YouTurn

அதானி மீதான அமெரிக்க நீதித்துறையின் ‘லஞ்ச ஊழல்’ குற்றச்சாட்டு!

சூரிய சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்தது, "தவறான மற்றும் திரிக்கப்பட்ட அறிக்கைகளை" கொடுத்து அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அதானி மீது வைக்கப்பட்டுள்ளது.

அதானி மீதான அமெரிக்க நீதித்துறையின் ‘லஞ்ச ஊழல்’ குற்றச்சாட்டு!

கடந்த நவம்பர் 20ஆம் தேதி இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனத்தின் நிர்வாகிகளான கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் மீது புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் (Brooklyn Federal Court) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட விவகாரம் இந்திய சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



சூரிய சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்தது, "தவறான மற்றும் திரிக்கப்பட்ட அறிக்கைகளை" கொடுத்து அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும் உலகளாவிய நிதி நிறுவனங்களை ஏமாற்றியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அதானி நிறுவனத்தின் மீது  வைக்கபட்டுள்ளது. அமெரிக்க நிறுவனமான ‘Azure Power’ குழுமத்தின் துணை நிறுவனமும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


image.png


ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி நிறுவனத்தின் மீது இரண்டு முறை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒன்று, ’பங்குச் சந்தையில் சூழ்ச்சி செய்தது (Stock Manipulation)’, மற்றொன்று ’அதானி குழுமத்தின் சந்தேகத்திற்குரிய அந்நிய பங்குதாரர்களுக்கு (Offshore Shareholders) எதிராக எந்த நடவடிக்கையும் SEBI எடுக்காமல் இருப்பதற்கு, கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி பயன்படுத்திய அதே நிதியைப் பயன்படுத்துவதில் SEBI (Securities Exchange Board of India)  தலைவர் ’மாதபி புச்’ உடந்தையாக இருந்தது காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது’. இந்த குற்றச்சாட்டுகளும் SEBI அமைப்பு விசாரித்து வரும் நிலையில், அமெரிக்க நீதிமன்றம் மூலமாக அதானி மீதான ’லஞ்ச ஊழல்’ வழக்கு வெளிவந்துள்ளது.


image.png


2019-2020 ஆம் ஆண்டுகளில் அதானி நிறுவனமும், ‘Azure Power’ குழுமத்தின் துணை நிறுவனமும் இணைந்து ’Solar Energy Corporation of India Limited (SECI)’-னிடம் இருந்து மின் உறுபத்தி செய்யும் திட்டத்திற்கான ஆணையை (Tender) பெற்றனர். இந்த திட்டத்தின் அடிப்படையில் மொத்தம் உற்பத்தி செய்யப்பட வேண்டிய 12 ஜிகாவாட்டில் (12 GW) அதானி நிறுவனம் 8 ஜிகாவாட்டும், ‘Azure Power’ நிறுவனம் 4 ஜிகாவாட்டும் உற்பத்தி செய்து SECI-க்கு வழங்கும். இதன்பின்னர், உற்பத்தி செய்யப்பட்ட இந்த 12 ஜிகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்யும் மாநில மின்சார விநியோக நிறுவனங்களைக் (State Electricity Distribution Companies) கண்டறியும் பொறுப்பை SECI ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் அந்த ஒப்பந்தத்தின் சாரம். 


இனிவரும் 20 ஆண்டுகளில், இந்த சோலார் மின் உற்பத்தி திட்டத்தின் மூலமாக வரியை கழித்துவிட்டு (After Tax) பார்த்தாலும் அதானி மற்றும்  ‘Azure Power’  நிறுவனங்கள் $2 பில்லியன் டாலருக்கும் அதிகமான லாபத்தை ஈட்டும்.


இந்த மிகப்பெரிய திட்டத்தை கட்டமைக்க சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட சொத்து மேலாண்மை நிறுவனங்களிடமிருந்து $2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வங்கிக் கடன்களை அதானி நிறுவனம் பெற்றிருக்கிறது. மேலும் அமெரிக்காவிலும், மற்ற நாடுகளிலும் உள்ள முதலீட்டாளர்களிடம் பங்கு பத்திரங்களை விற்பதன் மூலமாகவும், சந்தை படுத்துவதன் மூலமாகவும் $1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நிதியை திரட்டியுள்ளது. 


ஆனால், இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் விலை அதிகமாக இருப்பதால், எந்த மாநில மின் விநியோக நிறுவனங்களும் இதனை SECI-யிடமிருந்து வாங்க முன்வரவில்லை. மாநிலங்களிடம் SECI-யால் மின்சாரத்தை விற்க (Power Sale Agreement “PSA”) முடியவில்லையென்றால், அதானி மற்றும் ‘Azure Power’ நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை SECI  வாங்க (Power Purchase Agreement “PPA”) முடியாது.


அதானி மற்றும்  ‘Azure Power’  நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மாநில மின் விநியோக நிறுவனங்கள் SECI-யிடம் இருந்து மின்சார வாங்கும் திட்டத்திற்குள் கொண்டுவர, இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு ‘லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை (Bribery Scheme)’ கௌதம்  அதானி, சாகர் அதானி மற்றும் விநீத் ஜெயின் ஆகியோர் வகுத்து செயல்படுத்தியதாக அமெரிக்க நீதிமன்றத்தின் ‘GRAND JURY’ அறிக்கை தெரிவிக்கிறது.


image.png


கௌதம் அதானி, ஆந்திரப் பிரதேசத்தில் இருந்த வெளிநாட்டு அதிகாரி ஒருவரை நேரில் சந்தித்து, ஆந்திரப் பிரதேச மாநில மின்சார விநியோக நிறுவனங்கள் இந்த திட்டத்திற்காக SECI-யுடன் இணைந்துக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.


இதன்படி, ஆந்திரப் பிரதேச மாநில மின்சார விநியோக நிறுவனங்கள் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு, அதன் மூலம் ஏழு ஜிகாவாட் சூரிய சக்தியை SECI இலிருந்து வாங்க வைத்ததற்காக மேற்கூறிய வெளிநாட்டு அதிகாரிக்கு சுமார் 1,750 கோடி ரூபாய் (தோராயமாக $228 மில்லியன் டாலர்) லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது.


இப்படி மாநில மின் விநியோக நிறுவனங்களை இந்த திட்டத்தில் இணைப்பதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் 2,029 கோடி ரூபாய் (தோராயமாக $265 மில்லியன் டாலர்) லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது.


இந்த மின் உற்பத்தி திட்டத்தால், ‘Azure Power’ நிறுவனமும் பயன் அடைவதால், அந்த நிறுவனமும் அதிகாரிகளுக்கு கொடுக்கப்படவேண்டிய லஞ்சப் பணத்திற்கான தனது பங்கையும் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. 


ஒடிசா, ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களும் இந்த திட்டத்தில் இணைந்துகொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


”எந்த மாநில அல்லது பிராந்திய அரசு அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் வழங்கப்படவேண்டும்; வழங்கப்படவேண்டிய லஞ்சத்தின் மொத்தத் தொகை; லஞ்சத்திற்கு ஈடாக மாநிலம் அல்லது பிராந்தியம் வாங்க ஒப்புக் கொள்ளும் சூரிய மின் சக்தியின் அளவு” என்ற விவரங்கள் அடங்கிய ’லஞ்சக் குறிப்புகளை’ சாகர் அதானி தனது cellular phone-ல் வைத்திருந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.


‘Azure Power’ நிறுவனம்  ஒடிசா, ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநில விநியோக நிறுவனங்களுக்கு மொத்தம் 650 மெகாவாட் (650 MW) மின்சாரமும், ஆந்திராவின் நிறுவனங்களுக்கு மொத்தம் 2.3 ஜிகாவாட்  (2.3 GW) மின்சாரமும் வழங்குவதாக ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி, ‘Azure Power’ நிறுவனம் தனது பங்கிற்கு கொடுக்கவேண்டிய லஞ்சப்பணத்தை பற்றிய விவரங்கள் அடங்கிய ஆவணத்தை விநீத் ஜெயின் தனது  cellular phone-ல் புகைப்படம் எடுத்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதன் படி, ’Azure Power’ நிறுவனம், தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களின் அதிகாரிகளுக்கான லஞ்சமாக 55 கோடி ரூபாயும், ஆந்திராவின் அதிகாரிகளுக்கான லஞ்சமாக 583 கோடி ரூபாயும் கொடுக்க இருந்ததாக தெரியவருகிறது. 


இந்த லஞ்சப்பணத்தை பெற எந்த வழி சிறந்தது என்பதை ரூபேஷ் அகர்வால் பகுப்பாய்வு செய்து முன்வைத்த ஆவணங்கள் கிடைத்திருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.


கௌதம்  அதானி, சாகர் அதானி மற்றும் விநீத் ஜெயின் ரஞ்சித் குப்தாவுடன் இணைந்து இந்த முறைக்கேடான லஞ்சம் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, சிரில் கேபன்ஸ், சௌரப் அகர்வால், தீபக் மல்ஹோத்ரா, ரூபேஷ் அகர்வால் ஆகியோரும் ஈடுப்பட்டுள்ளனர். 


இப்படி முறைகேடுகளில் ஈடுபட்டது மட்டுமன்றி, முறைகேடாக இந்த லஞ்சத்திட்டத்தை மறைப்பதன் மூலம் நியூயார்க்கின் கிழக்கு மாவட்ட நீதிமன்ற விசாரணையையும், FBI-ன் விசாரணையையும் தடுத்திருக்கிறார்கள். ஆவணங்களை அழித்து, மறைத்து இந்த விசாரணைகள் தொடர்பாக அமெரிக்க அரசாங்கத்திற்கு தவறான தகவல்களை வழங்கியுள்ளனர். தவறான மற்றும் திரிக்கப்பட்ட அறிக்கைகளை கொடுத்தும், மற்றவர்களையும் இதுபோல் தவறான அறிக்கைகளை கொடுப்பதற்கு தூண்டியும் முதலீட்டாளர்கள் மற்றும் கடன் வழங்குபவர்களை தவறாக வழிநடத்தியுள்ளனர். இந்த அடிப்படைகளில் அதானி மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. 


ஆனால், அதானி குழுமம் அமெரிக்க நீதித்துறையால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகளை "அடிப்படை ஆதாரமற்றது" என்று கூறி மறுத்துள்ளது. 


கடந்த ஆண்டிலிருந்து அதானி குழுமம் இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கிவருவது குறிப்பிடத்தக்கது. இந்த குற்றச்சாட்டுகளை பற்றி நாடாளுமன்றத்தில் பேசுவதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முயற்சித்தபோது, அமளி ஏற்பட்டு நேற்று (நவம்பர் 25ஆம் தேதி) இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை