IT துறை வேலை வாய்ப்பில் சாதிய பாகுபாடு!
ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இளைஞர்களைவிட உயர் சாதியை சேர்ந்தவர்களுக்கு IT துறையில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
இந்தியாவில் வளர்ந்து வரும் துறைகளில் முதன்மையானதாக இருப்பதாலும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும், உயர்ந்த ஊதியமும் வழங்குவதாலும் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு (IT) சமூகத்தில் நல்ல செல்வாக்கு நிலவுகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7% வரை IT துறையின் பங்களிப்பு இருக்கிறது. வருகின்றன 2025ஆம் ஆண்டிலும் இந்த IT துறையில் 15 முதல் 20 சதவீதம் வரை வேலை வாய்ப்புகள் அதிகரிக்குமென கணக்கிடப்படுகிறது. அதிலும், சிறப்பு திறன் தேவைப்படக்கூடிய செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), மீப்பெரும் தகவல் பகுப்பாய்வு (Big Data Analytics), Machine Learning ஆகியவற்றுக்கான வேலை வாய்ப்பு 30 முதல் 35 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

மேற்கூறிய காரணங்களால் இந்திய இளைஞர்களின் கனவு வேலையாக IT வேலை இருக்கிறது. இதனால், ஏழை, நடுத்தர வர்க்கம், விளிம்புநிலை பின்னணி என அனைத்துத் தரப்பில் இருந்து வரும் தகுதியுடைய இளைஞர்களும் IT வேலையில் சேர்ந்த தங்களது வாழ்வை ஒளிமயமானதாக மாற்றிக்கொள்ள முடியுமென்ற கருத்து சமூகத்தில் நிலவுகிறது. ஆனால், இதனை ஆய்வு செய்து பார்த்தால் யதார்த்தம் வேறொன்றாக இருப்பதை கண்டுகொள்ள முடியும்.
National Sample Survey Office (NSSO) வெவ்வேறு காலகட்டத்தில் நடத்திய கணக்கெடுப்புகளின் (surveys) தரவுகளை ஒப்பிட்டு ஆய்வு செய்தபோது IT துறையில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள், ஊதியம் ஆகியற்றில் சாதி ரீதியான பாகுபாடு இருப்பது தெரியவருகிறது.
கடந்த 2011-12 ஆண்டில் National Sample Survey Office (NSSO) நடத்திய கணக்கெடுப்பில் இருந்து 8,852 தனிநபர்களையும், 2020-2021 நடத்திய கணக்கெடுப்பில் இருந்து 20,437 தனிநபர்களையும் மாதிரிகளாக (samples) கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. காஷ்மீர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (IUST) உதவிப் பேராசிரியர் இர்பான் அஹ்மத் சோஃபி; பாத் பல்கலைக்கழகத்தின் வருகைப் பேராசிரியராக பணியாற்றும் சந்தோஷ் மெஹ்ரோத்ரா; அமிர்தசரஸ் IIM-ல் உதவி பேராசிரியராக இருக்கும் அருண் குமார் பைரவா ஆகியோர் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.

2011-12ஆம் ஆண்டில் IT துறையில் உயர் சாதியை சேர்ந்தவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு (Probability) 17 சதவீதமாக இருந்த நிலையில், பட்டியல் சமூக இளைஞர்களுக்கு வெறும் 6 சதவீத வாய்ப்புகள் மட்டுமே இருந்திருக்கிறது. இதேபோல், 2020-21 ஆண்டில், IT துறையில் உயர் சாதியை சேர்ந்தவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு 27 சதவீதமாக இருந்த நிலையில், பட்டியல் சமூக இளைஞர்களுக்கு 10 சதவீதமாக மட்டுமே இருந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக IT துறை வேலை வாய்ப்புகள் அதிகரித்திருந்தாலும், பட்டியல் சமூக இளைஞர்களுக்கான வாய்ப்புகள் அதே விதிகத்தில் உயரவில்லை. மாறாக, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளில் உள்ள பற்றாக்குறை கடந்த பத்தாண்டுகளில் 11 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது 2011-12 ஆண்டைவிட இன்னும் அதிக அளவில் 2020-21 ஆண்டு ஒடுக்கப்பட்ட இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது.
IT துறையில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளில் உள்ள பாகுபாடுகளை மட்டுமல்ல, ஊதியங்களில் உள்ள பாகுபாடுகளையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அதாவது, பட்டியல் சமூக இளைஞர்களும், பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் (OBCs) சேர்ந்த இளைஞர்களும் உயர் சாதியைச் சேர்ந்த IT ஊழியர்களைவிட சுமார் 20% குறைவாக ஊதியம் பெறுகிறார்கள். மேலும், உயர் சாதியை சேர்ந்தவர்கள் அதிகமாக நிறுவனத்தின் உயர்ந்த பொறுப்புகளில் இருப்பதும், ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் கீழ்நிலை வேலைகளில் (Lower segment) இருப்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவருகிறது.
மேலும், IT துறையில் பாலினப் பாகுபாடு (Gender Disparities) இருப்பதையும் பதிவு செய்கிறது இந்த ஆய்வு. IT துறையின் பெண் ஊழியர்கள் பொதுவாக அவர்கள் எந்த சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் ஆண்களைவிட 26.2% குறைவாக ஊதியம் பெறுகிறார்கள். ஒடுக்கப்பட்ட இளைஞர்கள், பெண்கள் என மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளவர்களை IT போன்ற நல்ல ஊதியம் பெறக்கூடிய வேலைகளில் இருந்து தவிர்க்கும் (Exclusion) போது, இந்தத் துறையின் திறனை மட்டப்படுத்துவது மட்டுமல்லாமல், இது சமூக நீதியையும் கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கிறது என்று இந்த ஆய்வை முன்வைத்தவர்கள் கூறுகிறார்கள்.