தமிழ்நாடு உடைத்தால் மண் குடம்! உ.பி உடைத்தால் பொன் குடம்! அண்ணாமலையின் லாஜிக்.
தொடர்ந்து 5 முறை பாஜக ஆளும் உ.பி.யில் பொறுப்பு டிஜிபிகள் நியமிக்கப்படும் போது பேசாத அண்ணாமலை, தற்போது திமுக அரசு தமிழ்நாட்டில் பொறுப்பு டிஜிபியை நியமிக்கும் போது மட்டும் கண்டனம் தெரிவிக்கிறார்.
தமிழ்நாட்டின் டிஜிபியாக கடந்த இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து புதிய பொறுப்பு டிஜிபியாக (Acting DGP) ஜி.வெங்கட்ராமன் திமுக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை விமர்சித்து தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ’எக்ஸ்’ பதிவிட்டுள்ளார். அதில், ‘பொறுப்பு டிஜிபியை நியமனம் செய்ததன் மூலம் திமுக அரசு உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மீறியிருக்கிறது. ஆறு மூத்த அதிகாரிகள் இந்த பதவிக்கு தகுதியானவர்களாக இருக்கையில் திமுக ஏன் அவர்களை நியமிக்கவில்லை?’ என்று பதிவிட்டுள்ளார்.
The patchwork model DMK government has shamelessly violated the Hon Supreme Court’s guidelines by appointing an acting Director General of Police/Head of Police Force, Tamil Nadu.
When Thiru Shankar Jiwal avl was appointed as the HoPF, the DMK government was fully aware of his…
மேலும், ‘மாநில காவல்துறை தலைவர் (டிஜிபி) நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தெளிவான விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி டிஜிபி பதவியில் இருப்பவர் ஓய்வு பெறும் மூன்று மாதங்களுக்கு முன்பே அடுத்த டிஜிபி பதவிக்கு தகுதியான அதிகாரிகளின் பட்டியலை மாநில அரசு UPSCக்கு அனுப்ப வேண்டும். ஆனால் முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால் நியமிக்கப்படும் போதே அவர் ஓய்வுபெறும் காலம் பற்றி திமுக அரசுக்கு தெரியும். அவ்வாறு தெரிந்திருந்தும் பட்டியலை அனுப்பாமல், உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக பொறுப்பு டிஜிபியை திமுக நியமித்துள்ளது. இவ்வாறு காவல்துறையின் உயர்ந்த பதவியை வெறும் அரசியல் பதவியாக திமுக அரசு மாற்றிவிட்டதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
அண்ணாமலை கூறும் உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் என்பது என்ன? அதை இதுவரை எந்த மாநில அரசும் மீறியதில்லயா? என்பது குறித்து ஆராய்ந்தோம்.
கடந்த 2018ஆம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, மாநில காவல்துறை தலைவர் (டிஜிபி) நியமனம் குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்தது. அதன்படி, தற்போது பதவியில் இருக்கும் டிஜிபியின் பதவிக் காலம் முடியும் மூன்று மாதங்களுக்குச் முன்பே, அந்தந்த மாநில அரசுகள் இந்த பதவிக்கு தகுதியான அதிகாரிகளின் பெயர்களை UPSCக்கு அனுப்ப வேண்டும். அதன்படி, UPSC தேர்ந்தெடுத்து அனுப்பும் மூன்று நபர்களில் யாரேனும் ஒருவரை டிஜிபியாக மாநில அரசு நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு நியமிக்கப்படும் டிஜிபி கட்டாயம் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். நிச்சயமாக, மாநிலங்கள் பொறுப்பு டிஜிபியை நியமிக்கக்கூடாது. மேலும், இது தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய அரசு இயற்றும் சட்டங்கள் அல்லது விதிமுறைகள் மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானதாக இருக்கும் பட்சத்தில் அவை எதுவும் உச்ச நீதிமன்றத்தால் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் செல்லுபடியாகாது என்றும் இந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

ஆனால், பொறுப்பு டிஜிபியை நியமித்தது தொடர்பாக இதுவரை ஆறு மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளதாக ‘The Federal’ தளத்தில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் பாஜக ஆளும் உத்தர பிரதேசமும் அடங்கும்.
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் UPSCயால் பரிந்துரைக்கப்பட்டு டிஜிபியாக பணியாற்றி வந்த முகுல் கோயல் என்பவரை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு பணி நீக்கம் செய்தது. அதன் பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் 5 முறை தொடர்ந்து பொறுப்பு டிஜிபியை மட்டுமே நியமித்து வருகிறது உ. பி அரசு. இது 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு விரோதமானதாகும். இந்நிலையில் உ.பி அரசு கடந்த 2024ஆம் ஆண்டு டிஜிபி நியமனம் குறித்த புதிய சட்டத்தை இயற்றியது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏற்கனவே நாம் மேலே பார்த்துள்ள படி, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக இருக்கும் எந்தவொரு சட்டமும் விதிமுறைகளும் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் மட்டுமல்ல திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்காளம், ஆம் ஆத்தி ஆளும் பஞ்சாப், தெலுங்கு தேசம் கட்சி ஆளும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதேபோன்ற பொறுப்பு டிஜிபிகள் நியமனம் செய்யப்படுள்ளனர்.

தனது சொந்த கட்சியான பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து 5 முறையாக பொறுப்பு டிஜிபி நியமிக்கப்படும் போது பேசாத அண்ணாமலை, தற்போது திமுக அரசு தமிழ்நாட்டில் பொறுப்பு டிஜிபியை நியமிக்கும் போது மட்டும் கண்டனம் தெரிவிக்கிறார். பாஜக ஆளும் மாநிலம் மூன்றாண்டுகளாக செய்து வரும்போது தவறாக தெரியாத ஒரு நடைமுறை, மற்ற கட்சிகள் ஆளும் மாநிலத்தில் செய்யப்படும் போது மட்டும் அண்ணாமலையின் கண்களுக்கு தவறாக தெரிகிறது.