக்கிறது.

விளைநிலங்களின் விரிவாக்கம், புதிய ரக விதைகள், தொழில்நுட்பம் ஆகியவற்றால் தானியங்களின் (cereals) விளைச்சலும் இருப்பும் அதிகரித்திருந்தாலும், அதனை மக்கள் நுகரும் விகிதம் (Proportion) குறைந்திருக்கிறது. 


1993-94 ஆண்டில் சராசரியாக ஒரு நபர் மாதம் ஒன்றுக்கு 13.4 கிலோ தானியம் நுகர்ந்து வந்த நிலை மாறி, தற்போது (2023-24) ஒரு நபர் 9.6 கிலோ தானியம்தான் நுகர்கிறார். நகர்ப்புறங்கள், கிராமப்புறங்கள் ஆகிய இரண்டு பகுதிகளிலும் அரிசி, கோதுமை மற்றும் பிற தானியங்களின் நுகர்வு குறைந்திருக்கிறது. உணவு தானியங்களுக்கான மாதாந்திரச் செலவின் பங்கு குறைந்திருக்கிறது. அதேவேளையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர் பானங்கள் மற்றும் விலங்கு இறைச்சி போன்ற பொருட்களுக்காகச் செய்யப்படும் செலவின் விகிதம் அதிகரித்திருக்கிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், ஒட்டுமொத்த உணவு நுகர்வில் தானியங்களின் பங்கு குறைந்திருக்கிறது. ஒரு நாட்டு மக்களின் வருமானம் அதிகரிக்கும் போது, அவர்கள் வழக்கமாக நுகரும் அடிப்படை உணவுகளுக்காகச் செய்யப்படும் செலவை விட இறைச்சி, பால், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றுக்கு அதிகமாகச் செலவிடுவார்கள் என்ற பென்னட் பொருளாதார விதியுடன் (Bennett’s law) மேற்கூறிய நுகர்வு முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் ஒத்திசைவாக இருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 



1993-94ஆம் ஆண்டில் நகர்ப்புறங்களில், மொத்தமாக உணவிற்காகச் செய்யப்படும் செலவில் தானியங்களுக்கான செலவு 24.2 சதவீதமாக இருந்தது. ஆனால், தற்போது 2023-24 இது 5 சதவீதமாகக் குறைந்துவிட்டது. கிராமப்புறங்களில் இது 14 சதவீதமாக இருந்தது தற்போது 3.8 சதவீதமாகக் குறைந்துவிட்டது. 



கிராமப்புறங்களில் ஏழைகளைவிடப் பணக்காரர்கள் அதிக அளவில் தானியங்களை நுகர்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், நகர்ப்புறங்களில் அதிக வருமான பெறுவோர் குறைவாகவே தானியங்களை நுகர்கிறார்கள். இது நகரம், கிராமம் ஆகிய பகுதிகளுக்கு இடையில் உள்ள பொருளாதார வேறுபாட்டையும், அதன் தொடர்ச்சியாக உணவு முறையில் வேறுபாடு இருப்பதையும் பிரதிபலிப்பதாக உள்ளது.


பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், புத்துணர்வு பானங்கள், இறைச்சி, பால் போன்றவற்றுக்காக ஒரு நபர்  மாதாந்திரம் செய்யும் செலவின் விகிதம் அதிகரித்திருக்கிறது. 


இந்த போக்கு நாடு முழுவதற்கும் பொதுவானதாக இருந்தாலும், ஒவ்வொரு மாநிலங்கள் அல்லது பிராந்தியங்களுக்கும் தனித்தன்மைகள் உண்டு. நாடு முழுவதும் தானிய நுகர்வு குறைந்து வந்தாலும் மேற்கு வங்காளம், ஒடிசா, பீகார் மற்றும் ஜார்கண்ட் போன்ற கிழக்கு மாநிலங்கள் பஞ்சாப், ஹரியானா, கேரளா போன்ற மாநிலங்களைவிட அதிக அளவு தானிய நுகர்வு செய்வதாக இருக்கிறது. இந்த தனித்தன்மைகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று அறிக்கை குறிப்பிடுகிறது.


மேற்கூறிய விவரங்கள் அனைத்தும் இந்தியாவில் உணவு நுகர்வு முறைகள் மாறியிருப்பதை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. உணவு தானியங்களின் நுகர்வு விகிதம் குறைந்து, பன்முகப்பட்ட (Diverse dietary Needs) உணவுத் தேவைக்கான நுகர்வு அதிகரித்திருப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதனால், உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து போன்ற விசயங்கள் விவாதிக்கப்படும் போது உணவு நுகர்வு முறைகள் மாறி வருவதைக் கணக்கில் கொள்ளவேண்டும்.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை