‘சஞ்சார் சாத்தி’ செயலியை நிறுவுதல் கட்டாயமா? இல்லையா? குழப்பும் ஒன்றிய அரசு!
‘சஞ்சார் சாத்தி’ என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? ‘சஞ்சார் சாத்தி’ செயலியை நிறுவுதல் கட்டாயமா? என்பது குறித்த ஒரு விரிவான பார்வை இதோ.
இந்தியாவில் சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) செயலியை மார்ச் 2026 முதல் புதிதாகத் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் முன்பே இன்பில்ட்டாக (Inbuilt) நிறுவி இருக்க வேண்டும் என்று டிசம்பர் 01 அன்று ஒன்றிய அரசின் தொலைத்தொடர்புத் துறை (DoT) உத்தரவிட்டது.
செல்போன்களில் பயன்படுத்தப்படும் IMEI-இன் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கவே சஞ்சார் சாத்தி செயலி பயன்படுத்தப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
‘சஞ்சார் சாத்தி’ எவ்வாறு செயல்படுகிறது?
ஒன்றிய அரசு தொலைந்துபோன மற்றும் திருடப்பட்ட செல்போன்களை கண்டுபிடிக்கவும் போலியான மற்றும் மோசடி அழைப்புகள் குறித்து புகார் அளிக்கவும் சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) என்ற இணையதளத்தை கடந்த 2023 ஆம் ஆண்டு மே 16 அன்று அறிமுகம் செய்தது. இணையதளத்தைத் தொடர்ந்து மொபைல் செயலியை கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி அறிமுகம் செய்தது. இந்த செயலி ஆண்ட்ராய்டு (Andriod) மற்றும் ஐஓஎஸ் (IOS) ஆகிய இரு இயங்கு தளங்களிலுமே செயல்படக்கூடியது.
சஞ்சார் சாத்தி செயலி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து தற்போது வரை மொத்தம் 42,24,985 மொபைல் போன்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், இந்த செயலியின் உதவியோடு நாடு முழுவதும் காணாமல் போன 7,26,791 மொபைல் போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
சஞ்சார் சாத்தி தளத்தில் மொபைல் போன் தொலைந்தது அல்லது திருடப்பட்டது குறித்து ஒருவர் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட செல்போன் உடனடியாக முடக்கப்படும். இந்தச் செயலி IMEI எண்ணை தொலைத்தொடர்புத் துறையின் மத்திய CEIR அமைப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கிறது. அந்த செல்போன் திருட்டு வழக்கில் புகார் செய்யப்பட்டுள்ளதா அல்லது அது கறுப்புப் பட்டியலில் (Blacklisted) இருக்கிறதா என்பதையும் சரிபார்க்கிறது. பின்னர் அந்த செல்போனில் வேறு ஏதாவது சிம் கார்டு பொருத்தப்பட்டாலும் IMEI எண் உதவியோடு குறிப்பிட்ட அந்த செல்போனை பறிகொடுத்தவர்களுக்கும், புகார் கொடுக்கப்பட்ட காவல் நிலையத்திற்கும் தகவல் வரும்.
அதன்படி, இந்த செயலி/இணையதளம் மூலம் அதிகபட்சமாக தெலங்கானாவில் 1,07,014 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் 1,05,714 செல்போன்களும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 89,072 செல்போன்களும் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 1,88,120 பேர் செல்போன்கள் மாயமானதாக இந்த தளத்தில் பதிவு செய்துள்ளனர். இதில் 42,814 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டில் மீட்பு சதவீதம் 36.93 ஆக உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவைப் பொறுத்தவரையில் மீட்பு சதவீதம் 27.76 ஆக உள்ளது.
சஞ்சார் சாத்தி செயலியும் சர்ச்சைகளும்:
இந்த சூழலில் தான் புதிதாகத் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் முன்பே இந்த செயலியை நிறுவி இருக்க வேண்டும். பயன்பாட்டில் உள்ள பழைய மொபைல் போன்களிலும் மென்பொருள் புதுப்பித்தல் மூலம் செயலியைப் பதிவேற்ற வேண்டும் என்றும் கூறி ஒன்றிய அரசு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
மேலும், “மொபைல் போன்களின் பயன்பாட்டின்போது இந்தச் செயலி எளிதில் காணக்கூடியதாகவும், அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும். செயலியின் செயல்பாடுகளை முடக்கவோ, கட்டுப்படுத்தவோ கூடாது. தொலைத்தொடர்புத் துறையின் இந்த வழிகாட்டுதல்கள் 90 நாட்களுக்குள் செயல்படுத்தப்பட வேண்டும். 120 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என்றும் அந்த உத்தரவில் ஒன்றிய அரசின் தொலைத்தொடர்புத் துறை (DoT) தெரிவித்துள்ளது. இதற்கு முன்பும் இதே போன்று, சிம் பிணைப்பு (SIM-binding), சைபர் குற்றங்களைத் தடுக்க அவசியம் என்று தொலைத்தொடர்புத்துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் என்ற அரசின் தற்போதைய உத்தரவு பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. "அரசின் இந்த உத்தரவு சா்வாதிகாரத்தைக் காட்டுவதாக உள்ளதாகவும், குடிமக்களின் தனியுரிமையைப் பறிப்பதாகவும் உள்ளது. குடிமக்களுக்கு தனியுரிமைக்கான உரிமை உண்டு. எனவே 'சஞ்சார் சாத்தி' ஒரு உளவு பார்க்கும் செயலி. இது மிகவும் அபத்தமானது.
சைபர் பாதுகாப்பு தேவைதான், ஆனால் அதற்காக ஒவ்வொரு குடிமகனின் தொலைபேசிக்குள்ளும் நுழையலாம் என்று அர்த்தமில்லை. எந்தக் குடிமகனும் இதை விரும்ப மாட்டார்" எனக் குறிப்பிட்டு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
‘சஞ்சார் சாத்தி’ செயலியை நிறுவுதல் கட்டாயமா? இல்லையா? குழப்பும் ஒன்றிய அரசு!
சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) செயலி குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ‘சஞ்சாா் சாத்தி’ செயலி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில், சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) செயலியை செல்போன்களில் நிறுவுவதும், செயல்படுத்துவதும் கட்டாயமில்லை என்றும், மற்ற செயலிகளைப் போலவே இதனைப் பயன்படுத்துவதோ அல்லது நீக்குவதோ முழுவதுமாக பயனர்களின் விருப்பத்தைச் சார்ந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
देश के हर नागरिक की डिजिटल सुरक्षा हमारी सर्वोच्च प्राथमिकता है। ‘संचार साथी’ ऐप का उद्देश्य है कि प्रत्येक व्यक्ति अपनी निजता की रक्षा कर सके और ऑनलाइन ठगी से सुरक्षित रह सके।
यह एक पूरी तरह स्वैच्छिक और लोकतांत्रिक व्यवस्था है-यूज़र चाहें तो ऐप को सक्रिय कर इसके लाभ ले सकते…
மேலும் ஐபோன்களை தயாரித்து விற்பனை செய்து வரும் ஆப்பிள் நிறுவனத்தின் கொள்கை விதியின்படி, எந்த மூன்றாம் தரப்பு செயலிகள் அல்லது அரசின் செயலிகளை இன்பில்ட்டாக நிறுவாது. அந்த வகையில், ஆப்பிள் நிறுவனம் இந்த உத்தரவை தற்போது ஏற்க மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல், சாம்சங், ஓப்போ, விவோ, ஷாவ்மி உள்ளிட்ட மற்ற நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது.